ராகுல் அதிரடி அரைசதம்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

0
293

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் கிறிஸ் லின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் விளாசினார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 43, ராபின் உத்தப்பா 34 ரன்கள் சேர்த்தனர்.

பஞ்சாப் தரப்பில் பரிந்தர் ஸ்ரண், ஆண்ட்ரூ டை ஆகியோர் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், முஜீப்-உர்-ரஹ்மான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 192 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுல், கெயில் ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டது. எனவே பஞ்சாப் அணிக்கு 13 ஓவர்களில் 125 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதிரடியாக ஆடிய ராகுல் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் பஞ்சாப் அணி 11.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.