வடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன்? (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்?) மினி தொடர் – 3

0
1128

” எங்கள் ஊரில் அமெரிக்க திரைப்படம் என்றால் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் திரையிடப்பட்டால் தியேட்டர்களில் கூட்டம் அள்ளும்.

சப் டைட்டில் இல்லாமாலேயே கூட அந்தப் படங்களை நாங்கள் பார்ப்போம். ஏனென்றால், இத்தகைய படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களும், டச் ஸ்கிரீனும் எங்களை பிரமிக்க வைக்கும்.

மேலும் அமெரிக்க திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதன் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பெரும்பாலும் தங்கள் நகரையோ அல்லது இந்த உலகத்தையோ வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதாகவே சித்திரிக்கப்பட்டிருக்கும்.

வடகொரியா அரசும் தனது மக்களுக்கு ‘நாட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோ’ என்று உபதேசித்திருப்பதால், அதுபோன்ற குணாதிசயங்களுடன் கூடிய அமெரிக்க படங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது.”

– ‘அமெரிக்காதான் எங்களது முதல் எதிரி’ என்று கூறி அதற்கேற்ப எண்ணற்ற ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், கூடவே தன் நாட்டு மக்களிடையேயும் அதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து, அவர்களை மூளைச் சலவை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா குறித்து வடகொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஜீ சன் லீ என்கிற வடகொரிய பத்திரிகையாளர் முன்வைக்கும் கருத்துகளில் ஒன்றாக இருக்கிறது இது.

கிம் ஜாங்

ஒருபக்கம் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம், மறுபக்கம் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல், அவருக்கும் முந்தைய அதிபர்களான கிம் ஜாங் – சக் மற்றும் கிம் இல் – சங் ஆகியோரைப் போற்றி துதிக்க வேண்டும் என்பதையும் தவறாமல் வலியுறுத்தி வருகிறது வடகொரிய அரசு.

சுருக்கமாக சொல்வதென்றால், ‘அரசு தலைமையை துதி…அமெரிக்காவை வெறு!’ என்பதுதான் வடகொரியா மக்களுக்கு இடைவிடாது செய்யப்பட்டு வரும் மூளைச் சலவை பிரசாரம்.

கூடவே கொரியாவை தனது காலனி நாடாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஜப்பான் மற்றும் கொரியப் போரின்போது கொரிய மக்களைப் பல்வேறு கொடூரங்களுக்கு உட்படுத்திய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மறக்காமல் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையும் மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது கிம் ஜாங் தலைமையிலான வடகொரிய அரசு.

அமெரிக்காவை வெறுப்பது ஏன்?

ஆனால், இந்த பிரசாரம் வடகொரியா மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டுள்ளது என்பதை பார்ப்பதற்கு முன்னர், வடகொரிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவை தங்களின் முதல் எதிரியாக ஏன் முன் நிறுத்தி வருகிறார்கள் என்பதைப் பார்த்துவிடலாம்.

அமெரிக்கா மீதான வெறுப்புக்கு வடகொரியா முக்கியமாக கருதுவது அதன் நில ஆக்கிரமிப்புக் குணம், தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக கூறித் தொடர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணுவது, இருதரப்பிலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள தவறான அனுமானங்கள், ஒருதலைபட்சமான கருத்துகள், பழைய வரலாற்று நிகழ்வுகளின் கசப்பான நினைவுகள் என பல்வேறு காரணங்களை அடுக்கலாம்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏதுமில்லை.

சில மாதஙளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களின் விருப்பமான நாடுகள் பட்டியலில் வடகொரியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டிருந்ததோடு, அமெரிக்காவுக்கு ராணுவ அச்சுறுத்தல் மிக்க நாடாகவும் வடகொரியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அளவுக்கு பரஸ்பரம் இரு நாடுகளும் ஒன்றின் மீது மற்றொன்று வெறுப்பு மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றன.

Trum_with_flags_16109

இதில் வடகொரியாவுக்கு அமெரிக்கா மீது எத்தகைய எண்ணம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொரியாவில் ஜப்பானின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

ஜப்பான் படைகளை சரணடையச் செய்த சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் கொரியாவில் தாங்கள் ஆக்கிரமித்தப் பகுதிகளை வடகொரியா, தென்கொரியா என பரஸ்பரம் பிரித்துக் கொள்வது எனத் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன.

ஒன்றுபட்ட கொரியாவில் சுதந்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தற்காலிக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி நடக்க இவ்விரு நாடுகளும் தவறிவிட்டன. இதன் விளைவாகத்தான் கொரியாவின் வடக்கிலும் தெற்கிலும் இரு அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1948-ம் ஆண்டு கொரியாவின் வடக்குப் பகுதியில் ( தற்போதைய வடகொரியா) கம்யூனிஸ அரசு ஏற்படுத்தப்பட்ட அதேவேளை, தெற்கு பகுதியில் ( தற்போதைய தென்கொரியா) மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஜனநாயக அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டன.

சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என இரு வல்லரசுகளின் பின்புலத்தில் இந்த இரு கொரிய நாடுகளும் சுதந்திரமாக செயல்படத் தொடங்கின. இந்த நிகழ்வுகள்தான் கம்யூனிஸ வடகொரியாவில் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள் துளிர்விட அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அதன்பின்னர் அவ்வப்போது சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதில் மிகச் சிறிய முன்னேற்றமே காணப்பட்டது. ஒரு அடி முன்னேறினால் இரண்டு அடி சறுக்கிய கதைதான் நிகழ்ந்தது.

கம்யூனிஸம்… கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் வடகொரியாவின் கம்யூனிஸ அரசு கருத்து சுதந்திரத்துக்கு விதித்தக் கட்டுப்பாடுகள், தகவல்களைத் தெரிந்துகொள்வதில் காட்டப்பட்ட கெடுபிடிகள், அதாவது ஊடகச் சுதந்திரமின்மை போன்றவை, ‘ அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய, முதலாளித்துவ மற்றும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றை தனது சுய நலனுக்கு காலனி நாடாக்கும் நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு’ என்ற அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்துக்கு மேலும் தீ மூட்டுவதாக இருந்தது.

நாட்டின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், சீராக நடத்திச் செல்லவும் வடகொரிய அதிகாரிகள் இந்த அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்தை இடைவிடாமல் செய்து வந்தனர்.

ஆட்சியாளர்களின் இந்த அமெரிக்க எதிர்ப்பு செயல் திட்டம் வடகொரிய மக்களிடையே நன்றாகவே வேலை செய்தது. ஆக்கிரமிப்புக் குணம் கொண்ட அமெரிக்காவிடமிருந்து வடகொரிய ஆட்சியாளர்கள்தான் நம்மையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது.

சீனா, ஜப்பான், சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த நாடுகள். இதனாலேயே வடகொரியாவுக்கு அன்னிய சக்திகள் மீது அளவுகடந்த சீற்றம் உண்டு.

அதிலும் அமெரிக்கா மீது அப்படி ஒரு காட்டம். இத்தனைக்கும் ஜப்பானின் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து கொரியாவை மீட்டதில் அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு உண்டு.

ஆனால் கொரிய பிரிவினைக்குப் பின்னர் சோவியத் ரஷ்யாவின் அளித்த ஆதரவு மற்றும் அதுபோட்ட தூபம் ஆகியவை காரணமாக அமெரிக்காவை ஜப்பான் இடத்தில் வைத்து பார்த்து, அந்த நாடு ஒரு ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடு என்றும், கம்யூனிஸ கொள்கைகளுக்கு முரணான நாடு என்றும் வடகொரியா கருதியது.

korea_war_heads_16569

வெறுப்பை வளர்த்த கொரியப் போர்

அதிலும் 1950 ல் தென்கொரியா மீது வடகொரியா மேற்கொண்ட படையெடுப்புக்குப் பின்னர் நிலைமை இன்னும் மோசமாகியது. தென்கொரியாவையும் சேர்த்து ஒன்றுபட்ட கொரியாவை கம்யூனிஸ அரசின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வடகொரியாவின் ஆசைக்கு, தென்கொரியாவுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா முட்டுக்கட்டைப் போட்டது.

மேலும் போரின்போது அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிராக கொடூரமான போர் வன்முறைகளை நிகழ்த்தியதாகவும், தங்களிடம் பிடிபட்ட வடகொரியர்களைக் கடும் சித்ரவதைக்குப் பின்னர் கொன்று குவித்ததாகவும், அமெரிக்கா நடத்திய பாரிய குண்டு வீச்சு தாக்குதலில் கிட்டத்தட்ட வடகொரிய ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் கொல்லப்பட்டதாகவும் வடகொரியா ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தென்கொரியாவுடன் அமெரிக்கா தோழமையுடன் இருப்பது ஒன்றுபட்ட கொரிய தேசத்தை உருவாக்குவதற்கு இடையூறாக இருப்பதாகவும், தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் இருப்பது அது கொரிய தேசத்தை ஆக்கிரமித்துள்ளது போன்ற எண்ணத்தையே தங்களுக்கு ஏற்படுத்துவதாகவும் வடகொரியா கூறுகிறது.

அதிலும் அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளம் 2014 நவம்பர் மாதம் ‘அமைதியின் பாதுகாவலர்கள்’ என்ற பெயரிலான சிலரால் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், ஊழியர்களின் இமெயில்கள், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விவரங்கள், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தினால் ரிலீஸ் செய்யப்படாத திரைப்படங்களின் பிரதிகள் போன்றவை வெளியிடப்பட்டன.

korea_war_600_16096

மேலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை மைய கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘ The Interview’ என்ற நகைச்சுவை திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் திரையிடுவதாக இருந்தது.

ஆனால், அந்தத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் அந்தத் திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த ‘அமைதியின் பாதுகாவலர்கள் குழு’ மிரட்டல் விடுத்தது. இதனையடுத்து அமெரிக்க அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தத் திரைப்படத்தைத் திரையிடாமல் சோனி பிக்சர்ஸ் தவிர்த்தது.

இந்த நிலையில், இந்த சைபர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள், தொழில்நுட்பம் போன்றவற்றை அலசி ஆராய்ந்த அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், வடகொரியாதான் இந்த தாக்குதல் கும்பலின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியது. ஆனால், வடகொரியா அதனை அப்போது மறுத்தது.

இருப்பினும் பதிலடி கொடுத்தே தீருவது என முடிவு செய்த அமெரிக்கா, வடகொரியாவின் இணையதள சேவையை அவ்வபோது முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதுவும் வடகொரியாவின் அமெரிக்க வெறுப்பு தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பதாக இருந்தது.

அமெரிக்க எதிர்ப்பு… வடகொரிய மக்கள் நினைப்பது என்ன?

இந்த அளவுக்கு வடகொரிய அரசு தரப்பில் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும், கிம் ஜாங் உன் அரசு உருவகப்படுத்தும் அளவுக்கு தங்கள் நாட்டு மக்களிடையே அமெரிக்க எதிர்ப்பு காணப்படவில்லை என்கிறார் வடகொரிய பத்திரிகை ஒன்றுக்காக சிங்கப்பூரில் பணியாற்றும் வடகொரிய பத்திரிகையாளர் ஜீ சன் லீ. ” எங்கள் ஊரில் நான் உட்பட ஜப்பானியர்களை வெறுக்கும் அளவுக்கு அமெரிக்கர்களை வெறுக்கவில்லை.

கொரிய போரின் நிகழ்வுகளை அனுபவித்த எங்கள் தாத்தா பாட்டிகள், ‘ வடகொரிய ஆட்சியாளர்கள் சொல்லும் அளவுக்கு அமெரிக்கர்கள் மோசமான போர் குற்றங்களில் ஈடுபடவில்லை. அப்படி ஒரு நிகழ்வை நாங்கள் பார்க்கவே இல்லை’ என்றுதான் சொல்கிறார்கள்.

‘அப்பாவி கொரிய பெண்களின் வயிற்றைக் கிழித்து கர்ப்பப்பையை அமெரிக்க வீரர்கள் வெளியே எடுத்து போட்டதாகவும், அப்பாவி மக்களின் கண்களைத் தோண்டியெடுத்ததாகவும், மூக்கு மற்றும் உதடுகளை அறுத்தெறிந்து அவர்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டதாகவும் வடகொரிய ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், நான் இந்தக் கதையை நம்பவில்லை. எங்கள் ஊரிலுள்ள வயதானவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. வடகொரிய குழந்தைகள் மீது அமெரிக்க வீரர்கள் பாசத்தைப் பொழிந்ததாகவும், அவர்களுக்கு சாக்லேட், சுவிங்கம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்வித்ததாகவும் கூறுகிறார்கள்.

anti_US_16471

அதே சமயம் உலக நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் வடகொரிய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகள் குறித்து வடகொரியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

நான் வடகொரியாவில் இருக்கும்போது அரசு அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், நாங்கள் டவுன் ஹாலில் கூடி அதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வோம்.

‘இனிமேல் அமெரிக்கா நம்மை அச்சுறுத்த முடியாது’ என நாங்கள் கூறிக்கொள்வோம். அதே சமயம் வடகொரிய அரசு மேற்கொள்ளும் இந்த அணு ஆயுத சோதனைகள் குறித்து உலகின் பிற நாடுகள் எள்ளி நகையாடுவதையும், இவ்வாறு ஏவுகணை சோதனைகளுக்கு அதிக நிதி செலவிடப்படுவதால்தான் நாடு ஏழையாக இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.

ஏவுகணை சோதனைக்கு அடுத்தபடியாக வடகொரிய அரசு அதிகம் செலவிடப்படும் துறைகளில் ஒன்றாக கல்வித் துறை விளங்குகிறது.

குறிப்பாக வடகொரியாவில் இருந்த ஜப்பானிய ஏகாதிபத்திய ஆட்சி, அதன் கொடுமைகள், அதனைத் தொடர்ந்து கிடைத்த சுதந்திரம் போன்ற வரலாற்று சம்பவங்களை பள்ளிப் பாடங்களிலும், கல்லூரிப் பாடங்களிலும் கற்றுக் கொடுப்பதில் வடகொரிய அரசு மிகக் கவனமாக உள்ளது.

NK_attacks_600_16519

மழலையர் பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்பட அதன் கட்டடங்களிலும் சுவர்களிலும் தீட்டப்படும் சித்திரங்கள் அனைத்தும் ஜப்பானியர்களும் அமெரிக்கர்களும் வடகொரிய மக்களுக்கு எவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தினார்கள் என்பதை விளக்கும் விதமாகவே இருக்கும்.

கூடவே, இதன் காரணமாகத்தான் நமக்கு அணு ஆயுத பாதுகாப்புத் தேவை என்று ஏவுகணை சோதனையை நியாயப்படுத்தும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.

இப்படி பள்ளியில் தொடங்கி அலுவலகம் வரைக்கும் அமெரிக்க எதிர்ப்பு கருத்துகளை உள்வாங்கி வளரும் வடகொரியர்கள், அமெரிக்கா மீதான பழைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ஏவுகணைச் சோதனை நியாயமானது, நமது பாதுகாப்புக்குத் தேவையானதுதான் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்” என்கிறார் லீ மேலும்.

இரு நாடுகளுக்கு இடையே பகை இருப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் சமாசாரம்தான். ஆனால், அந்தப் பகை நாடுகள் பெரும்பாலும் அண்டை நாடுகளாக இருக்கும்.

ஆனால் பூகோள ரீதியாக வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தூரத்தைக் கணக்கிட்டால், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பகை என்பது சற்று வித்தியாசமான ஒன்றாகத்தான் உள்ளது.

ஒருவேளை எதிர்காலத்தில் இருநாடுகளிலும் தலைமைப் பொறுப்புக்கு வரும் ஆட்சியாளர்களிடம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தப் பகை முடிவுக்கு வருமோ என்னவோ?

கிம் ஜிங் இன்னும் மிரட்டுவார்…

தொடரும்…

வடகொரியா Vs தென்கொரியா: பிரிந்தது எப்படி? – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? பகுதி- 2

மூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1)

LEAVE A REPLY

*