‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..?’- அமிர்தலிங்கம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 141)

0
2794

1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது.

அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது இருந்தது.

அது மட்டுமல்லாமல் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலயே இரத்தம் தோய்ந்த தேர்தலாகவும் அது இருந்தது.

தென்னிலங்கையில் ஜே.வி.பியினர் தேர்தல் நிராகரிப்பு இயக்கம் நடாத்திக்கொண்டிருந்தனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் ஜே.வி.பியின் இராணுவப் பிரிவினரின் துப்பாக்கிகள் குறிபார்த்துக்கொண்டிருந்தன.

ஜே.வி.பி உறுப்பினர்கள் வேட்டையாடுவதென்ற போர்வையில் தமக்கு எதிரானவர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் திட்டமிட்டு ஒழித்துக்கட்டியதும் தனிக் கதை..

தென்னிலங்கையில் வாக்குச் சாவடிகள் சிலவும் ஜே.வி.பியினரால் தாக்கப்பட்டன.

வாக்குச் சாவடிகள் தாக்கப்பட்டதையும் வாக்களிப்பு நேரப் பதற்றத்தையும் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அதிகளவான வாக்குகளையும் தாராளமாகவே போட்டுத் தள்ளிவிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் அதிகாரப் பலமும், குறுக்கு வழிகளில் கைதேர்ந்த குண்டர்களின் பலமும் இருந்தது. இரண்டும் கைகோர்த்து நின்ற வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் நிறைந்து வழிந்தன.

இந்தியாவின் திட்டம்.

வடக்கு-கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்கள் வாக்களிப்பு தினத்தன்று ஆயுதங்களுடன் களத்தில் குதித்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கில் அதிகளவானோர் வாக்களிப்பில் பங்பற்றியதாகக் காட்டவேண்டும். அதேவேளை, ஜனநாயகத் தேர்தலாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.

வாக்களிப்பு தினத்தன்று வாக்களிக்க வராமல் வீடுகளில் இருப்போரை எப்படியாவது வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்பதுதான் இந்தியப் படையினரின் விருப்பமும்.

இன்னொரு இரகசியத் திட்டமும் இந்தியப் படையினரிடம் இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்கள் தேர்தல் விதிகளுக்கு முரணாக நடப்பதையும் கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும்.

அதேநேரம் அக்கட்சிகள் மட்டும் தேர்தலில் அமோகமான வெற்றியைப் பெற்றுவிட்டால் நடைபெற்றது போலித் தேர்தல் என்ற பிரசாரமும் எழுந்துவிடும்.

குத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டனர் இந்தியப் படையினர். அதன்படி தம்முடன் இணைந்து நிற்கும் இயக்கங்களும், சுயேட்சையாகப் போட்டியிடும் ஈரோஸ் குழுவினரும் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்படி தேர்தல் முடிவுகள் அமையவேண்டும் என எண்ணினர்.

அதற்கு என்ன வழி…??

குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் இருக்கின்ற இந்தியப் படையினரே ஈரோஸ் சின்னத்தினை முத்திரை குத்தி பெட்டிகளில் போட்டுவிடுவதுதான் ஒரேவழி.

தம்மோடு இணைந்துநின்ற இயக்கங்களைவிடவும் ஈரோஸ் அமைப்பு வெற்றிபெற வேண்டும் என்பதே இந்தியத் தரப்பின் விருப்பம்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியா நடாத்தியது போலித் தேர்தல் என்னும் கருத்து மேலோங்கியது.

வடக்கு-கிழக்கில் இந்தியத் தரப்பினர் சாதித்தது ஒன்றுமில்லை. அங்கு இந்திய அரசும் அவர்களின் விருப்பப்படி ஆடும் பொம்மை அரசாங்கமும்தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

அதனால்தான் ஈரோஸ் சார்பான வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தம்மால் முடிந்த காரியங்களை செய்யத் திட்டமிட்டனர் இந்தியப் படையினர்.

இதனால் ஈரோஸிற்குக் கிடைத்த பலன்கள் ஏராளம். புலிகள்தான் ஈரோஸ் பட்டியலில் போட்டியிடுகிறார்கள் என்று ஏனைய இயக்கங்கள் செய்த பிரச்சாரம் காரணமாக, புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.

ஜனநாயகத் தேர்தலாக வெளியுலகிற்குக் காட்ட வேண்டும் என்ற இந்தியத் தரப்பின் விருப்பம் காரணமாக இந்தியப் படையினரின் ஆதரவும், பாதுகாப்பும் ஈரோஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்தது.

வாக்களிப்பு தினத்தன்று இந்தியப் படையினரே ஈரோஸ் சின்னத்திற்குப் போட்ட வாக்குகளும் சேர்ந்தன.

ஈரோஸிற்கு இருந்த நல்ல பெயரும், ஏனைய இயக்கங்கள் மீதான மக்களின் வெறுப்பும் ஈரோஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாறின.

இத்தகைய சாதகங்கள் ஏனைய இயக்கங்களுக்கு இருக்கவில்லை.

அதிகார பலமும், ஆயுத பலமும், இந்தியப் படை தமது அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாது என்ற துணிச்சல் போன்றவையும்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களுக்குச் சாதகமாக இருந்தன.

கூட்டணியின் நிலைதான் பரிதாபம். பொதுப்பட்டியல் வேட்பாளர்கள் கூட்டணியின் பெயரில், கூட்டணியின் சின்னத்தில்தான் போட்டியிட்டனர். ஆனால் பொதுப்பட்டியலில் இருந்த கூட்டணி வேட்பாளர்களால் பிரச்சாரம் செய்ய முடியாத சூழலே காணப்பட்டது.

அவர்களிடம் ஆயுத பலமோ அதிகார பலமே இருக்கவில்லை.

கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். மிதவாதிகளின் பிரசன்னம் பாராளுமன்றத்தில் இருந்தால்தான் தீவிரவாதிகளை ஒருவரையறைக்குள் வைத்திருக்கலாம் என்றெல்லாம் இந்தியத் தரப்பு விரும்பியது உண்மை.

ஆனால் இந்தியப் படையினருடன் கூட்டணியினருக்கு அத்தகைய நெருக்கம் இருக்கவில்லை. இந்தியப் படையினரின் உதவியுடன் தேர்தலில் ஏனைய இயக்கங்களுடன் ஏட்டிக்குப் போட்டியாக நின்று செயற்படும் தொண்டர்களும் கூட்டணியினரிடம் இருக்கவில்லை.

கூட்டணிக்கு என்று மட்டும் இருக்கும் வாக்கு வங்கி கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் என்ற எண்ணம் இந்தியத் தரப்பிடம் இருந்தது.

தேர்தல் நேரத்தில் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தைப் பேட்டி காணச்சென்றார் ஒரு நிருபர்.

dharman18071607

“இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக கூட்டணியினரும் ஒரு காரணம் என அமிர்தலிங்கம் கூறினார்.

புலிகளைப் பற்றியும் நிருபர் கேள்ளியெழுப்பினார்.. ‘அவர்கள் தங்கள் பாதையில் செல்கிறார்கள் நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம’; என்றார் அமிர்தலிங்கம்.

பின்னர் நிருபரும் அமிர்தலிங்கம் அவர்களும் பேட்டிக்கு புறம்பாக தனிப்பட்ட ரீதியில் உரையாடிக்கொண்டிருந்தனர்.

‘உங்களைத் துரோகிகள் பட்டியலில் புலிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலையும் நிராகரிக்குமாறு கூறியிருக்கிறார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா’ என்று கேட்டார் நிருபர்.

அமுதரிடமிருந்து ஒரு புன்னகை உதிர்ந்தது. அடுத்து அமுதர் செய்த காரியத்தால் நிருபரே அசந்துபோனார்.

அமுதரின் கையில் பிஸ்டல் ஒன்று இருந்தது. அதனைக் காட்டிக்கொண்டே அமுதர் சொன்னார், ‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். தம்பிமாருக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..?’”

நாங்கள் ஆயுதமே ஏந்தவில்லையென்று கூட்டணியினர் சிலர் இப்பொழுது கூறிவருவது நினைவில் வருகிறது.

Tamil Tiger fighters in and around Jaffna in The north of Sri Lanka during their war against the Sri Lankan Army and The Indian Army.The war has lasted for over thirty years and is one of the worlds longest conflicts.The Tamils are fighting for an Independent Tamil homeland in the north of the Island.Many of the soldiers are children from 8 to 15 years old.All Tamil Tigers have a poison capsule around their necks to prevent them being captured alive.

ஆயுத முனையில்

வடக்கு-கிழக்கில் வாக்களிப்பு தினத்தன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களின் உறுப்பினர்கள் சுறு சுறுப்பாகச் செயற்பட்டனர்.

வாக்களிக்காமல் வீடுகளில் இருந்தவர்கள்களை ஆயுத முனையில் தங்கள் வாகனங்களில் ஏற்றி வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசென்றனர்.

தங்கள் தங்கள் இயக்க வேட்பாளர்களின் இலக்கத்தையும் கூறி, உதயசூரியன் சின்னதுக்கு வாக்களிக்குமாறு கூறி வாக்குச் சாவடிக்குள் அனுப்பிவைத்தனர்.

விருப்பு வாக்குகளை அதிகம் பெறுவது யார் என்பதில்தான் கூட்டாகப் போட்டியிட்ட இயக்கங்களுக்குள் கடும்போட்டி.

மட்டக்களப்பில் பல வாக்குச் சாவடிகளில் கட்டுக் கட்டாக வாக்குச் சீட்டுகளில் முத்திரை குத்தி உள்ளே தள்ளினர்.

கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு மட்டக்களப்பில் கூட்டணிச் சின்னத்தில் போட்டியிட்ட மூன்று இயக்கங்களும் செயற்பட்டன.

இதற்கிடையே இன்னொரு வேடிக்கையும் நடந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களால் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட வாக்காளர்கள் ஈரோஸ் சின்னமான வெளிச்சவீட்டின் மீது புள்ளடியிட்டுவிட்டு வந்துவிட்டனர்.

‘அம்மா பாத்தத்தானே புள்ளடி போட்டனீங்கள்…?’
‘ஓம் தம்பி’
‘எந்தச் சின்னம்..?’
‘எங்களுக்குத் தெரியதே, உதயசூரியன்தான்’
ஆனால் அவர்கள் வாக்குப் போட்டது வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு.

யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு, நல்லூர் போன்ற பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாக இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அப்பகுதி மக்களைக் கட்டாயப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

அப்பகுதிகள் புலிகள் இயக்க கோட்டைகளாக இருந்தவை. அழைத்துவரப்பட்ட அத்தனைபேரும் வெளிச்சவீட்டிற்கு நேரே புள்ளடி போட்டுவிட்டுப் போய்விட்டனர்.

இவ்வாறுதான் பல பல பகுதிகளில் நடந்தது. ஆயுதமேந்தி நிற்பபோருக்கு எதிராக வெளிப்படையாகக் காட்டமுடியாத எதிர்ப்பை புள்ளடி மூலம் காட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்தாக் கள்ள வாக்குகள் அதிகம் போடப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ இயக்கங்கள்தான் அதில் முன்னின்றன.

ரெலோ இயக்க வேட்பாளரான ஜனாவுக்கு மட்டக்களப்பில் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கு இருந்ததையும் மறுக்கவியலாது. அதேநேரம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாகப் போட்டியிட்ட சாம். தம்பிமுத்துவுக்கும் செல்வாக்கு இருந்தது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்களுக்கு கிடைத்தவைநெல்லாம் கள்ள வாக்குகள் என்று அர்த்தமில்லை. ஆனாலும் கணிசமான கள்ள வாக்குகள் அங்கு போடப்பட்டன என்பதே உண்மை.

கௌரவப் பிரச்சினை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமிர்தலிங்கம் போட்டியிட்டதால் அவரைத் தோற்கடித்து இந்திய அரசிற்குத் தமது செல்வாக்கைக் காட்டவேண்டும் என்பது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் முக்கிய குறியாக இருந்தது.

வடக்கு-கிழக்கு மாகாண சபையில் தாம் ஆளும் கட்சியாக இருந்தும், கூட்டணியின் பதாகையின் கீழ் தம்மைப் போட்டியிடுமாறு இந்தியா கூறியமை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது.

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் வரதராஜப்பெருமாள்

index1அமிர்தலிங்கம் தேர்தலில் வென்று அவரது குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கினால், தன்னுடைய குரல் அமிங்கிவிடுமோ என்ற அச்சமும் வரதராஜப்பெருமாளுக்கு இருந்திருக்கக்கூடும்.

ஏனெனின் தன்னுடைய பலம் என்ன அமிர்தலிங்கத்தின் பலம் என்னவென்று அறிந்தவர் வரதராஜப்பெருமாள்.

யாழ் மாவட்டத்தில் தமக்குக் கணிசமான ஆசனங்கள் கிடைக்கும், கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றே ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ இயக்கங்கள் நம்பியிருந்தன.

யாழ் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த போது நடந்த சுவைவாயான உரையாடலொன்று உதாரணம்

யாழ் அசோக ஹோட்டலில் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் முடிவை அறியக் கூடியிருந்தனர்.

பொதுப்பட்டியலில் ரெலோ சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவர் சட்டத்தரணி சிறிகாந்தா. அவர் நல்ல பேச்சாளர். ஒரு காலத்தில் சுயாட்சிக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்துசென்று தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் முன்வைத்த கட்சிதான் தமிழர் சுயாட்சிக் கழகம்.

அசோகா ஹோட்டலில் ஏனைய வேட்பாளர்கள் இருந்த பகுதிக்குள் வந்த சிறிகாந்தாவின் கண்ணில் முதலில் பட்டவர் மாவை சேனாதிராஜா. அவர் பொதுப்பட்டியலில் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்.

யாழ் மாவட்டத்தில் பொதுப்பட்டியலில் நின்றவர்களில் கூட்டணியைச் சேர்ந்த எவரும் வெற்றிபெறப் போவதில்லை என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். அந்தளவு பொதுப்பட்டியலுக்குள்ளேயே அவர்களை ஓரம் கட்டி வைத்திருந்தன மூன்று இயக்கங்களும்.

மாவை சேனாதிராஜாவைப் பார்த்ததும் சிறிகாந்தா சிரிப்பை அடக்கியபடி ‘தம்பியும் வருவீர் போலதான் கிடக்கு’ என்றார். அங்கிருந்த வேட்பாளர்கள் சிறிகாந்தா ஜோக் விடுகிறார் என்று தெரிந்ததால் சிரிப்பை அடக்க சிரமமாகிவிட்டது.

யாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

சிறிகாந்தாவும் தோற்றுப் போனார் மாவை சேனாதிராஜாவும் தோற்றுப் போனார்.

முடிவு வெளியான பின்னர் சிறிகாந்தாவைப் பார்த்து மாவை சேனாதிராஜா கேட்டார் ‘அண்ணரும் வரேல்லைப்போல கிடக்கு…!

முடிவுகள்.

யாழ் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் கூட்டணியின் சார்பில் பொதுப்பட்டியலில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களுக்குத்தான் சாட்டையடியாக அமைந்தன.

யாழ் மாவட்டத்தில் ஈரோஸ் ஒன்பது ஆசுனங்களை வென்றது. கூட்டணி மூன்று ஆசனங்களை மட்டும் கைப்பற்றியது. அந்த மூன்று பேரில் கூட்டணி உறுப்பினர்கள் எவருமில்லை.

சுரோஸ் பிரமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), க.யோகச்சங்கரி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) க நவரத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே வெற்றிபெற்ற மூவருமாவர்.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் சுதந்திரமாக நடந்திருந்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மூன்று ஆசனங்களைப் பெற முடிந்திருக்குமோ என்பது கூடச் சந்தேகம்தான்.

ஈரோஸ் யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அவற்றில் குறிப்பிட்ட வீதமானது இந்தியப் படையின் உபாயத்தில் கிடைத்தவை.

இந்தியப் படையின் உதவியின்றியே ஈரோஸ் யாழ் மாவட்டத்தில் இன்னும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்பார்த்தது நடந்தது. சொற்ப விருப்பு வாக்குகள் வித்தியாசத்தில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்தார். ஆனால் கூட்டணிப் பட்டியலில் போட்டியிட்ட கருணாகரன் (ஜனா) ரெலோ சாம் தம்பிமுத்து (ஈ.பி.ஆர்.எல்.எஃப்), பிரின்ஸ் காசிநாதர் (ஈ..பி.ஆர்,எல்.எஃப்) ஆகியோர் வெற்றிபெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈரோஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

மட்டக்களப்பில் கள்ள வாக்குகள் இல்லையென்றால் அமிர்தலிங்கம்; நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.

வன்னியில் இரண்டு ஆசனங்களைக் கூட்டணி கைப்பற்றியது. இராஜகுகனேஸ்வரன் (ஈ.பி.ஆர.எல்.எஃப்), அந்தனி இமானுவேல் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோரே அங்கு வெற்றிபெற்றனர்.
அதிர்ச்சி விடயம் என்ன தெரியுமா?

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம் இருந்தது திருமலையில்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆரவாரமான நடவடிக்கைகள் கொடிகட்டிப் பறந்ததும் திருமலையில்தான்.

ஆயிரக்கணக்னோருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்று பட்டியில் காட்டியதும் திருமலையில்தான்.

அப்படியிருந்தும், கள்ளவாக்குகளின் புண்ணியத்தில் கூட திருமலை மாவட்டத்தில் ஒரு ஆசனங்களைக் கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஈரோஸ் அங்கு இரண்டு ஆசனங்களை வென்றது. அங்கு ஈரோசுக்காக இந்தியப் படையினர் கூடப் பெரிதாக உதவிசெய்யவில்லை. புலிகள் சார்பான வாக்குகளும், திருமலையில் மூதூர் போன்ற பகுதிகளில் ஈரோஸ் உறுப்பினர்கள் செய்திருந்த அரசியல் வேலைகளும்தான் வெற்றிக்குக் காரணமாகின.

சலுகைகளும், ஆரவாரங்களும் அங்கு மக்களால் நிராகரிக்கப்ட்டன. திருமலை மக்கள் வழங்கிய தெளிவான தீர்ப்பால் ஆடிப்போனது ஈ.பி.ஆர்.எல்.எஃப்…

அடுத்தகட்ட சுவாரசியங்கள் வரும்வாரம்

(தொடர்ந்து வரும்)

விறுப்பு விறுப்பு அரசயியல் தொடர்
எழுதுவது அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்

ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 140)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.