ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவளித்து தானும் சாப்பிட்ட கலெக்டர்

0
599

கரூர் அருகே ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் அன்பழகன் தான் கொண்டு வந்த உணவை மூதாட்டிக்கு அளித்து, தானும் அங்கேயே அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் என்றால் மாவட்டத்தின் அதிகார மையங்களை சரியான முறையில் கொண்டு செல்வதோடு அனைத்து அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.

அதேவேளையில் மனித நேயத்தையும் மற்றவர்களுக்கு கற்றுத்தரும் மனப்பாங்கும் தங்களுக்கு உள்ளது என்பதை தனது செயலால் நிரூபித்துள்ளார் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன்.

கரூர் அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 85). இவரது மனைவி ராக்கம்மாள் (80). வயதாகி விட்டதால் ராமரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. மேலும் படுத்த படுக்கையாகி விட்டார்.

மிகவும் ஏழ்மை நிலையில் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் தனியாக வசித்து வந்தனர். உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

அந்த பகுதி பொது மக்கள் அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த போதிலும், அவர்கள் ஆதரவின்றி தவித்து வருவது பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது, சின்னமநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் மனு அளிக்க சென்றிருந்தனர்.

அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தது மட்டுமில்லாமல், தங்களது கிராமத்தில் மூதாட்டி ராக்கம்மாள் கணவருடன் ஆதரவின்றி தவித்து வருவது குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.

உடனே இது பற்றி விசாரிப்பதாக பொது மக்களிடம் தெரிவித்த கலெக்டர் அன்பழகன், சம்பவத்தன்று மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் பங்கேற்க சென்றார்.

அப்போது வழியில் சின்னமநாயக்கன்பட்டிக்கு சென்று மூதாட்டி ராக்கம்மாளையும் சந்தித்து விட்டு செல்வது என முடிவு செய்த அவர், தனது வீட்டில் உள்ள உணவையும் கையோடு எடுத்து சென்றார்.

இதையடுத்து தனது கார் டிரைவரை ராக்கம்மாள் வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். அங்கு கலெக்டர் அன்பழகன் சென்றதும், ராக்கம்மாள், கலெக்டர் என்று தெரியாததால் அவரை யாருய்யா நீ? என்று கேட்டுள்ளார்.

உடனே அவரை அமர வைத்த கலெக்டர் அன்பழகன், நான் கலெக்டர் என்றும், தங்களது ஏழ்மை நிலையை கண்டு உதவிகள் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார்.

பின்னர் தான் கொண்டு வந்த உணவை, ராக்கம்மாளுக்கு பரிமாறியதோடு, அவரும் அருகிலேயே தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.

தன்னை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கலெக்டர், தனக்கு உதவி செய்ய வந்திருப்பதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டதோடு, கலெக்டருடன் புகைப்படம் எடுத்து கொள்ளவும் விரும்பினார். அதன் படி கலெக்டரும், ராக்கம்மாளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் ராக்கம்மாளுக்கு மாதந்தோறும் அரசின் உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும் வகையில், அதற்கான ஆணையையும் அங்கேயே வழங்கினார்.

அதனை பெற்ற ராக்கம்மாள், கலெக்டரின் கையை பிடித்து நன்றி தெரிவித்து கொண்டார். இதனிடையே ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு கலெக்டர் வந்திருப்பதை அறிந்த பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து, கலெக்டர் செய்த உதவியை பார்த்து பாராட்டினர்.

இது பற்றி கலெக்டர் கூறும் போது, முதுமை நிலையில் உடலுழைப்பு செய்து பிழைப்பு நடத்த இயலாத ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குகிறது.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் பணியாற்றும் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயிகளை, கலெக்டர் அன்பழகன் தனது அறைக்கு நேரில் அழைத்து சென்று மனுவை வாங்கினார்.

தற்போது மூதாட்டி வீட்டிற்கு நேரில் சென்று உதவித் தொகை ஆணை வழங்கிய கலெக்டரின் பண்பும், மனித நேயமும் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.