வடகொரியா Vs தென்கொரியா: பிரிந்தது எப்படி? – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? பகுதி- 2

0
620

லக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் போன்ற எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமெரிக்காவைக் குறிவைத்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன.

thani_oruvan_2_12436இந்த நிலையில்தான் வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மீது வடகொரியாவுக்கு ஏன் இந்தத் தீராப் பகை என்பதற்கான ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவதற்கு முன்னர், கொரிய தீபகற்பம் ஏன் பிளவுபட்டது, வடகொரியா – தென்கொரியா போர் எதனால் ஏற்பட்டது எனத் தெரிந்துகொண்டால்தான், அதற்கான விடைக்குள் செல்ல முடியும்.

kim_red_600_12148

கொரிய தீபகற்பத்தை ஆண்டு வந்த கார்வியோ வம்சத்தின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், 1932-லிருந்து ஜோஸியான் வம்ச ஆட்சிதான் சுமார் 50 ஆண்டு காலம் ஆண்டு வந்தது.

1910-ல் கொரியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டைத் தனது ஆளுமையின் கீழ் இணைத்துக்கொண்டது ஜப்பான். அதனைத் தொடர்ந்து 1910 முதல் 1945 வரை சுமார் 35 ஆண்டு காலம், ஜப்பானின் கொடூரமான காலனி ஆதிக்கத்தில்தான் கொரியா இருந்து வந்தது.

இந்தக் காலகட்டங்களில் கொரிய மக்கள் தங்கள் கலாசாரத்தையும் மொழியையும் பாதுகாக்க மிகவும் போராடினர். பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கொரிய மொழியோ அல்லது வரலாறோ பயிற்றுவிக்க அனுமதிக்கப்படவில்லை.

மக்கள் தங்கள் பெயர்களை ஜப்பானிய பெயர்களாக மாற்றிக்கொள்ளுமாறும், ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அதுமட்டுமல்லாது கொரியா வரலாறு தொடர்பான ஏராளமான முக்கிய ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விவசாய நிலங்களில் ஜப்பானியத் தேவைக்கான பயிர்கள் என்னவோ அவைதான் பயிரிடப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில்தான் இரண்டாம் போர் வெடித்து, அதில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்டதும் கொரிய மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், பாவம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அடுத்து எந்த மாதிரி பாதிக்கப்படப் போகிறோம் என்று.

2-ம் உலகப்போரும் ஜப்பானின் சரணாகதியும்

இந்தக் கட்டத்தில்தான் கொரிய தீபகற்பம் ஏன் பிளவுபட்டது, அதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945-ம் ஆண்டு ஜப்பான், நேச நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய சோவியத் யூனியன் அரசு அதிரடியாக கொரியாவின் வட பகுதிக்குள் புகுந்து, ஜப்பான் வீரர்களை விரட்டியடித்துவிட்டு அதனைக் கைப்பற்றத் தொடங்கியது.

அதே சமயம் இதே எண்ணத்துடன் இருந்த அமெரிக்காவின் துருப்புகள், கொரிய தீபகற்பத்திலிருந்து சுமார் 500 மைல் தொலைவில் இருந்ததாலும், ஜப்பான் இத்தனை சீக்கிரம் சரணடைந்துவிடும் என்று எதிர்பார்க்காததாலும், நடப்பதைத் திகைப்புடன் பார்த்தபடியே, ” ஐயோ… விட்டால் ஒட்டுமொத்த கொரியப் பகுதியையும் சோவியத் ரஷ்யா ஸ்வாகா செய்துவிடும்” என அலறியபடியே, சோவியத் ரஷ்யாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தது.

japan_surrender_to_US_12246

விடுதலையில் முளைத்த கொரியப் பிரிவினை…

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானைச் சரணடையச் செய்ததில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதால், ‘வடக்குப் பகுதி எனக்கு… தெற்கு பகுதி உனக்கு’ என ரஷ்யாவும் அமெரிக்காவும் உடன்படிக்கை செய்துகொண்டு கொரியாவைப் பிரித்துக்கொண்டன.

38-வது அட்சயக் கோட்டின் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்றும் இரு நாடுகளாக ஆனது.

இந்த நிலையில், வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களும் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் ஆதிக்கமும் சேர்ந்து கொரியாவை ஆட்டிப்படைக்க, 1947-ல் ஐ.நா. தலையிட்டு, அதன் மேற்பார்வையில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டுக்கும் ஒரே ஜனநாயக அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால் நம்பிக்கையின்மை மற்றும் நன்கு திட்டமிடாதது போன்ற காரணங்களால் அத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியாமல் போனது.

வடகொரியாவில் தேர்தலை நடத்தவிடாதவாறு சோவியத் ரஷ்யா தடுத்ததோடு, முன்னாள் ஜப்பானிய கெரில்லா எதிர்ப்பாளரும் கம்யூனிஸ ஆர்வலருமான, Kim Il-sung ஐ, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பிரதமராக நியமித்தது.

1947-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், Kim Il-sung -ன் அரசுதான் கொரியாவின் இரண்டு பாகங்கள் மீதும் அதிகாரம் உள்ள அரசு என்று சோவியத் ரஷ்யா அறிவித்தது.

தென்கொரியாவிலும் அதே கதைதான். அமெரிக்காவின் ஆதரவுடன், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக, கம்யூனிஸ எதிர்ப்பாளரான Syngman Rhee, புதிதாக அறிவிக்கப்பட்ட குடியரசின் முதல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். Syngman Rhee -ன் அரசை, சட்டபூர்வமான அரசாங்கம் என்று ஐ.நா அறிவித்தது.

38_th_parallel_12598

3 ஆண்டுகள்… முற்றுப்பெறாத போர்

இந்த நிலையில், இரு தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொரியாவை ஒருங்கிணைக்க முற்பட்டனர். இதனால் அவ்வப்போது எல்லை தாண்டி இலேசாக மோதிக் கொண்டிருந்த நிலையில்தான், தென் கொரியாவின் ராணுவ ஆதரவு கோரிக்கையை, அமெரிக்கா மறுத்தது. அதே சமயத்தில், வட கொரியாவின் ராணுவத்தை சோவியத் ஒன்றியம் வலுப்படுத்தியது.

இதனையடுத்து உற்சாகமடைந்த வடகொரியா, ஜூன் 25, 1950-ல் தென் கொரியா மீது படையெடுத்தது. அந்தக் கொரியப் போர்தான் முதல் பெரிய மோதல்.

அந்தப் போர், 1953 ஜுலை வரைத் தொடர்ந்தது. அந்தச் சமயத்தில், சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தைப் புறக்கணித்தது.

இந்த நிலையில், போர் தொடங்கிய நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒட்டு மொத்த கொரியாவின் 90 சதவிகித பகுதிகளை வடகொரிய துருப்புகள் பிடித்தன.

இனியும் தாமதித்தால், வட கொரியாவின் சக்தி வாய்ந்த படைகள், கொரியாவை ஒன்றுபடுத்தி விடுவார்கள் என்பது தெரிந்ததும், ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்தது.

சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் வட கொரியாவை ஆதரித்தது. வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு பகுதிகளிலும் பொதுமக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டனர்.

north_korean_fight_600_12095

அதே சமயம் ஐ.நா. தலையிட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பதினாறு நாட்டுப் படைகள் சென்று, வட கொரியா மற்றும் ரஷ்யாவின் பிடியிலிருந்து தென்கொரியாவை விடுவித்து, ஒரு வழியாக இருநாடுகளும் போர் நிறுத்தம் செய்தன.

மூன்று ஆண்டுகளாக நடந்த போரில் பலத்த சேதங்கள். ஒரு இனமாக, மொழியாக ஒன்றுபட்டிருந்த கொரிய மக்கள் சுமார் 12 லட்சம் பேர் இந்தப் போரினால் உயிரிழந்தனர்.

அமெரிக்க ராணுவத் தரப்பிலும் சுமார் 36,000 வீரர்கள் பலியாயினர். பல ஆயிரக்கணக்கான சீனத் துருப்புகளும் இந்தப் போரினால் உயிரிழக்க நேரிட்டது.

இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னர், இரு நாடுகளின் எல்லையில் ராணுவமயமற்ற வலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததால், தொழில்நுட்பரீதியாக அங்கு இன்னும் போர் நிறுத்தம் அமலில் இல்லை.

இது குத்துமதிப்பான யுத்த நிறுத்தமாகத்தான் இருந்தது. முழுமையான யுத்த நிறுத்தம் ஒன்று அமைதி உடன்படிக்கைக்குப் பின் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சொல்லப்பட்ட அந்த ‘அமைதி உடன்படிக்கை’ அரை நூற்றாண்டைக் கடந்து இன்னும் ஏற்படவில்லை.

வடகொரியா Vs தென்கொரியா: வேறுபாடுகள் என்ன?

* தென்கொரியாவைத் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து ஒன்றுபட்ட கொரியாவை உருவாக்கிவிட வேண்டும் என்ற தனது மூதாதையர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான், தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தொடர்ந்து அணு ஆயுதச் சோதனையை நடத்தியும், எல்லையில் தாக்குதல் நடத்தியும் ராணுவ வலிமை மூலம் ஒன்றுபட்ட கொரியாவை உருவாக்கிவிட வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார்.

* தென்கொரியாவுக்கு ஒன்றுபட்ட கொரியாவாக ஒன்றிணைய வேண்டுமென்ற விருப்பம் இல்லையா என்றால், இருக்கிறது, ஆனால் அதை ஜனநாயக மற்றும் முதலாளித்துவ முறைகளில் ஒன்றிணைக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் வடகொரியாவோ தனது முதல் கம்யூனிஸ ஆட்சியாளரான Kim Il-sung -ன் Juche சித்தாந்தத்தின்படி ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறது.

* ஒன்றுபட்ட கொரியாவின் தலைவரை ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தென்கொரியா விரும்புகிறது. ஆனால் வடகொரியாவோ தற்போதைய அதிபர் கிம் ஜாங்கும், அவரது வாரிசுகளும் கொரியாவை ஆள வேண்டும் என விரும்புகிறது.

* முதலாளித்துவ கொள்கைதான் தனது பொருளாதாரத்துக்கு ஆதாரமானது என்று தென்கொரியா கருதுகிறது. ஆனால் வடகொரியாவோ கம்யூனிஸ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.

* வடகொரியா ஒரு முழுமையான ராணுவ மயமாக்கப்பட்ட தேசமாக உள்ளது. ஆனால், தென்கொரியாவோ ராணுவத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், ராணுவயிசத்தைத் தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

kimjong_with_missile_600_12137

* வடகொரியா ஒரு சர்வாதிகாரியின் ( கிம் ஜாங் உன் ) கீழ் கம்யூனிஸ பாணி அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. அனைத்துத் துறைகளும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படுகின்றன.

பழைமையான அதே சமயம் மிகவும் பலம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது வடகொரியா. அந்த நாட்டின் தற்போதைய ஒரே ஆதரவாளர் சீனா மட்டுமே.

* தென்கொரியா மேற்குலக நாடுகளைப் போன்று ஜனநாயக அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் அதனைக் காட்டிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, ஏனைய உலக சமுதாயத்தினருக்கும் தனது நாட்டில் இடமளித்துள்ளது.

* தென்கொரியா மேற்குலக நாடுகளைப் போன்று ஜனநாயக அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் அதனைக் காட்டிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, ஏனைய உலக சமுதாயத்தினருக்கும் தனது நாட்டில் இடமளித்துள்ளது.

* தென்கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதும் கிடையாது; ஆனால் வடகொரியாவைக் காட்டிலும் அமெரிக்க ஆதரவுடன் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ராணுவத்தைக் கொண்டுள்ளது. இதனால், தென்கொரியா ராணுவ ரீதியில் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொண்டு வருகிறது வடகொரியா.

 

ஒலிபெருக்கிக் கட்டி தெருச் சண்டை!

ம்ம ஊரில் தண்ணீர் பிடிக்கும் இடங்களில் குழாயடிச் சண்டை எப்படிச் சில நேரங்களில் சுவாரஸ்யமாக இருக்குமோ அதேபோன்றுதான் வடகொரியாவும் தென்கொரியாவும் தங்கள் எல்லைப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கும் சண்டையிலும் ஈடுபட்டு வந்தன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தத் தெருச்சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. இரண்டாவது உலகப் போரோடு ஆரம்பமான வரலாற்றுப் பெருமைகொண்டது.

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இடையில் சில வருடங்கள் இல்லாமலிருந்தாலும் அவ்வப்போது இது தொடரத்தான் செய்கிறது.

NS_korea_border_12228

தென்கொரியா, தனது வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகளைப் பெருத்தும். அந்த ஒலிபெருக்கிகளைச் சத்தமாகப் போட்டு, வட கொரிய எல்லையில் இருப்பவர்களுக்குக் கேட்கும்படி, அந்த நாட்டை கன்னாபின்னவென்று திட்டித் தீர்க்கும். மேலும் தென் கொரியாவை புகழ்ந்துபாடும்.

சர்வதேச செய்திகளையெல்லாம் வடகொரியாவை வெறுப்பேத்தும். பதிலுக்கு வட கொரியாவும் தனது எல்லையில் ஒலிபெருக்கியைப் பொருத்தி, தென் கொரியாவை திட்டித் தீர்க்கும் என்றாலும் வட கொரியா, தனது உத்தமத் தலைவர் கிம் ஜாங் உன்னை திட்டினால் பொறுத்துக்கொண்டிருக்காது. எனவே உசுப்பேற்றும் வகையில் தென் கொரியாவும் அதனையே செய்யும்.

தென் கொரியா இப்படி ஒலிபெருக்கிக் கொண்டு திட்டுவதோடு நிற்காது. பலூன்களில் துண்டுப் பிரசுரங்களைக் கட்டி அதனை வடகொரியாவை நோக்கிப் பறக்க விட்டு வசைபாடும்.

இப்படி பலூன் பறக்கவிட்டதால் கோபமடைந்த வடகொரியா, தென் கொரியாவை நோக்கி கண்மூடித்தனமாகச் சுடும். மேலும் இரு நாடுகளும் அடுத்த நாட்டுக்குத் தெரியும்படி ராட்சஷ பதாகைகளைச் செய்து அதன் மூலம் எதிரி நாட்டை திட்டித் தீர்க்கும். பொதுவாக வடகொரியா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறுவதில்லை. எனவே அப்படியான நாள்களில், தென்கொரியா தனது வடகொரிய எல்லையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பெரிதாக நடத்தி வட கொரியாவைச் செம்மையாக வெறுப்பேத்தும்.

=================================================================

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்…

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.