வருசப்பிறப்புக்கு அப்பா வருவார் – மைத்திரியின் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கும் பிஞ்சுகள்!

0
805

தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆனந்தசுதாகரனின் இரு பிள்ளைகளும் , தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

அது தொடர்பில் ஆனந்தசுதாகரனின் மூத்தமகனான கனிதரன் தெரிவிக்கையில் ,

நாங்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து எங்கள் அம்மா உயிரிழந்து விட்டா , அப்பாவை சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டோம். அவர் தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என மூத்தமகன் தெரிவித்தார்.

அதேவேளை இளையமகளான சங்கீதா தெரிவிக்கையில் ,

நாங்கள் அப்பாவை விடுதலை செய்ய கேட்டோம் ஜனாதிபதி சித்திரை புதுவருடத்திற்கு முதல் விடுவதாக கூறியுள்ளார். புது வருடத்திற்கு அப்பா எங்களிடம் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த கிருஷ்ணா தெரிவிக்கையில் ,

சகோதரன் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்தோம். எமது போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் பெரும் ஆதரவு தந்திருந்தார்கள்.

ஜனாதிபதியை நேற்றைய தினம் வடக்கு கிழக்கு இளையோர் நாம் நேரில் சந்தித்து , நாம் சேகரித்த கையெழுத்துகளை ஜனாதிபதியிடம் கையளித்து , விடுதலையை வலியுறுத்தி இருந்தோம். ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் வந்திருந்தது.

அதேவேளை சகோதரனின் விடுதலையை சிலர் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்த முனைகின்றார்கள்.

சகோதரனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்தே போராடினோம். எனவே ஒரு சிலர் தமது சுயலாபத்திற்கு அதனை பயன்படுத்த முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று ஆனந்தசுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும் உதவ பலர் முன்வந்துள்ளனர்.

தற்போது அந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கே அனைவரும் உதவ வேண்டும். அதேவேளை ஆனந்த சுதாகரன் சிறையில் இருந்து மீண்டு வந்தால் அவரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.