இந்த கிளி வருங்காலத்தில் பெரிய மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆனாலும் ஆகலாம்!

0
509

பாராகீத் வகையைச் சேர்ந்த இந்தக் கிளி வருங்காலத்தில் மிகப்பெரிய மிமிக்ரி ஆர்டிஸ்டாக ஆனாலும் ஆகலாம். அவ்வளவு அழகாக அட்சர சுத்தமாக பிற விலங்குகளையும், பறவைகளையும் இது மிமிக்ரி செய்கிறது.

அதற்காக நீங்கள் தரவேண்டிய கூலி ஒரு வார்த்தைக்கு ஒரு நெல் அல்லது கோதுமை அல்லது ஏதாவதொரு பழக்கொட்டையாக இருக்கலாம்.

கிளியின் பாதுகாவலர் அப்படி எதையோ தான் அதன் வாயில் நொடிக்கொருமுறை திணித்து அதைக் கொஞ்சிக் கொஞ்சிப் பேச வைக்கிறார் இந்த காணொளியில்.

கிளிகள் கற்றுக் கொடுத்தால் பேசும், தினமும் தொடர்ந்து முறையாகப் பயிற்சி அளித்தால் நிறைய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு பேசும் என்பதெல்லாம் ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விஷயங்கள் தான்.

என்ன ஒரு கொடுமை எனில் இது கூட ஒருவிதத்தில் அந்தக் கிளிகளை தொல்லைப் படுத்தும் விஷயம் தான்.

காடுகளிலும் வயல்களிலும் சுதந்திரமாக சுற்றித்திரிய வேண்டிய கிளிகளைப் பிடித்து வந்து வீட்டுக்குள் அல்லது தோட்டத்தில் கூண்டுகளில் அடைத்து வைத்து அதைப் பேசப் பழக்கி வந்து போகும் விருந்தினர்களுக்கெல்லாம் அதைப் பேசச் சொல்லி படம் காட்டி… அடேயப்பா நினைத்துப் பார்க்கவே அலுப்பாக இருக்கிறது.

இப்படி ஒரு பொழுது போக்கை மனிதர்கள் பலநூறு வருடங்களாகப் ப்ரியமாகச் செய்து வருகிறார்கள்.

இந்தக் கிளியை பேச வைத்து ரசிப்பதைக் காட்டிலும் அதைப் பறக்க விட்டு ஆனந்தமாக வேடிக்கை பார்த்தாலும் நன்றாகத் தான் இருக்கும்.

விசா கார்டு விளம்பரமொன்றில் பறவைகளைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று காட்டுவார்கள் முன்பு. ரிச்சர்ட் கியர் நடித்த அந்த விளம்பரம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.
அதற்கான காணொளி;

வளர்ப்பு மிருகங்களோ, பறவைகளோ அதை வளர்ப்பவர்களுக்கு ஆனந்தத்தைத் தரலாம்.

ஆனால்; ஏதோ ஒரு வகையில் நாம் அவற்றின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறோம், அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மட்டும் ஏனோ மனிதர்களுக்குப் பல நேரங்களில் வருவதில்லை.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.