அவசர நிலை பிரகடனத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதி, நீதிபதிகள் கைது!!

0
1106

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்த சில மணி நேரங்களுக்குள் இராணுவம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளது.

இதனை ஒரு ‘களையெடுப்பு’ நடவடிக்கை என்று எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தலைமை நீதியரசர் அப்துல்லா சயீத் மற்றும் நீதிபதி அலி ஹமீத் ஆகியோர் நேற்று செவ்வாய்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் டுவிட்டர் ஊடே குறிப்பிட்டுள்ளது. எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து என்ற விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் சிலரை விடுதலை செய்வது குறித்து ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தனது எதிர்ப்பாளர்கள் ஒன்பது பேருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் கைவிட்டது சட்டவிரோதமானது எனக் கூறி கடந்த திங்கட்கிழமை யாமீன் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றிவளைக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி, தனது ஒன்றுவிட்ட சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூமை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். அவர் எதிர்க் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வந்துள்ளார்.

அரச தொலைக்காட்சியில் அவசர நிலையை பிரகடனம் செய்து உரையாற்றிய நீதி அமைச்சர் அசிமா ஷகூர், பெப்ரவரி 1 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதாகவும் மக்கள் நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை மீறுவதாகவும் குறிப்பிட்டார்.

“அரசியல் கைதிகளை விடுவிக்க கோரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த முடியும் என்று அரசு நம்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவசரநிலை பிரகடனத்தின் மூலம் பாதுகாப்பு படைகளுக்கு கைது நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு நீதித்துறையின் குறிப்பிட்ட அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. அதேபோன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ரத்து செய்யப்படுகிறது.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் யாமீன், எதிர்க் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பாராளுமன்ற செயற்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளார்.

நாட்டில் இருந்து வெளியேறி இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத், இந்த அவசர நிலையை, “மாலைதீவில் இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு சமனானது” என்று குறிப்பிட்டுள்ளார்்.

நஷீத் மீதான 13 ஆண்டு சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரத் ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரகடனம் ‘அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது’ என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டள்ளது.

“அட்டவிரோதமான உத்தரவுகளை மாலைதீவின் எவரும் கடைப்பிடிக்கவோ, பின்பற்றவோ தேவையில்லை” என்று வலியுறுத்தியுள்ளார்.

“அவசரநிலை அரசியல் எதிர்ப்பாளர்கள், நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தில் களையெப்பு ஒன்றை மேற்கொள்ள மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஏவா அப்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் சுற்றிவளைப்பு

திங்களன்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட விரைவிலேயே பாதுகாப்பு படையினர் உச்ச நீதிமன்ற கட்டடத்தை நோக்கி விரைந்தனர்.

நீதிபதிகள் உள்ளே இருக்க படையினர் நீதிமன்றத்தை மூடியதாக முன்னாள் சட்டமா அதிபரும் மாலைதீவு வழக்கறிஞர் சங்க தலைவருமான ஹுஸ்னு அல் சுவூன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எந்த உணவும் இன்றி இருப்பதாக குறிப்பிட்ட சுவூன், தம்மையும் நீதித்துறையையும் பாதுகாக்கும்படி நீதியரசர் மக்களிடம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற கட்டடத்தை நோக்கி செல்லும் வீதிகளை தடுத்து படையினர் மற்றும் பொலிஸார் கலவரம் ஒன்றை அடக்கும் பாணியில் தடுப்புகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் மிளகாய் பொடி தெளித்து கலைத்துள்ளனர்.

இரு நீதிபதிகள் தவிர, நீதித்துறை தலைமை நிர்வாகி ஹஸன் சயீத் ஹுஸைனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக திங்கட்கிழமை இரவு கயூமின் வீட்டுக் கதவை உடைத்த பொலிஸார் அரசை கவிழ்க்க சதி செய்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அவரை கைது செய்தனர். கயூமின் மருமகனும் கைது செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தான் கைது செய்யப்படும் முன்னர் வீடியோ ஒன்றின் மூலம் டுவிட்டரில் தனது ஆதரவாளர்களுக்கு கருத்து வெளியிட்ட கயூம், “சீர்திருத்தத்திற்கான பணியை கைவிடப்போவதில்லை” என்று குறிப்பிட்டார்.

“நான் கைது செய்யப்படுவதற்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு தீர்வுகாண தொடர்ந்து உறுதியாக இருக்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகள் மாலைதீவில் ஆட்சியில் இருந்த 80 வயது கயூம் தனது முன்னாள் போட்டியாளரான நஷீத் தரப்புடன் இணைந்து செயற்படுகிறார்.

அவரது மகன் பாரிஸ் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஊச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அவரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

‘இந்திய இராணுவ உதவ வேண்டும்’

நாட்டில் இருந்து வெளியேறி வாழும் முன்னாள் ஜனாதிபதி நஷீத் மாலைதீவில் தற்போதைய பதற்றத்தை தணிக்க இந்தியாவின் உதவியை கோரியுள்ளார்.

இராணுவ ஆதரவு கொண்ட தூதுக் குழுவை மாலைதீவுக்கு அனுப்பி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கொழும்பில் இருந்த வரும் நஷீத் டுவிட்டர் அறிவிப்பொன்றில் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்தியா தனது இராணுவத்தின் ஆதரவு கொண்ட தூதுக் குழு ஒன்றை அனுப்பி நீதிபதிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று மாலைதீவு மக்கள் சார்பில் நாம் தாழ்மையாக வேண்டுகிறோம். நாம் நேரடியான தலையீடு ஒன்றை கோருகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாமீன் அரசின் நிதி பரிமாற்றங்களை முடக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவையும் கோரியுள்ளார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நஷீத் மருத்துவ சிகிச்சைக்காக 2016 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் பிரிட்டனில் தஞ்சம் பெற்றார்.

பிரதான கப்பல் போக்குவரத்து பாதையில் அமைந்திருக்கும் மாலைதீவில் சீனா அண்மைக்காலமாக அதிக செல்வாக்கு செலுத்தி வருகிறது. சீனா அங்கு அரசியல் மற்றும் பொருளாதார உறவை பலப்படுத்தியுள்ளது.

எனினும் இந்தியா அந்த தீவுகள் மீது வரலாற்று ரீதியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும்படி யாமீன் அரசுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

எனினும் இந்தியா மாலைதீவில் கடந்த காலத்தில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு கூலிப்படை தொடர்புபட்ட சதிப்புரட்சி ஒன்றை முறியடிக்க இந்தியா இராணுவத்தை அனுப்பியது.

மாலைதீவில் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் அவசர நிலை குறித்து அதிருப்தியை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி, இராணுவம் மற்றும் பொலிஸ் கட்டுப்படாதது குறித்தும் அதிருப்தியை வெளியிட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.