உப்பில்லா உணவை உண்டு விரதமிருந்தால் திருமண பாக்கியமருளும் உப்பிலியப்பர்!

0
267

ரு மனங்கள் இணையும் வைபவமே திருமணம். ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று சொல்லக் கேட்டிருப்போம்.

நமக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தால்தான், நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

எப்படி ஒரு பயிருக்கு உரமிட்டால், அது நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ அப்படி அன்பு, நல்ல பண்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தால்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

உப்பிலியப்பர் அருளால் திருமணம் நடைபெற நாம் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் மற்றும் மந்திரங்களைப் பார்ப்போம்.

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. இல்லறத்தின் தொடக்கம்தான் திருமண வைபவம்.

திருமணத்தின் மூலம் சிறப்பான வாழ்க்கைத்துணை நமக்கு அமையவேண்டுமானால், இறைவனின் அருள் நமக்குத் தேவை. இன்றைக்குப் பல்வேறு காரணங்களால் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் தடை, தாமதம் ஏற்படுகிறது.

திருமணம் தடைப்படும் பெண்கள், தினமும் காலையில் நீராடி, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளை மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு, ஶ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ‘பாதுகா சஹஸ்ரம்’ ஸ்தோத்திரத்தில் உள்ள கீழ்க்காணும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.

‘சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம்
கண்டேஷு வைகுண்டபதிம் வராணாம்
பத்நாஸி நூநம் மணிபாதர்க்ஷே
மங்கல்யஸுத்ரம் மணிரச்மி ஜாலை:

இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய முடியாதவர்கள், கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே

http___photolibrary.vikatan.com_images_gallery_album_2016_08_29_311020_17090

இதன் மூலம் திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறுவதுடன், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.

மேலும், சனிக்கிழமைகளில் உப்பிலியப்பனுக்கு வேண்டிக்கொண்டு, உப்பில்லாத உணவருந்தி விரதம் இருந்தால், திருமணம் கூடி வரும்.
அதை விளக்கும் வகையில் உப்பிலியப்பன் கோயில் தலவரலாற்றில் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

முற்காலத்தில் ஓர் ஊரில் ஒரு தந்தை தன் மகளுடன் வசித்து வந்தார். தாயில்லாத மகளை அன்புடன் சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தார். மகளும் திருமண வயதை அடைந்தாள்.

நல்ல இடத்தில் மகள் வாழ்க்கைப்பட வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்.

ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் அவர்களின் இளம் வயது மகனும் அவருடைய வீட்டுக்கு வந்தனர்.

”நாங்கள் நீண்ட தூரம் வெயிலில் நடந்து களைத்துப் போய்விட்டோம். தங்கள் வீட்டில் சற்று இளைப்பாறிச் செல்லலாமா?” என்று கேட்டனர்.

பெண்ணின் தந்தையும், ”அதற்கென்ன, தாராளமாக இளைப்பாறிச் செல்லுங்கள்” என்று கூறியவர், தன் மகளை அழைத்து, வந்தவர்களுக்குக் குளிர்ந்த மோர் கொடுக்கும்படிக் கூறினார். தங்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் அழகும், அமைதியான குணமும் வந்தவர்களுக்குப் பிடித்துப் போனது.

எனவே, பிள்ளையின் பெற்றோர் பெண்ணின் தந்தையிடம், ”உங்கள் பெண்ணை எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அவளை எங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதம்தானே?” என்று கேட்டனர்.

பெண்ணின் தந்தையும், தன் கவலையைப் போக்க தெய்வமே அவர்களை அனுப்பி வைத்ததாக நினைத்து, உடனே சம்மதம் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் அன்றிரவு தங்கள் வீட்டில் உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெண்ணை அழைத்து சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார்.

மகளும் விருந்தினை சமைத்து முடித்தாள். வந்தவர்கள் உண்பதற்கு முன்பு. தான் அந்த உணவினை ருசிபார்ப்பது நல்லது என்று எண்ணிய பெண்ணின் தந்தை, உள்ளே சென்று உணவை சுவைத்துப் பார்த்தார். எந்த உணவிலும் உப்பில்லை!

அதற்குள் மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட அமர்ந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் உப்பில்லாத பண்டத்தை அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் அதை உண்பதைத் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அவரும், அவரின் மகளும் அதிசயிக்கும் வகையில் மாப்பிள்ளையும், அவரின் பெற்றோரும் உணவினை ரசித்து, ருசித்து உண்டதோடு அல்லாமல், `இவளே எங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள்’ என்று கூறியும் சென்றனர்.

marriage_17144

இதைக் கேட்ட தந்தையும் மகளும், ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொண்டனர். அன்றிரவு தந்தையின் கனவில் ஶ்ரீமந்நாராயணன் தோன்றினார்.

அவரின் பெண் திருமகளின் அவதாரமே என்றும், அவளை மணக்கவே தாம் அவதாரம் எடுத்திருப்பதாகவும், சனிக்கிழமையில் உப்பில்லாத உணவினை உண்டு விரதமிருந்து தன்னை வேண்டினால் சிறப்பான கணவர் அமைவார் என்பதை உணர்த்தவே இந்த லீலையை நிகழ்த்தினோம் என்று கூறி மறைந்தார்.

இதனால்தான் தன் பெண் உணவில் உப்பிட மறந்தாளோ என்று எண்ணியவர், மகாலட்சுமியும், திருமாலுமே தமக்குப் பெண்ணும் மாப்பிள்ளையுமாக வந்தனரே என்று மகிழ்ச்சி அடைந்தார்.

திருமணத்தடை உள்ள பெண்கள், சனிக்கிழமைகளில் உப்பில்லாத உணவருந்தி, விரதமிருந்து உப்பிலியப்பனை மனதார நினைத்து பிரார்த்தித்தால், நல்ல மணவாழ்க்கை அமையும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.