ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், கடத்தப்படும் போது 5 மாணவர்களும் பயணித்த கறுப்பு நிறக் கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தகவல்களை மையப்படுத்தி விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி கறுப்பு நிற இன்டிகோ ரகத்தை சேர்ந்த குறித்த கார், 2008.09.17 ஆம் திகதி மாணவர்களுடன் சேர்த்து கடத்தப்பட்ட பின்னர், சுமார் ஒரு வருடமாக கடற்படை தலைமையகத்தின் அதி பாதுகாப்பு வலயமான கடற்படை தளபதியின் வாகனம் தரித்து வைக்கப்படும் இடத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை, பின்னர் அது தர்மதாஸ எனும் சந்தேக நபராக கிரி உல்ல நகரில் வைத்து இரண்டாம் சந்தேக நபர் ரணசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி.க்கு தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் கடத்தல், கப்பம் கோரல், காணாமல் அககப்பட்ட்மை தொடர்பில் பூரணமாக அறிந்திருந்த நிலையில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட அதனை மூடி மறைத்துள்ளதாகவும், 2013 ஆம் திகதி 2 ஆம் சந்தேக நபர் கொமாண்டர் ரணசிங்க தனது சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து இந்த விவகாரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்ற கோரியதாகவும் விஷேட விசாரணை அறிக்கை ஊடாக பொலிஸ் பரிசோதகர் கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 9 பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்படை புலனாய்வாளர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் அன்றைய தினம் இது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.
சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையில் விளக்கமறியலில் உள்ள கடற்படை புலனயவுப் பிரிவின் முன்னாள் வீரரான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் ஆகியோர் நேற்று சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது மன்றுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, அவ்வறிக்கையில் தெரிவித்திருந்ததாவது
கடந்த 2009.05.28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடளிக்கும் போது, இந்த 11 பேரின் கடத்தல், தடுத்து வைப்பு, காணாமல் ஆக்கப்பட்டமை, கப்பம் கோரியமை தொடர்பில் பூரணமாக அறிந்திருந்துள்ளார்.
அத்துடன் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்த போதும் அவருடன் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்த லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி என்பதையும் அறிந்திருந்தார்.
அத்துடன் ஹெட்டி ஆரச்சியை மேற்பார்வை செய்தவர் கொமாண்டர் டி.கெ.பி. தசநாயக்க என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனினும் இவற்றை அவர் மூடி மறைத்தே முறைப்பாட்டை செய்துள்ளார்.
இதனைவிட இந்த விவகாரத்தில் இரண்டாம் சந்தேக நபர் கொமாண்டர் சுமித் ரணசிங்க, கடந்த 2013 ஆம் அண்டி மாலை வேளை ஒன்ரில் தனது சட்டத்தரணியுடன் அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சரும் தற்போது சி.ஐ.டி. பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை சந்திக்க வந்தார்.
அப்போது அவரால் புரியப்பட்ட யுத்த பங்களிப்பு குறித்து விளக்கப்பட்ட நிலையில், பின்னர் இந்த கடத்தல்களை லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க செய்ததாகவும் பின்னர் அவர் அவர்களை தன்னிடம் கையளித்ததாகவும், பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் கூறினார்.
எனினும் இதற்கு சம்பத் முனசிங்கவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தன்னை விடுவித்து இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சட்டத்தரணி ஊடாக ரணசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைவிட கடத்தப்பட்ட மாணவர்கள் பயணித்த ரஜீவ் நாகநாதனுக்கு சொந்தமான் கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதனை மையப்படுத்தி விசாரணை இடம்பெறுகின்றது.ரஜீவ் நாகநாதனுக்கு சொந்தமான் கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை மையப்படுத்தி விசாரணை இடம்பெறுகின்றது. என குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்கடடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வேறு ஒரு பிரிவுக்கு மாற்றுமாறு கோரும் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அசித் சிரிவர்தன, அது தொடர்பில் நேற்று எழுத்து மூல வாதங்களை சமர்ப்பித்தார்.
இந்நிலையில் அது குரித்த தீர்மானத்துக்காகவும் விளக்கமறியல் தொடர்பிலான் உத்தரவுக்காகவும் வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.