தலைமறைவானாரா எஸ்.வி.சேகர்? காணொளியில் மன்னிப்புக் கேட்டார்!(காணொளி இணைப்பு)

0
713

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த ஆளுநர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் இந்த சர்ச்சை மறைவதற்குள் பாஜகவை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் விதமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார்.

அவருடைய இந்த பதிவிற்கும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழவே உடனடியாக நீக்கி அதற்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையே பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இழிவான கருத்துகளை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சம்மந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.

சென்னை மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம், எஸ்வி சேகர் மீது புகார் அளித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்வி சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது எஸ்வி சேகர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரை கைது செய்ய முடியவில்லை.

தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இல்லை. இந்த விவகாரம் குறித்து எஸ்வி சேகரின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ பதிவிட்டு அதில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதில் அவர், யாரையும் தரம் தாழ்ந்து பேசி அரசியல் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. யாரையும் ஒருமையிலோ, மரியாதைக் குறைச்சலாகவோ கண்ணியக் குறைச்சலாக பேசுபவன் இல்லை.

என்னுடைய இந்தச் சின்ன தவறை புரிந்து கொள்ள வேண்டி தான் இந்த விடியோ, வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கவே பேசுகிறேன்.

தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவர் தலைமறைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், எஸ்வி சேகர் தற்போது தனது மன்னிப்பை விடியோவாக பதிவு செய்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் வருத்தம் தெரிவிக்கவில்லை மனதார மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.