ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் கான்

0
1045

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது தலைமையிலான அணி வென்றது.

கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான்.

இங்கிலாந்து நாட்டு கோடீசுவரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ம் ஆண்டு நடைபெற்றது.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன்பின் 2015ம் ஆண்டில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவரான ரேஹாம் கான் உடன் திருமணம் நடந்தது. 10 மாதங்களில் இந்த திருமணம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பஷ்ரா மேனகா (வயது 40) என்பவரை ஆன்மீக ஆலோசனை பெறுவதற்காக கான் சந்தித்து உள்ளார்.

கானின் கட்சி பற்றிய மேனகாவின் அரசியல் கணிப்புகள் சில உண்மையான நிலையில் அவருடனான நெருக்கம் அதிகரித்தது.

இதனை தொடர்ந்து 5 குழந்தைகளை பெற்றவரான மேனகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். கடந்த மாத தொடக்கத்தில் இம்ரான் கானை திருமணம் செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.

இந்த நிலையில், லாஹூரில் உள்ள மேனகாவின் சகோதரர் இல்லத்தில் நேற்று கான் மற்றும் மேனகா திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் கானின் சகோதரிகள் கலந்து கொள்ளவில்லை. 2 முறை விவாகரத்து ஆன நிலையில், சகோதரிகள் மீது கானுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் 3வது திருமணத்திற்கு அவர்களை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.