“8 பெண்களை ஏமாற்றித் திருமணம்: மகளுடன் தொழிலதிபர் கைது: 25 – க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு”

0
352

 கோவையில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த தொழிலதிபர் புருஷோத்தமன், அவரது மகளை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

கோவை, வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (53). இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், காந்திபுரத்தில் உள்ள திருமணத் தகவல் மையத்தின் உதவியுடன் பல்வேறு பெயர்களில் 8 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதாக கோவை, பி.என்.பாளையத்தை பெண் ஒருவர் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போத்தனூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

இதில்,கோவை, வெள்ளலூரில் வசித்து வரும் புருஷோத்தமன் தன்னைத் திருமணம் செய்து 850 பவுன் நகையை வாங்கி மோசடி செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகள் கீதாஞ்சலி, திருமணத் தகவல் மையத்தின் நிர்வாகிகள் மோகனன், வனஜாகுமாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில் கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், திருமணத் தகவல் மையம் நடத்தி வந்த மோகனன், வனஜாகுமாரி ஆகியோரையும் ஜனவரி 13-ஆம் தேதி கைது செய்தனர்.  இந்நிலையில், தலைமறைவாக இருந்த புருஷோத்தமன், அவரது மகள் கீதாஞ்சலி ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், புருஷோத்தமன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
மும்பை, கொல்கத்தாவில் ஆன்லைன் மூலமாக நூல் மற்றும் பஞ்சு வியாபாரிகளை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளேன்.

வசதி படைத்த, ஆதரவற்ற, கணவரை இழந்த, மறுமணம் செய்ய இருந்த பெண்களை தனியார் திருமணத் தகவல் மையம் மூலமாகத் தொடர்பு கொண்டு எனது மகளுடன் வீட்டுக்குச் சென்று சந்திப்பேன்.

என்னுடைய வீட்டுக்கும் அழைத்து வந்து ஆறுதலாகவும், ஆசை வார்த்தை கூறியும் திருமணம் செய்வேன். ஓரிரு மாதங்களில் பணம், நகைகள், விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மோசடி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

25-க்கும் மேற்பட்ட வழக்குகள்: 
இதனிடையே, புருஷோத்தமன் மீது கோவை மட்டுமின்றி திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ஸ்ரீ வில்லிப்புத்தூர், கடலூர் மற்றும் பிற மாநிலங்களான பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகியவற்றிலும் 25-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இருப்பதாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.