தமிழகம் பற்றியெரியும் வேளையில் இமயமலையில் குதிரைச் சவாரி!!

0
650

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, காவு கொள்ளப்பட்ட தமிழக உரிமைகளை வென்றெடுக்க வலிமை வாய்ந்த போர்க்குணம் மிக்க ஒரு போராளித் தலைவரை தமிழகம் தேடிக் கொண்டிருக்கிறது.

போராடுகிற மக்களின் கண்களில் இந்த ஏக்கம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண வருவேன் என்று சொல்லாமல் ஒரு வெற்றிடம் இருக்கிறது.

‘அதை நான் நிரப்புவேன். முதல்வர் பதவியில் அமர்ந்து நல்லாட்சி தருவேன்’ என நடிகர்கள் பலரும் கட்சி தொடங்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசனாவது மக்களின் நலன் என்ற கொள்கையை முன்வைத்து கட்சியை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார்.

30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் இப்போதும் ‘சிஸ்டம் சரியில்லை. வெற்றிடம் இருக்கு, எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன்’ என பசப்பு வார்த்தைகளைத்தான் சொல்லி வருகிறார்.

‘அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்; எம்.ஜி.ஆரை போல நல்லாட்சியைத் தருவேன்’ என முதல்வர் நாற்காலி மீது அகலக் கண் வைத்து கனவு காண்கிறார்.

ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பாளர்கள் மக்கள்தான். அந்த மக்கள் தங்களது தலைவிதியை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.அது ரஜினியோ, கமல்ஹாசனோ மக்களின் முடிவு. அது ஒருபக்கம் இருக்கட்டும்.

குதிரைச் சவாரி செய்யும் ரஜினி, தமிழ் மக்களுக்கு நல்லது செய்யப் போறேன் என தம்பட்டம் அடிக்கும் ரஜினிகாந்த், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இமயமலை யாத்திரைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். இமயமலையில் குதிரைச் சவாரி செய்து கோயில் கோயிலாக வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

IMG-20180312-WA0014_15284

இங்கே தமிழகத்தில் நாள்தோறும் அசம்பாவிதங்களும் சமூக பதற்றங்களும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

குரங்கணி தீ விபத்தில் சிக்கி பதினொரு உயிர்கள் மாண்டு போயிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய முதல்வர் பதவிக்கு கனவு காணும் ரஜினிகாந்த் இதுவரை இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் ஜாலியாக யாத்திரை போகிறார்.

அங்கே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அரசியல் பேசமாட்டேன் என்கிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்களை கட்டி அணைத்து போஸ் மட்டும் கொடுக்கிறார்.

அது சரி கொள்கை என்னவென்று கேட்ட செய்தியாளர் ‘சின்ன பையன்’; கொள்கை என்ன என்று கேட்டாலே ‘தலைசுத்துது’ என்று சொல்கிறார்.

IMG-20180312-WA0013_15282

மக்களோடு மக்களாக நின்று மக்களுடன் சென்று அவர்களது இன்ப துன்பங்களில் தம்மை இணைத்துக் கொண்டு அவர்களது பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றுக்கான சரியான தீர்வை முன்வைத்து போராடி வெல்கிறவர்தான் தலைவர் என்பது சரித்திரம்.

ஆனால் தமிழகத்தின் தரித்திரமோ, ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு மக்களைப் பற்றியும் அவர்தம் பிரச்சினைகளைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாதோர் எல்லாம் தலைவர்களாக தங்களை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இது என்ன டிசைன் அரசியலோ? மக்களை தொல்லைகளாக மக்களின் பிரச்சினைகளை தலைசுற்றும் சம்பவங்களாக கருதுகிறவர்களுக்கு அரசியல் எதற்கு? முதல்வர் கனவு எதற்கு? சார் தாம் யாத்திரை, அமர்நாத் யாத்திரை, காசி யாத்திரை என காலத்தை கடத்துவதைவிட்டு வஞ்சிக்கப்பட்ட தமிழக மக்களை மேலும் மேலும் முட்டாளாக்காமல் இருந்தாலே போதும்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.