இந்த வார (மார்ச் 16 – மார்ச் 22) ராசி பலன்கள்!!

0
848

 இந்த வார (மார்ச் 16 – மார்ச் 22) ராசி பலன்களை  கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடையுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

முன்னேற்றமான வாரம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் மதிப்பும் கௌரவமும் உயரும். வம்பு, வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்புகள் கைகூடும். மேலதிகாரிகள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.

வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். அதேசமயம் கடன் வாங்காதீர்கள்.

விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலன்களை அனுபவிப்பீர்கள். மேலும் விவசாயப் பணிகளில் கவனமாக இருக்கவும். மற்றபடி கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த மதிப்பு கிடைக்கும்.

அதோடு புதிய ஒப்பந்தங்கள் நாடி வரும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். அதோடு விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களும் உதவுவார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று “கந்த சஷ்டி கவசம்’ படித்து முருகப்பெருமானை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 16,17.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் தட்டுத் தடுமாறிப்போகும். இதனால் வீண் அலைச்சல்களும் உடல் சோர்வும் உண்டாகும். வார இறுதியில் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு மற்றும் தொழில் மாற்றத்திற்கு உகந்த வாரம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும்.

மறைமுகப் போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறுவார்கள். எனவே, யாரையும் நம்ப வேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். சக கலைஞர்களைஅனுசரித்து நடந்து கொண்டு பிரச்னைகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். எனவே நிதானம் தேவை. மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 16,18.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அனுகூலமான வாரம். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் மூலம் திடீர் லாபம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானமும் படிப்படியாக வளரும். வியாபாரிகள் அதிக செலவு செய்ய நேரிடும்.

எனவே தேவையான சரக்குகளை மட்டுமே வாங்கி வியாபாரம் செய்யவும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். இதனால் புதிய குத்தகைகளை எடுக்கலாம்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் புகழ் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதையும் யோசித்துச் செய்யவும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை தீபமேற்றி வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17,18.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த வாரம் சற்று செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் சிறிது காலதாமதம் ஏற்படும். உஷ்ண ஆதிக்க உபாதைகளும் வயிற்று வலியும் ஏற்படலாம். பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடிக்க முயற்சி செய்யவும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு செலவுகளை கவனத்துடன் செய்தால் எதிர்கால பிரச்ளைகளை சமாளிக்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.  நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும்.

பணவரவும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பெண்மணிகள் எல்லாரிடமும் அனுசரித்து நடக்கவும்.  மாணவமணிகள் படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18,19.

சந்திராஷ்டமம்: 16,17.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு சீராக இருந்தாலும் வரவு செலவு விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். செய்தொழிலில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் நல்ல பெயருக்கு நண்பர்கள் களங்கம் கற்பிக்க முயல்வார்கள். எனவே கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகவும். சற்று அதிகமாக உழைக்க வேண்டிய நேரமிது. வியாபாரிகளுக்கு எதிரிகளால் சிறிய தொல்லைகள் ஏற்படலாம். அதனால் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். புதிதாக குத்தகைகள் எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் எடுங்கள். கலைத்துறையினர் உழைப்பிற்கேற்ற தகுந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சக கலைஞர்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகளுக்கு சிறிது  உடல் நலம் பாதிக்கப்படும் என்றாலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: திங்கள் கிழமையன்று அம்பாளை தரிசிக்கவும்.

அனுகூலமான தினங்கள்: 17,20.

சந்திராஷ்டமம்: 18,19.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திருப்திகரமான வாரம். உங்கள் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். புதிய நட்புகள் கிடைக்கும். மனதிலும் உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிறர் உங்களைப் பார்த்து பொறாமைப் படும்படி நடந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல முறையிலேயே நடக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். சிலர் விருதுகள், பாராட்டுகள் பெறுவீர்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மாணவமணிகள் வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள்
அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானைத் தரிசித்து கந்த சஷ்டி படிக்கவும்.

அனுகூலமான தினங்கள்: 19,22.

சந்திராஷ்டமம்: 20,21.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சந்தோஷமான வாரம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். பணவருவாய் சிறப்பாக இருக்கும். வசீகரமான பேச்சினால் பிறரைக் கவர்வீர்கள். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் தேடிவரும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் புதிய மாற்றம் தென்படும். வருமானத்திற்குப் பல வழிகளைக் காண்பீர்கள். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.  தானிய விற்பனையில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். பல வழிகளிலும் வருமானம் வரும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவும். பாடங்களை பலமுறை படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 18,20.

சந்திராஷ்டமம்: 22.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சாதகமான வாரம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி  பெறும். பொருளாதாரத்தில் சிறிது குறைவு இருந்தாலும் உங்களின் முக்கியத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செய்தொழிலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியமும் மனநிலையும் பலப்படும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரிவர முடிக்க முயற்சி செய்யவும்.  எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள்.

போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாகவே இருப்பதால் கவனம் தேவை. விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் அவ நம்பிக்கைகள் நீங்கும். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.

பெண்மணிகள் கணவருடன் நேசமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் குறையும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: தினமும் 108 முறை ” ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 18,20.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

திருப்திகரமான வாரம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களால் பயனடைவீர்கள். திடீர் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சீராகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அனைத்து முயற்சிகளும் காலம் தாழ்த்தியே பலன் தரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்திற்கு அஸ்திவாரம் போடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பீர்கள்.

பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். பெண்மணிகள் மகிழ்ச்சிகரமான செய்திகளைக் கேட்பீர்கள். கணவருடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் உற்சாகமான மனநிலையுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 16,21.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உற்சாகமான வாரம். குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் கரிசனத்துடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களும் உதவுவார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்துத் தங்களின் பொருள்களை சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு உயரும். கட்சியில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு குதூகலமான வாரம். உங்களின் திறமைகள் அரங்கேறும். இதனால் பண வரவும் உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும். பெற்றோர் ஆதரவு தருவார்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 17,21.

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். எந்தச் செயலிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். வெளியூரிலிருந்து மகிழச்சியளிக்கும் செய்தி ஒன்று வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இணைந்து சிறிய முதலீட்டில் புதிய கடையை திறக்கும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும். நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களைச் செயலாக்குவதில் வெற்றி காண்பீர்கள். கட்சி மேலிடமும் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கும். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.  உங்களின் செயல்கள் மக்களை கவரும் விதத்தில் அமையும்.

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். மாணவமணிகள் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 19,20.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். மனச்சோர்வு அகலும். தெளிந்த மனதுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வீட்டுக்கு மாறுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடந்தேறிவிடும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் பிரதிநிதிகள் பல இடங்களுக்கும் சென்று விற்பனையை பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் லாபம் உண்டு.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். புதிய பதவிகள் வந்து சேரும். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணமும் கை வந்து சேரும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

பரிகாரம்:  மஹாலட்சுமியை வெள்ளிக்கிழமையன்று தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 21, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

 கே.சி.எஸ் ஐயர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.