பாரதப் போருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டது

0
253

பாரதப் போருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டது.

இறுதி நேரத்திலாவது போரை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்படும் என்று பாண்டவர் தரப்பு நினைக்கிறது.

நல்லவர்களின் சிந்தனை எப்போதும் இப்படித்தான் இருக்கும். மற்றவர்கள் தீங்கு செய்தாலும் அவர்களும் வாழட்டும் என்ற உயர்ந்த பண்பு நல்லவர்களிடம் இருப்பதால் தான் இந்த உலகம் வாழ்கிறது.

எனினும் அதர்மம் வெல்வது போன்ற தோற்றப்பாட்டை காட்டி நிற்கும். ஈற்றில் தர்மமே வெல்லும்.இதை நாம் கூறும் போது, அதர்மம் தானே வெற்றி பெற்று வருகிறது.

பொய்யும் புரட்டும் மோலோங்க எல்லாவற்றையும் கீழ்த்தள்ளி விடுகிறது என்பது நியாயமாயினும், தர்மத்தின் வெற்றி என்பதை யாராலும் தடுத்து விட முடியாது என்பது சத்தியமானது.

இவை ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயம் தெரியாத ஓர் அரசியல் தரப்பாக செயற்பட்டு வருகிறது.யாரைப் பிடித்தும் பதவியை எடுத்து விட்டால், சரிதானே என்ற அகந்தையில் கூட்டமைப்பின் ஒரு சில முக்கியஸ்தர்கள் செயற்படுகின்றனர்.

அத்தகையவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கிறது. எனவே தாம் எதை நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்ற மமதை அவர்களிடம் ஏற்பட்டு விட்டது.

கூட்டமைப்பின் இதர கட்சிகள் நியாயம் உரைக்கத் தெரியாதவையாக உள்ளன.இதனால் கூட்டமைப்பின் எதிர்காலம் எப்படியாகும் என்ற கேள்வி இப்போதே வலுப்பெறத் தொடங்கி விட்டது.

இந்த ஆண்டுக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்ற அடிப்படையில், அடுத்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரியப்படுத்தியுள்ளார்.

அடுத்த சந்தர்ப்பம் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பது அவருடைய கருத்து.

அது கூட்டமைப்பின் கருத்தல்ல என்று யார் கூறினாலும் அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது தான் நடைமுறைக்கு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது யாழ்.மாநகர சபை வேட்பாளர் ஆர்னோல்ட் என சுமந்திரன் அறிவித்திருந்தார்.அதனை மறுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிக்கை விட்டார்.

எனினும் ஒரு கட்சித் தலைவரின் அறிக்கை தோற்று பேச்சாளரின் அறிவிப்பு வெற்றி பெற்ற ஒரு புதிய வரலாறுதான் கூட்டமைப்பில் பதிவாகியது.

எனவே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியபடி அடுத்த தேர்தலில் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்பதே உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதை அழித்து எழுதுவதற்கு கூட்டமைப்பில் எந்தக் கொம்பனும் இல்லை என்பதால், எம்.ஏ.சுமந்திரன் கூறிய முதலமைச்சர் குறித்த விடயத்தில், தமிழ் மக்கள் ஒரு சரியான முடிவை எடுப்பார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்கு நாம் கூறமுடியும்.

– Valampuri

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.