“ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் சாவு: திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி”- (வீடியோ)

0
438

திருப்பத்தூர்: சாமல்பட்டி அருகே ரயிலிலிருந்து திருநங்கை தள்ளிவிட்டதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த திருநங்கை சுவேதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஜோலார்பேட்டை மார்க்கமாக கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே விரைவு ரயில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த சுவேதா (36) என்ற திருநங்கை ரயிலில் ஏறியுள்ளார்.

அவர், அதே ரயிலில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்திதைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் திருநங்கைக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுவேதா 2 இளைஞர்களை எட்டி உதைத்தாராம்.

இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் (32) ரயிலில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி திருப்பத்தூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சத்திய நாராயணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் திருநங்கை சுவேதா தள்ளிவிட்டதில் இளைஞர் இறந்தது தெரியவந்தது. அப்போது, அதே ரயிலில் இருந்த 3 திருநங்கைகளை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

தகவலறிந்த வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் எஸ்.கே.கங்கா சுமார் 260 திருநங்கைகளுடன் திருப்பத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து ரயில்வே ஆய்வாளரிடம் திருநங்கைகள் கூறுகையில், ரயிலில் பணம் கேட்டு பிரச்னை செய்த திருநங்கை சுவேதா எங்களது சங்கத்திலோ, நலவாரியத்தில் உறுப்பினராக இல்லை.

இதனால், எங்களுக்கு அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால், சம்பந்தமில்லாமல் பிடித்து வைத்துள்ள 3 பேரை விடுவிக்க வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள சுவேதாவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

விசாரணைக்கு பிறகு இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ரயில்வே போலீஸார் அறிவித்தனர்.

திருநங்கை சுவேதா மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீஸார் தன்னைத் தேடுவதையறிந்த திருநங்கை சுவேதா, எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.