காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!

0
387

 

அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது.

இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை சிகிச்சைத் தையல்களால் நோயாளிகளுக்கு பின்னாட்களில் எந்த விதமான உபத்திரவமும் நேராத அளவுக்கு மிகத் திறமையாக தையலிட்டு அறுவை சிகிச்சைக் காயங்களை ஆறச் செய்து விடுவார்கள்.

ஆனால் சில சந்தர்பங்களில் மருத்துவருக்கு தையல் இடுவதில் போதிய பயிற்சியோ, முன் அனுபவமோ அல்லது திறனோ இல்லாத சமயங்களில் அவர்களிடம் அறுவை சிகிச்சை செய்து மாட்டிக் கொள்ளும் நோயாளிகளின் கதி அதோ கதி தான்.

விபத்துக்களின் போது மட்டும் தான் தையல் இடப்படுகிறது என்று சொல்வதற்கில்லை தற்போது பெருகி வரும் மகப்பேறு அறுவை சிகிச்சைகளின் போது கர்ப்பிணிகளுக்கு குழந்தைப் பேற்றின் பின் அடிவயிற்றில் தையலிடப்படுகிறது.

இந்தத் தையல் உறுதியானதாகவும், திறன் வாய்ந்த மருத்துவரால் போடப்பட்டதாகவும் இருந்தால் அந்த இளம் தாய் தனது மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கூட சுகப்பிரசவம் போன்றே ஆனந்தமான அனுபவமாகத் தான் எண்ணிக் கொள்வார். ஆனால், சில தாய்மார்களுக்கு அந்தக் கொடுப்பினை அமைவதில்லை.

கொடுமையான மருத்துவர்கள் கையில் சிக்கி, மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்தபின் தையல் சரியாக இடப்படாததால் அறுவை சிகிச்சைக் காயம் ஆறாமல் ரத்தக் கசிவு, புண்கள், சீழ் வடிதல் என்று பிரசவத்துக்குப் பிறகு தான் அதிகம் துன்பப்படுவார்கள்.

நான் ஏதோ பயமுறுத்துவதற்காகச் சொல்கிறேன் என்று எண்ணி விட வேண்டாம். மகப்பேறு அறுவை சிகிச்சையின் பின் தையல் சரியாக இடப்படாததால் மேற்படி பிரச்னைக்கு உள்ளான பல பெண்களை நான் அறிவேன்.

இதற்கு மருத்துவர்களை மட்டுமே குற்றம் சொல்லி விட முடியாது. சில சந்தர்பங்களில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பெண்கள் தரப்பிலும் அறியாமையினால் உண்டாகும் தவறுகள் நிறைய இருக்கலாம்.

உதாரணமாக மருத்துவர் சுட்டிக் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றாமலோ, அல்லது மருந்துகளை சரிவர உண்ணாமலோ, அறுவை சிகிச்சைக் காயங்களின் மீது தடவப்பட வேண்டிய மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாத காரணத்தாலோ கூட அவர்கள் தங்களுடைய மகப்பேறு அறுவை சிகிச்சை அனுபவங்களை மரண பீதி தந்த அனுபவங்களாக எண்ணிக் கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே தவறு இரண்டு தரப்பிலுமே நேர வாய்ப்பு உண்டு.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் எனில், இனிமேல் விபத்தென்றாலும் சரி, மகப்பேறு அறுவை சிகிச்சையோ அல்லது வேறு ஏதேனும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையோ எதுவானாலும் சரி சிகிச்சைக் காயங்களை எண்ணியும், அதில் இடப்படும் தையல்களை எண்ணியும் நோயாளிகள் பயந்து கொள்ளத் தேவையில்லை.

கிழிந்த காகிதத்தைப் பசையால் ஒட்ட முடிவதைப் போல இனி அறுவை சிகிச்சைக் காயங்களையும் சர்ஜிக்கல் குளூ என்று சொல்லப்படக் கூடிய அறுவை சிகிச்சைப் பிசின் கொண்டு எளிதில் ஒட்டி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதற்கான காணொளி…

ஆம்… அப்படி ஒரு அதிசயப் பிசினை மருத்துவர்கள் தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். வெறும் 60 நொடிகளில் இந்த சர்ஜிக்கல் குளூவைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக் காயங்களை ஒட்டச் செய்ய முடியுமாம்.

மெத்தா கிரைலயோல் ட்ரொப்போ எலாஸ்டின் சுருக்கமாக மெட்ரோ என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் இந்த ஹைபிரிட் எலாஸ்டிக் புரோட்டினை உள்காயம் மற்றும் வெளிக்காயங்களை ஒட்டப் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

அறுவை சிகிச்சைக் காயங்களை கண் மூடித் திறக்கும் நேரத்தில் நிமிடத்தில் ஒட்டச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு என்று அந்த மருத்துவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த சர்ஜிக்கல் குளூவின் சிறப்பு அது அதிவேகமாக காயங்களை ஒட்ட வைத்து மறைக்கும் என்பது மட்டுமல்ல, அப்படி ஒட்டும் போது மனிதத் தோலின் இயல்பான சுருங்கித் தளரும் இயல்பில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது தான்.

அதுமட்டுமல்ல இந்த மெட்ரோ குளூவை காயங்களின் மேல் அப்ளை செய்யும் போது அது உடனடியாக வழுக்கிச் செல்லாமல் அப்படியே ஒரு ஜெல் போல படிந்து ஒட்டிக் கொள்வதும் இதன் சிறப்பியல்புகளில் ஒன்று என்கிறார்கள் இதைக் கண்டறிந்த சர்வதேச மருத்துவக் குழு நிபுணர்கள்.

தற்போது விலங்குகளில் மட்டுமே ஆய்வு ரீதியாகப் பயன்படுத்தி வெற்றி காணப்பட்டுள்ள இந்த சர்ஜிக்கல் குளூவை வெகு விரைவில் மனிதர்களிடையேயும் பயன்படுத்தி வெற்றி காண திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதற்கட்டமாக பன்றியின் நுரையீரல் காயத்தை சீராக்க இந்த சர்ஜிக்கல் குளூவைப் பயன்படுத்தி வெற்றி கண்ட காணொளியொன்றை மருத்துவ நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ளது. வெகு விரைவில் இந்த தொழில்நுட்பம் மனிதர்களிலும் பயன்படுத்தப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கார் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள், போர்க்காயங்கள், அறுவை சிகிச்சை காயங்கள் என அத்தனை காயங்களுக்கும் உடனடி நிவாரணம் தரக்கூடிய விதமாக இந்த குளூ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ஜிக்கல் ஜெல் மேலும் மேம்படுத்தப்பட்டு மனிதர்களுக்குப் பயன்படுத்தப் படும் நாள் வரின் இது மிக நிச்சயமாக நம் அனைவரது முதலுதவிப் பெட்டியிலும் இடம் பெற வேண்டிய முக்கியமாக உயிர் காக்கும் மருந்துகளில் ஒன்றாக இருக்கும் என இதைக் கண்டறிந்த மருத்துவர்கள் குழு கூறுகிறது.

கூடிய விரைவில் இந்த ஜெல்லை மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பார்த்து வெற்றிகண்ட பின் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கூட கிடைக்கக் கூடிய பொருளாகச் செய்யவிருக்கிறார்களாம்.

இந்த ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் ஜர்னலில் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டே இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளை உலக அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டிருந்தன.

பல்லாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் விளைவாக கண்டறியப்பட்ட அறிய கண்டுபிடிப்பு இது என்கிறார்கள் இதைக் கண்டறிந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக்குழு மருத்துவர்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.