சச்சின் சதமடித்த போட்டிகளில் இந்தியா வென்றது எத்தனை?

0
346

1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர் கவாஸ்கர்.

1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.

சரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கிய 15 வருடம் 232 நாட்கள் வயதான பதின்பருவ சிறுவன் அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினான்.

முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனை அந்தச் சிறுவனுடையது.

சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுக முதல்தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்வு குறித்த 30 சுவாரஸ்யத் தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

1. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய மண்ணை விட அயல்மண்ணில் அதிக சராசரியை வைத்திருக்கிறார். அயல் மண்ணில் அவரது சராசரி 54.74.

போட்டிகள் ரன்கள் அதிகபட்சம் சராசரி சதங்கள்
இந்தியா 94 7216 217 52.67 22
அயல் மண் 106 8705 248* 54.74 29

2. இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.

3. சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

_101004145_srt5

4. ஒருதின போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 12- வது இடத்தில் இருக்கிறார் சச்சின்.

இவருக்கு முந்தைய இடங்களில் ஜடேஜா, நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான், வெங்கடேஷ் பிரசாத், கபில்தேவ், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், அஜித் அகர்கர், ஜவகல் ஸ்ரீநாத், அணில் கும்ப்ளே ஆகியோர் உள்ளனர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு எட்டாமிடம்.

5. சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது. 25 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

6. ஒட்டுமொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி நூறு சதங்களை விளாசியுள்ளார் சச்சின். இவருக்கு அடுத்தபடியாக 560 போட்டிகளில் விளையாடி 71 சர்வதேச சதங்களை எடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்.

7. சச்சினின் கடைசி ஐந்து சதங்களில் இந்தியாவுக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அவர் நூறாவது சதம் விளாசிய போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

8. சச்சின் டெண்டுல்கர் தனது 35 வயதுக்கு பிறகான கிரிக்கெட் வாழ்வில் அபாரமாக விளையாடியுள்ளார்.

2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 65.21 ஆகவும் ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 52.41 ஆகவும் இருந்துள்ளது.

இந்த காலகட்டங்களில் 104 இன்னிங்ஸ்களில் 21 சதங்களை சச்சின் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 147 போட்டிகளில் 11 சதமும், காலிஸ் 113 போட்டிகளில் 13 சதமும் எடுத்துள்ளனர் என ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம் தெரிவித்துள்ளது.

_100997023_sachin

9. டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 100 சதங்களில் 20 சதங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் எடுத்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின்.

10. உலகக் கோப்பை கிரிக்கட்டில் அதிக சதங்கள் விளாசியவர் மற்றும் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை சச்சினுக்குச் சேரும். 1996ஆம் ஆண்டு மற்றும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

11. ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.

12. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.

13. விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை 1994-ம் ஆண்டு பெற்றார்.

1997-98 காலகட்டங்களில் ராஜிவ் கேல் ரத்னா, 1999-ல் பத்ம ஸ்ரீ, 2008-ல் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.


14. ஐந்து கண்டங்களில் சதமடித்தவர் என்ற பெருமைக்குச் சச்சின் சொந்தக்காரர் ஆவார். ஆசிய மண்ணில் 71 சதங்கள், ஆஸ்திரேலியாவில் 10 சதங்கள், ஆஃப்ரிக்க மண்ணில் 11 சதங்கள், ஐரோப்பாவில் 7 சதங்கள், அமெரிக்க கண்டங்களில் 1 சதம் விளாசியுள்ளார்.

15. சச்சின் தனது கேரியரில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்தது 1998-ம் ஆண்டாகும். மொத்தம் 39 சர்வதேச போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 68.67 என்ற சராசரியுடன் 2541 ரன்களை குவித்துள்ளார் என்கிறது ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம். எனினும் 2010-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு வாய்ந்தது. 2010-ல் 16 போட்டிகளில் 8 சதங்களுடன் 84.09 எனும் சராசரியுடன் 1766 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.

16. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார். கரீபியன் தீவுகளில் அவர் 19 போட்டிகளில் 902 ரன்களை குவித்துள்ளார்.அதே வேளையில் இந்திய மண்ணுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 3300 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார் சச்சின்.

17. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், கென்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடியுள்ளார் சச்சின். இதில் தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக குறைந்த சராசரி (35.73) வைத்துள்ளார். கென்யாவுக்கு எதிராக அதிக சராசரி (107.83) வைத்துள்ளார்.

18. இந்திய அணிக்கு 25 டெஸ்ட் போட்டிகளிலும் 73 ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 23 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் வென்றுள்ளது.

_101004189_srt6

19. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இரட்டைச் சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டைச் சதமும் விளாசியுள்ளார் சச்சின். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் இந்தச் சாதனையை படைத்தார்.

20. சர்வதேச அரங்கில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர் என்ற பெருமை (200 டெஸ்ட்) சச்சினைச் சேரும். இதில் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் காலிஸ் (23). அவரைத் தொடர்ந்து முரளிதரன் (19) , வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்னே (17), ரிக்கி பாண்டிங் (16) ஆகியோர் உள்ளனர்.

21. சர்வதேச அரங்கில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் சச்சின். இதில் 62 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயசூர்யா (48). காலிஸ் (32) உள்ளனர்.

22. இதுவரை 109 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ள சச்சின் 15 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜெயசூர்யா (11), ஷான் பொல்லாக் (9) உள்ளனர்.

23. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டு பார்மேட்டிலும் சேர்த்து அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் (76) தொடர் நாயகன் (20) வென்று முதலிடத்தில் உள்ளார்.

_100997023_sachin

24. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்கு பிறகே சச்சின் முதல் சதத்தை பதிவு செய்தார். அதாவது 1994-ம் ஆண்டு தனது 79-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கன்னி சதம் எடுத்தார்.

25. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1990-ம் ஆண்டு எடுத்தார்.

அவரது முதல் நான்கு சதங்கள் அயல் மண்ணில் எடுக்கப்பட்டவை. இந்திய மண்ணில் முதல் சதத்தை 1993-ம் ஆண்டில் பதிவு செய்தார்.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 165 ரன்களை குவித்தார். சச்சின் சதமடித்து இந்தியா வென்ற முதல் போட்டி அதுவே.

26. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 2010-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 214 ரன்கள் குவித்தார். அப்போட்டியில் இந்தியா வென்றது.

அதன் பின்னர் அவர் நவம்பர் 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை சச்சின் சதமெடுத்த 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை.

27. சச்சின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 2010-ம் ஆண்டு அவரது தலைமையில் இறுதிப் போட்டி வரை மும்பை வந்தது. ஐபிஎல் மூன்றாவது சீசனில் தொடரின் அதிக ரன்கள் அடித்தவருக்கான விருதை சச்சின் வென்றுள்ளார்.

28. ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் 78 போட்டிகளில் 13 அரைசதம் ஒரு சதம் உதவியுடன் 34.83 என்ற சராசரியுடன் 2334 ரன்களை குவித்துள்ளார்.

29. ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு பிறகே சச்சினுக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

1994-ம் வருடம் ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 49 பந்துகளில் 15 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

_101004236_srt7

30. சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை ஆகியயவற்றை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் சச்சினை அன்போடு அழைப்பது குறித்து பிபிசி நேர்காணல் ஒன்றில் சச்சின் பதிலளிக்கையில் ” நான் கிரிக்கெட் கடவுள் இல்லை. நான் களத்தில் பல்வேறு தவறுகள் செய்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன் ஆனால் நான் சாதாரண சச்சின் அவ்வளவே !” எனக் கூறியுள்ளார்.

சுமார் 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த சச்சின் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார்.

சராசரியாக 48.52 ரன்கள் என்ற வீதத்தில் பேட்டிங் செய்துள்ள சச்சின் நூறு சதம் மற்றும் 164 அரைசதம் ஆகியவற்றை குவித்துள்ளார்.

சச்சின் தனது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 27 முறை தொண்ணூறு – நூறு ரன்களுக்கு இடையில் விக்கெட்டை பறிகொடுத்துளார்.

உலகில் வேறு எந்த வீரர் சச்சின் அளவுக்கு சதங்கள் விளாசியதில்லை மேலும் அவர் அளவுக்கு 90-100 ரன்களுக்கு இடையில் அவுட் ஆனதில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.