குடும்பத்தகராறு.. மகன், மகளுடன் அணையில் குதித்து கணவர் தற்கொலை..

0
272

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). இவரது மனைவி ஹேமாவதி (32). இவர்களது மகள் கெஜலட்சுமி (12), மகன் ராஜேஷ் (7). கெஜலட்சுமி 7-ம் வகுப்பும், ராஜேஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜீவா காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

கடந்த சில மாதங்களாக ஜீவாவுக்கும், அவரது மனைவி ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துவந்தது.

சில தினங்களுக்கு முன்பு ஜீவாவும், மகன் ராஜேசும் திருப்பதிக்கு சென்று முடி காணிக்கையாக மொட்டை போட்டனர். மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஹேமாவதி கோபித்துக் கொண்டு ஆம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மகனும், மகளும் தந்தையுடன் இருந்துவந்தனர். நேற்று முன்தினம் காலை ஜீவா தன் வீட்டின் அருகே உள்ள பெற்றோரிடம் மகன், மகளை பள்ளியில் விட்டுவருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

மதியம் ஜீவா வீட்டுக்கு வராததால் அவரது செல்போனுக்கு போன் செய்தபோது கிடைக்கவில்லை.

மாலை பள்ளியில் இருந்து கெஜலட்சுமி, ராஜேஷ் ஆகியோர் வீட்டிற்கு வராததால் ஜீவாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கு சென்று விசாரித்தபோது அவர்கள் பள்ளிக்கு வராதது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மோர்தானா அணை பகுதியில் மாடு மேய்த்துவிட்டு கிராமத்தினர் வந்தபோது மோட்டார்சைக்கிளும், புத்தகப்பைகளும், செருப்புகளும் இருந்தன. பையில் பள்ளி அடையாள அட்டையும், அதில் வீட்டு முகவரியும் இருந்ததை பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரித்தபோது ஜீவாவும், அவரது பிள்ளைகளும் காணாமல்போனது தெரியவந்தது. உடனடியாக உறவினர்களும், போலீசாரும் அணை பகுதிக்கு சென்றபோது இரவு நேரம் என்பதால் எதுவும் தெரியவில்லை.

மீண்டும் நேற்று காலை போலீசார் மற்றும் ஜீவாவின் உறவினர்கள் மோர்தானா அணை பகுதிக்கு சென்று தேடினர்.

பகல் 12 மணி அளவில் கெஜலட்சுமி மற்றும் ராஜேசின் உடல்கள் அணையில் மிதந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணையில் இருந்து உடல்களை மீட்டனர்.

தொடர்ந்து அணையில் தேடி ஜீவாவின் உடலையும் மீட்டனர். 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஜீவா மகன், மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.