“மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்தில் 19 கல் தூண்கள் சேதம்”

0
281

“மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வீரவசந்தராயர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வெப்பத்தால் இடிந்து விழுந்த மேற்கூரைப் பகுதி கற்கள்.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வீரவசந்தராயர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வெப்பத்தால் இடிந்து விழுந்த மேற்கூரைப் பகுதி கற்கள்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 கடைகளும், தீ வெப்பத்தால் சுமார் 19 கல் தூண்களும் சேதமடைந்திருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு ராஜகோபுரம் உள்பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் எதிரே வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகளில் திடீரென தீப்பற்றியது.

கோயில் பள்ளியறைப் பூஜை நடந்து முடிந்து நடைகள் சாத்தப்பட்ட நிலையில் இரவு 10.30 மணிக்கு தீப்பற்றியது. மதுரையில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், தீ விபத்து நடந்த இடத்திலிருந்து பகல் முழுவதும் புகை வெளியேறிக்கொண்டிருந்தது.

தீயணைப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து விடிய விடிய தீயை அணைத்த பின்னரும், தூண்களையும், வீரவசந்தராயர் மண்டப மேற்பகுதியையும் குளிர்விக்கும் வகையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது தீ விபத்து ஏற்பட்ட கடைகள் அமைந்திருந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் 7 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவுக்கு தீ பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இதில் 20 கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டிய பகுதியில் 13 கடைகள் முற்றிலுமாக எரிந்த நிலையில், எதிர்ப்பகுதியில் 7 கடைகளில் 4 கடைகள் முற்றிலுமாக எரிந்திருந்தன.

தீ விபத்துக்குள்ளான கடைகள் அமைந்திருந்த ஆயிரங்கால் மண்டபம் முன்புள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் மொத்தம் 32 கல் தூண்கள் உள்ளன.

ஒரு பக்கத்துக்கு 8 தூண்கள் என்ற அடிப்படையில் நான்கு பிரிவாக தூண்கள் அமைந்திருந்தன.

மேற்கூரை உயரம் சுமார் 25 அடிக்கும் மேற்பட்டிருந்தபோதிலும் தீ சேதமடைந்த மேற்பகுதியில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து விழுந்திருந்தன.

கிழக்கு ராஜகோபுரத்திலிருந்து செல்லும்போது வீரவசந்தராயர் மண்டபத்தின் வலது புறம் பகுதியில் அதிக தூண்கள் தீயின் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

அங்கு தூண்களின் கீழே அதிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைகளின் மேற்கூரையில் பற்றி எரிந்த தீயின் ஜுவாலையின் வெப்பம் அங்கிருந்த தூண்களை அதிகம் பாதித்திருந்தது.

தூண்களில் கருப்பு நிறத்தில் கரித்தூள் படிந்திருந்தன. மேற்கூரையிலும் கரும்புகை தூள்கள் படிந்திருந்தன. ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டிய மின் இணைப்பு பகுதியும் சேதமடைந்திருந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்து தொடர்பாக தடயவியல் நிபுணர்களும், பொதுப்பணித் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கோயில் செயல் அலுவலர் என். நடராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மண்டப வரலாறு: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள கோபுரங்களில் மிகவும் பழமையான, உயரமான கோபுரம் கிழக்குக் கோபுரமாகும். மாறவர்ம சுந்தரபாண்டியனால் இக்கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 வரை கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து உள்ள வீரவசந்தராயர் மண்டபமானது கடந்த கி.பி. 1611ஆம் ஆண்டு முத்து வீரப்பநாயக்கரால் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அதில் பல கலைநயமிக்கத் தூண்களும், சிற்பங்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் கசிவு காரணமா?
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வசந்தராயர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து திலகர்திடல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தீயணைப்புத் துறை சார்பில் ஆரம்பக் கட்ட ஆய்வில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் என். நடராஜனிடம் கேட்டபோது, தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து சிறப்புக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். எனவே மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணமா? என இப்போது கூறமுடியாது. விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.

கோயிலுக்குள் கடைகள் அனைத்தும் மரப்பலகை மற்றும் எளிய அட்டைகள் (காட்போர்டுகள்) மூலமே அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவிலே தகரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் எளிதில் தீப்பற்றும் சூடம், நெய் போன்றவையும் விற்கப்பட்டுள்ளன. எனவே எதனால் தீ விபத்து நிகழ்ந்தது என்பது விசாரணை முடிவிலே தெரியவரும் என்கிறார்கள் கோயில் அலுவலர்கள்.

ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் கிழக்கு ராஜகோபுரத்தில் இடி தாக்கியது. இதில் கோபுர சுதைகள் சேதமடைந்தன. இதையடுத்திருந்த வீர வசந்தராயர் மண்டப மேற்கூரையும் அப்போது லேசாக சேதமடைந்து, சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.