வடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்..! – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-4)

0
1374

தவிக்கு வருவதற்காகவும், கிடைத்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சொந்த உறவுகளையும், தனக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சந்தேகப்படுபவர்களையும் சிறையிலடைத்து சித்ரவதை செய்வதும், உயிரைப் பறிப்பதும் மன்னர் காலத்திலிருந்து உலகம் கண்டுவந்த ஒன்றுதான் என்றாலும், வடகொரியா இதில் தனிரகம்.

மறைந்த ஹிட்லரை நினைவுபடுத்துவது போன்று இந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், தனக்கோ அல்லது தனது அரசுக்கோ அச்சுறுத்துலாக இருப்பவர்களையும் விசுவாசமாக இல்லை என்று கருதுபவர்களையும் கொல்லும் முறைகள் குறித்து அவ்வப்போது வெளியாகும் விதவிதமான செய்திகள் அனைத்தும் பகீர் ரகம்!

பொதுவாக சீனா போன்று வடகொரியாவும் இரும்புத்திரை கொண்ட நாடுதான். சீனா குறித்தாவது ஓரளவுக்குத் தகவல்களையும் செய்திகளையும் அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், வடகொரியா குறித்து அரசுத் தரப்பில் ஏதாவது வெளியிடப்பட்டால்தான் உண்டு. அப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்கள் அனைத்தும் நாடு குறித்த பெருமிதச் செய்திகளும், அதிபர் கிம் ஜாங் புகழ்பாடும் தகவல்களுமாகவே இருக்கும்.

உள்ளுக்குள் நடக்கும் ரகசிய விவகாரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊடகங்களால், குறிப்பாக தென்கொரிய உளவு ஏஜென்சிகள் மூலம்தான் உலகுக்குத் தெரிய வரும்.

அப்படித்தான் வடகொரியாவில் அவ்வப்போது நிறைவேற்றப்படும் மரணதண்டனை குறித்த தகவல்களும் வெளிவரும். ஆனால், வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் பீதியைக் கிளப்பும் வகையறாவாகவே இருக்கும்.

நாய்க்கு இரையாக்கப்பட்ட மாமா

கடந்த டிசம்பரில், அதிபர் கிம் ஜாங்கின் வலதுகரமாகவும், வடகொரிய துணை ராணுவத் தலைவராகவும் திகழ்ந்த ஹ்வாங் பியாங்-ஸோ மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக ஒரு தகவல் வெளியானது.

இதுகுறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பியாங்-ஸோ, வடகொரியாவின் மரண தண்டனை நிறைவேற்றும் படையினரால் கொல்லப்பட்டதாக மேலும் ஓர் அதிர்ச்சித் தகவலை உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது.

தென்கொரிய செய்தி ஏஜென்சியான யான்ஹாப், பியாங்-ஸோவும், அவரது உதவியாளர் கிம் வோன் ஹாங்கும் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டதாக தென்கொரிய உளவு ஏஜென்சியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டது.

அடுத்த சில நாள்களிலேயே கிம் வோன் சிறையிலடைக்கப்பட்டதாகவும், பியாங்-ஸோ, அதிபர் கிம் ஜாங் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாகவும் யான்ஹாப் தெரிவித்தது.

அதிபர் கிம் ஜாங் தனது எதிரிகளையும் துரோகிகளையும் இதற்கு முன்னர் பல்வேறு குரூரமான முறைகளில் கொன்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பியாங்-ஸோ எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல் அநேகமாக இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாகக்கூடும்.

kim_uncle_16154

அதே சமயம் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் யொங் சோல், அதிபர் கிம் ஜாங் உன்னின் மாமா ஜங் சாங் தேக், ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் போன்றோர்கள் கொல்லப்பட்ட விதம் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதம்.

ஹ்வோன் யொங் சோல், அதிபர் கிம் ஜாங்குக்கு விசுவாசமற்ற வகையில் நடந்துகொண்டார் என்பதற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு உளவு ஏஜென்சியான என்.ஐ.எஸ் (National Intelligence Service -NIS) தெரிவித்திருந்தது.

அதே சமயம் தென்கொரிய செய்தி ஏஜென்சியான யான்ஹப், “வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் தூங்கிவிட்டார் என்பதற்காகவே, அவர் பொதுமக்கள் முன்பு விமான எதிர்ப்பு பீரங்கிக் குண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டு நிரந்தரமாகத் தூங்கவைக்கப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

தந்தை மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கிம் ஜாங் உன்னுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து ஆட்சியை ஸ்திரப்படுத்தியவர் அவரது மாமா சாங் ஸாங் தேக்.

கிம் ஜாங் யில்லின் சகோதரியை மணந்த 67 வயதான இவர் ஜாங்-யில் ஆட்சியிலும், கிம் ஜாங் உன் ஆட்சியிலும் நம்பர் டூ வாக திகழ்ந்தவர்.

அவர்மீது ஆட்சியைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகக் கூறி கைது செய்தார் அதிபர் கிம். அதிபரின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்துகொண்டு, அதிபருக்கு எதிராக ஆட்களைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார் என்றும், மேலும் கட்சியின் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதுபோக்கினார் என்றும் அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டது.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனி ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு சாங் ஸாங் தேக்குக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், ஸாங் தேக் தூக்கில் போடப்படவில்லை என்றும், பட்டினி போடப்பட்ட நாய்கள் அடைக்கப்பட்ட கூண்டில் வீசப்பட்டார் என்றும் அப்போது வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிரச் செய்தன.

kim_salute_16275

அதே சமயம் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்றும் தெரியவில்லை. இரும்புத்திரை போட்டு எதையும் ரகசியமாக வைத்திருக்கும் வட கொரியாவிலிருந்து வரும் எந்தச் செய்திகளுமே உறுதிப்படுத்த முடியாதவையாகவே இருப்பதால் அந்த நாடாக எதையும் சொன்னால்தான் உண்டு.

ஏனெனில் சில மரண தண்டனை குறித்த செய்திகள் இட்டுக்கட்டி புனையப்பட்டவையாக இருக்கலாம் என்பதற்கு ஹ்யோன் சோங் வோல் என்ற பெண்ணின் மரண தண்டனை குறித்த செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

ஹ்யோனுடன் சேர்ந்து 11 இசைக் கலைஞர்களும் ஒரு பாலியல் ஒளி நாடாவை உருவாக்கியதாகவும், இதற்காக அவர்கள் பிடிக்கப்பட்டு இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை வடகொரியா மறுத்தது.

செய்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே ஹ்யோன், அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி, தாம் நலமாக இருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எல்லாருமே இப்படிப் பிழைத்திருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.

தேடி வந்த பதவி வாய்ப்பு

கிம் ஜாங் உன் 2011-ல் பதவியேற்றதிலிருந்து இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தென் கொரிய உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இப்படித் தனக்கு நெருக்கமான உறவுகளையும் நம்பகமான தளபதிகளையுமே எதிரிகளாகப் பாவித்து, அவர்களைத் தீர்த்துக்கட்டுகிற அளவுக்கு கிம் ஜாங் இருப்பதற்கு, அதிகாரம் கையைவிட்டுப்போய்விடுமோ என்ற அச்சமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமே காரணம்.

அதனால்தான் அவர் தனது பிறந்த தினத்தைக்கூட பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மாக வைத்துள்ளார். ஆனாலும், அவர் 1983 அல்லது 1984 -ல் பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கிம் ஜாங்கின் தந்தை கிம் ஜாங் இல் ஆட்சிக் காலத்திலும் வடகொரியா இரும்புத்திரை கொண்ட நாடாகத் திகழ்ந்தாலும் அவர் மக்களின் “அன்புக்குரிய தலைவர்” ஆகப் பார்க்கப்பட்டார்.

2011 டிசம்பரில் அவர் இறந்ததும், கிம் ஜாங் உன் கட்சி, நாடு மற்றும் ராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டு உடனடியாக பதவிக்கு வந்தார்.

இத்தனைக்கும் கிம் ஜாங் இல் உயிருடன் இருந்தபோது அவரது விருப்பத்திற்குரிய வாரிசாக கிம் ஜாங் உன் இருந்ததில்லை. இல்லின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த கிம் ஜாங் நாம் மற்றும் கிம் ஜாங்கின் இன்னொரு சகோதரர் கிம் ஜாங் சோல் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த வாரிசாக வருவார்கள் என வடகொரிய அரசியல் வல்லுநர்கள் கூறினார்கள்.

ஆனால், எதிர்பார்ப்புகள் அத்தனையையும் முறியடித்துவிட்டு, தனது தந்தை இறந்த உடனேயே கிம் ஜாங் ஜம்மென்று அதிபர் பதவியில் வந்து அமர்ந்துகொண்டார். அவர் வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்வதைவிட வாய்ப்பு அவரைத் தேடிவந்தது என்று சொல்லும் அளவுக்கு சந்தர்ப்பங்கள் அமைந்தன.

kim_father_16537

கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் யில் மறைவுக்குப் பின் நியாயமாகப் பார்த்தால் மூத்த மகன் கிம் ஜாங் நாம் பதவி ஏற்றிருக்க வேண்டும்.

ஆனால் 2001-ல் கிம் ஜாங் நாம், ஜப்பானில் போலி பாஸ்போர்ட்டுடன் மகன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பெண்களுடன் பிடிபட்டார். இதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இச்சம்பவம் அவரது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியது. இதனால் நாடு திரும்பாமல் சீனாவுக்குச் சென்று, அங்குள்ள மக்காவ் என்ற இடத்தில் வசித்தார்.

இன்னொரு சகோதரர் கிம் ஜாங் சோல் அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்ததால், கிம் ஜாங் உன்னுக்கு அது மிகவும் வசதியாகப் போய்விட்டது.

கிம் ஜாங் உன் தனது சகோதரர்களைப்போல சுவிட்சர்லாந்தில் பள்ளிப்படிப்பை படித்தவர்தான் என்றாலும், மேற்கத்திய கலாசார தாக்கத்தில் சிக்கிவிடாமல், சொந்த நாட்டுக்கே திரும்பினார். நாடு திரும்பியதும் ராணுவப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

கிம் ஜாங்கின் தாயார், கிம் ஜாங் இல்லுக்கு மூன்றாவது மனைவி என்றபோதிலும், அவருக்கு மிகவும் பிடித்த மனைவியாக இருந்ததால், தனது மகன் கிம் ஜாங்கை அதிகாரப் பதவியை நோக்கி நகர்த்துவது சுலபமாக அமைந்தது. மேலும் கிம் ஜாங்கை அவர் ‘விடிவெள்ளி ராஜா’ ( Morning Star King ) என்று பெருமையுடன் கூப்பிடுவாராம்.

2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிம் ஜாங் யில் சீனா சென்றபோது அவருடன் கிம் ஜாங்கும் சென்றார். அப்போதிருந்தே வடகொரியாவின் அடுத்த ‘பட்டத்து ராஜா’ தான்தான் என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துச் சொல்லும்விதமாகவே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

இப்படியான நடவடிக்கைகளும் அடித்தளமுமே, கிம் ஜாங் யில் டிசம்பரில் உடல் நலக்குறைவால் இறந்ததும் உடனடியாக கிம் ஜாங்கை அடுத்த அதிபராக பதவியேற்க பாதை அமைத்துக் கொடுத்தன.

ராணுவ அமைச்சர்கள் மீதும் சந்தேகம்

2011-லேயே அதிபராகிவிட்டாலும், கிம் ஜாங் முதன்முதலில் பொது இடத்தில் தனது உரையை நிகழ்த்தியது வடகொரியாவைத் தோற்றுவித்த கிம் ஜாங்கின் நூற்றாண்டு பிறந்த தினமான 2012 ஏப்ரல் 15-ல் தான்.

அப்போதுதான் ராணுவத்துக்கே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும், இதுநாள் வரை வடகொரியாவுக்கு இருந்துவந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ராணுவ உயர் தொழில்நுட்பம் இனிமேல் ஏகாதிபத்திய நாடுகளுக்கு மட்டுமே ஏகபோக உரிமையாக இருக்காது என்றும், வடகொரிய ராணுவத்தை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து, அப்போதிருந்தே வடகொரியாவை ராணுவ ரீதியில் பலப்படுத்துவதற்காக நவீன ஏவுகணைச் சோதனைகளுக்குத் திட்டமிட்டு, அதனைச் செயல்படுத்த தொடங்கினார் கிம் ஜாங்.

kim_with_wife_16084

இதன் உச்சமாகத்தான் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்கவல்ல இரண்டு அதி நவீன ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி, அமெரிக்காவையும் அதன் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பையும் பதறவைத்து, அதன் பலனாக ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டார்.

உலக அரசியலைப் பொறுத்தவரையில் கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாகவும் சில நாடுகளால் கோமாளியாகவும் பார்க்கப்படுகின்றபோதிலும், அவரது உண்மையான திறன் என்ன என்பது மற்ற உலக நாடுகளால் இன்னமும் துல்லியமாக எடைபோட முடியாததாகத்தான் உள்ளது.

ஏனெனில் வடகொரிய அதிபராக பதவியேற்ற பின்னர் கிம் ஜாங், எந்த ஒரு வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால், அவரது தந்தையோ ஆட்சியிலிருந்தபோது சீனாவுக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

உள்நாட்டைப் பொறுத்தமட்டில் இரும்புத்திரை நிர்வாகத்தைத்தான் நடத்தி வருகிறார் கிம் ஜாங். யாரையும் அவர் நீண்ட காலத்துக்கு நம்புவதில்லை. அதிபராகப் பதவியேற்ற 2011-லிருந்து இதுவரை ஆறுமுறை பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களை மாற்றியுள்ளார். அந்த அளவுக்கு அவர் ஆயுதப்படை மீது நம்பிக்கையற்று இருப்பதையே இது உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சகோதரனுக்கும் மன்னிப்புக் கிடையாது

இந்த அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தின் உச்சமாகத்தான் தனக்கு எதிராக சதி செய்வதாகக் கூறி தனது மாமா சாங் ஸாங் தேக்கையே குடும்பத்துடன் தீர்த்துக் கட்டினார்.

அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு பிப்ரவரியில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கிம் ஜாங்-கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் இரண்டு மாடலிங் பெண்களால் ரசயான ஸ்பிரே அடித்துக் கொல்லப்பட்டதுகூட இவரது உத்தரவின்பேரிலேயே நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த அளவுக்குச் சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் கிம் ஜாங். தனக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றும் வடகொரியாவைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் தனக்கு வயது போதாது என்றும் ஜாங் நாம் விமர்சித்ததாக உளவுத்துறை மூலம் தகவல் அறிந்த கிம் ஜாங், மிகுந்த ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்தே அவரது உத்தரவின் பேரில் கிம் ஜாங் நம்மைத் தீர்த்துக்கட்ட ஒரு குழு அவரைப் பின் தொடர்ந்துள்ளது. எந்தச் சந்தேகமும் வராமல் தீர்த்துக் கட்ட அவர்கள் பயன்படுத்திய ஆயுதம்தான் வி.எக்ஸ். ரசாயனம். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ரசாயனம்.

இந்த ரசாயனத்தைதான் இரு மாடலிங் பெண்களை ஏற்பாடு செய்து, அவர்களிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அடையாளம் தெரியாத ஆள் மீது அடிக்க வேண்டும் என்று கூறி, ஜாங் நாம் மீது அடிக்கச் செய்யவைத்துக் கொன்றது வடகொரிய உளவுத் துறை.

சொந்த சகோதரருக்கே இந்தக் கதி என்றால், ராணுவத்திலும் அதிகார மட்டத்திலும் பொதுமக்கள் தரப்பிலும் கிம் ஜாங்குக்கு எதிராக சதி செய்வதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் கதி என்னவாக இருக்கும்? கேட்டாலே ரத்தத்தை சில்லிட வைக்கக்கூடிய அளவுக்கு, சிறையிலிருந்து தப்பி வந்தவர்கள் சொல்லும் அந்த பகீர் திகீர் தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்…

======================================================

கிம் ஜாங்… பர்சனல் பக்கம்

கிம் ஜாங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியிடப்படவில்லை. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை கிம் ஜாங், சுவிட்சர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், வடகொரிய தூதரின் மகன் என்ற போர்வையிலேயே படிக்க வைக்கப்பட்டார்.

பாடங்கள் ஜெர்மன் மொழியில் கற்பிக்கப்பட்டதால், அவற்றைக் கற்றுக்கொள்வதில் அவர் சிரமப்பட்டாராம். ” நாங்கள் மோசமான மாணவர்கள் இல்லையென்றபோதிலும் ரேங்க் வாங்குகிற அளவுக்கு இருந்ததில்லை.

கிம் ஜாங், தனது டீன் ஏஜில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை விரும்பி பார்ப்பார்.அதேபோன்று கூடைப்பந்து விளையாட்டிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

ஆடம்பரமான விளையாட்டுப் பொருள்களையும் உபகரணங்களையும் வைத்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்கென்றே தனிப்பட்ட கார் டிரைவரும் சமையல்காரரும் இருந்தனர். ஸ்பெஷலாக டியூஷன் வாத்தியாரும் வைத்துக்கொண்டார்.

kim_with_school_friends_16165

ஒருமுறை அவர், தன்னுடைய சமையல்காரரை சரியாக சமைக்கவில்லை என்று மிகுந்த கோபத்துடன் திட்டியதை அவரது வீட்டுக்குச் சென்றபோது பார்த்துள்ளேன்.

அப்போதுதான் தான் யார் என்பதை கிம் ஜாங் என்னிடம் சொன்னார். ஆனால், அப்போது நாங்கள் அதனை நம்பவில்லை” என்று கிம் ஜாங்குடன் படித்த அவரது வகுப்புத் தோழர் ஜாவோ மிக்கேலோ என்பவர் இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

2012 ஜூலை மாதம் வடகொரிய அரசு ஊடகம், ரி சோல்-ஜு என்ற பெண்ணை கிம் ஜாங் திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவலை வெளியிட்டது. சோல்-ஜி-யின் ஸ்டைலான தோற்றத்தை வைத்து அவர் ஒரு மேல்தட்டுக் குடும்பப் பெண்ணாக இருக்கலாம் என்று வடகொரிய அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர் பாடகியாக இருக்கலாம் என்றும், ஏதாவதொரு இசை நிகழ்ச்சியில் அவரைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு, கிம் ஜாங் அவரைத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் தகவல்.

கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ- ஜாங், வடகொரியாவின் தொழிலாளர்கள் கட்சியில் உயர் பதவி வகிக்கிறார். மூத்த சகோதரர் கிம் ஜாங் சோல், அரசு பதவியில் ஏதும் இருக்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை.

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்….

LEAVE A REPLY

*