தேர்தல் களம் – உள்ளுராட்சித் தேர்தலும் தமிழ்ப் பெருந்திரள் அரசியலும்!! – கருணாகரன் (கட்டுரை)

0
377

“தமிழர்களின்ர அரசியலை நினைச்சால் முதல்ல சிரிப்பு (நகைப்பு) வரும். பிறகு  கோபம் வரும். அப்பிடியே கொஞ்சம் சீரியஸாகவே பார்த்துக் கொண்டிருந்தம் எண்டால் பைத்தியந்தான் பிடிக்கும்” என்கிறார் முதியவர் ஒருவர்.

இதைச் சொல்லும்போதே அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தார். சட்டென முகம் கறுத்துக் கோபத்தின் சாயல் தெரிந்தது.

அடுத்த நிலை வருவதற்கிடையில் அவரிடம் பேச்சுக்கொடுத்தேன், “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்? தமிழ்தரப்புகள் முன்னெடுக்கிற அரசியல்ல என்ன பிழையிருக்கு?” என.

“தம்பி, இப்ப வந்திருக்கிற தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களுக்கானது. முந்தி இதை வீ.ஸி எலெக்ஸன் எண்டு சொல்லுவம். நானும் ஒரு காலம் மெம்பராக (உறுப்பினராக) இருந்தவன்.

அப்ப ஒவ்வொரு குறிச்சிக்கும் (கிராமங்களுக்கும்) ஒவ்வொரு மெம்பர் தெரிவு செய்யப்படுவினம்.

இவையின்ரை வேலை, தங்கட தங்கட ஊர்களில என்ன தேவையிருக்கோ, அதையெல்லாம் செய்து குடுக்கிறதுதான். வீ.ஸி (இன்றைய பிரதேச சபைகள்) யின்ரை அதிகாரத்துக்குள்ள செய்யக் கூடிய வேலையள்தான் எல்லாம்.

எங்கட ஊரில தண்ணிப் பிரச்சினை இருந்தது. அப்ப சனங்களுக்குத் தனித்தனிக் கிணறெல்லாம் கிடையாது. இதால, நாங்கள் கிணறுகளைக் கட்டிக் குடுத்தம்.

இப்பவும் ஊரில நான் பொறுப்பா நிண்டு கட்டிக் குடுத்த கிணறுகளிருக்கு. அதில வீஸியின்ரை பேரே பொறிச்சிருக்கு. இதைத்தான் “பொதுக்கிணறு” எண்டு சொல்லுறது. இல்லாட்டிக்கு “வீஸீக்கிணறு” எண்டும் சொல்லுவினம்.

இந்த மாதிரி வீஸியின்ரை (பிரதேச சபை அல்லது நகரசபை அல்லது மாநகர சபை) அதிகாரத்துக்குட்பட்ட வேலைகளைச் செய்யிறதுக்கான மக்கள் சபை ஒண்டை அமைக்கிறதுக்கே உள்ளுராட்சி சபைத்தேர்தல் நடக்குது.

இதுக்குப் போய் ஏதோ பெரிய பெரிய அரசியல் சாயத்தையெல்லாம் (காரணங்களை எல்லாம்) பூசிக்கொண்டிருக்கிறான்கள்.

உண்மையாச் சொல்லுங்கோ…. இந்தத் தேர்தலுக்கும் இவை சொல்லுகிற அரசியற் காரணங்களுக்கும் என்ன சம்மந்தமெண்டு?” என்று திருப்பிக் கேட்டார் அவர்.

அந்தப் பெரியவர் சொல்கிற நியாயத்தையும் அவர் கேட்கிற கேள்விகளையும் நாம் புறக்கணிக்க முடியாது.

நிச்சயமாகக் கவனிக்க வேணும். ஒன்று, அவை அவருடைய அனுபவம். அந்த அனுபவத்தின் வழியாக உருவான அறிவு. இரண்டாவது, நமது அனுபவமும் அறிவும் கூட அப்படித்தான் உள்ளது. ஆகவே இதையிட்டே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மெய்யாகவே இந்தத் தேர்தல் மக்களுடைய நேரடித் தேவைகள் சம்மந்தப்பட்டதே. குறிப்பிட்ட பெரியவர் சொன்னதைப்போல, உள்ளுராட்சி மன்றங்கள் என்கிற அடிநிலைக் கட்டமைப்பின் வழியாக மேற்கொள்ளப்படும் சமூகத்தின் தேவைப்பாடுகளைக் குறித்தது.

எனவேதான் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற முறையில் உள்ளுர் மட்டப்பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்கான ஏற்பாட்டினை இந்தத் தேர்தலின் விதிமுறைகளும் ஏற்பாடுகளும் கொண்டிருக்கின்றன. (மாகாணசபை இதற்கு அடுத்த படி. பாராளுமன்றம் அதற்கும் மேல் படி).

உள்ளுராட்சித் தேர்தலில், வட்டார முறைமை என்பது அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கெடுப்பதற்கும் அந்தந்த வட்டாரங்களுக்குரியவர்களை – அந்தந்த வட்டாரங்களுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்குமான ஒரு ஏற்பாடாகும்.

இவ்வாறு அந்தந்த வட்டாரங்களுக்குரியவர்கள் தெரிவு செய்யப்படும்பொழுது, அவர்களால் அந்தந்த வட்டாரங்களின் குறைபாடுகள் சரியாக இனங்காணப்படும். அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆர்வமும் பொறுப்பும் சம்மதப்பட்ட வட்டாரத்துக்குரியவருக்கு அதிகமாக இருக்கும்.

அத்துடன், தமது கிராமத்தின் அல்லது வட்டாரத்தின் தேவையையும் வேலையும் தாமே – தம்முடைய பிரதிநிதியே செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதில் பிரச்சினைகள், குறைபாடுகள், தாமதங்கள் ஏதாவது இருந்தால் சம்மந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பிரதிநிதியிடம், அயல் வீட்டுக்காரரிடம் கதைப்பதைப்போல, நேரடியாகவே அதைச் சொல்லி, அதற்கான நிவாரணத்தைப் பெறக்கூடியதாகவும் இருக்கும். அல்லது அதை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். ஆகவே இது சரியாகச் செய்யப்பட்டால், மக்களுக்குப் பெரியதொரு அனுகூலத்தை – வாய்ப்பை வழங்குவதாக இருக்கும்.

ஆனால், இந்த அடிப்படை வாய்ப்புக்கு மறுதலையாகவே தற்போது ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு ஊடகமும் இந்தத் தேர்தலை அரசியல் மயப்படுத்தியுள்ளன.

அதிலும் தமிழ்த்தரப்பில் இதற்குத் தற்போது சூடப்படும் அரசியற் காரணங்களைப் பார்த்தால், பெரியவர் சொன்னதைப்போல நிச்சயமாகச் சிரிப்பு வரும். கொஞ்சம் கவனித்தால் கோபம் வரும். ஆழமாகச் சிந்தித்தால் பைத்தியம் பிடிக்கும். அல்லது கொலைவெறி ஏற்படும்.

பெருவாரியான தமிழ்மக்களின் அரசியலானது மேற்படி “சிரிப்பு (நகைப்பு) – கோபம் – பைத்தியம் அல்லது கொலைவெறி” என்ற வகையிலேயே கட்டமைப்பட்டுள்ளது.

எடுத்ததெற்கெல்லாம் சிங்களத்தரப்பையும் அரசாங்கத்தையும் எதிர்முனையில் நிறுத்தி (எதிரியை – வில்லனை) தாக்குவதே தமிழ் அரசியல் எனச் சுருங்கி விட்டது.

இதை இன்னும் செழிப்பாகச் சொன்னால், தமிழ் அரசியல் “சிங்களம் – தமிழ்” என்ற இரு எதிர்முனைகளுக்கிடையில் – இரண்டு எதிர்ப்புள்ளிகளுக்கிடையில் – குறுகி விட்டது. இதற்கப்பாலும் சிந்திக்கவேணும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு பெருவாரியான தமிழர்கள் தயாரில்லை.

ஆகவே இதில் வெற்றியடைந்திருப்பது, சிங்கள அதிகாரத் தரப்பே. மிக நுட்பமாக இதைச் சிங்கள அதிகாரத் தரப்புக் கையாண்டு வருகிறது.

தமிழர்களைத் தொடர்ச்சியாகவே “எதிர்ப்பரசியல்” என்ற புள்ளியில் நிறுத்தி விட்டு, அது வேகமாக முன்னகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் எதிர்ப்பரசியலைக் கைவிடவும் முடியாமல், அதில் வெற்றியடையவும் முடியாமல் அதே புள்ளியில் சிக்கியிருக்கிறார்கள். இதனால், தமிழ்ச் சமூகம் வரவரப் பின்னடைந்தே செல்கிறது.

இன்னொரு வகையில் சொன்னால், விட்டுக் கொடுப்பற்ற முறையில் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலம், தமிழ்த்தரப்பை வேறு திசைகளை நோக்கிச் சிந்திக்க முடியாதளவுக்கு எதிர்ப்பரசியல் என்ற சிலுவையில் சிங்களத்தரப்பு அறைந்திருக்கிறது.

சிங்கள அதிகாரத்தரப்பின் பிடியிலிருந்து மீள்வதற்கு அல்லது சிங்களத்தரப்பை வெற்றிகொள்வதற்குரிய புதிய உபாயங்களைக் கண்டறிய முடியாமல் தமிழ்த்தரப்பு “இயலாமை வெளிப்பாட்டு (முறையீட்டு அல்லது சுய புலம்பல்) அரசியலை” முன்னெடுத்து வருகிறது. இது பேரவல நிலையாகும்.

இந்த அவலமே இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கிறது.

இதன்படி இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் இரண்டு வகையான தெரிவுகளுக்கு முன்னே வலிந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒன்று, இது அரசியலமைப்புத் திருத்தத்தின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவான வாக்களிப்பு என்பதாகும். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று நினைத்துக் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு (வீட்டுச் சின்னத்துக்கு) வாக்களிப்பதன் மூலம், இடைக்கால அறிக்கையை தமிழர்கள் ஆதரித்ததாகக் கொள்ளப்படும் என்பது.

இரண்டாவது, இடைக்கால அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதாகும். தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றெல்லாம் கருதிக் கொண்டு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது.

இவை இரண்டுமே இந்த உள்ளுராட்சித் தேர்தலுக்குச் சம்மந்தமில்லாதவை. இது உள்ளுர் விவகாரங்களுக்கான உள்ளுர் மட்டத் தேர்தல். ஆனால், இதை உலகத்துக்கான தேர்தலாக (சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான தேர்தலாக) காட்ட வேணும் என அடம்பிடிக்கப்படுகிறது.

இது அறியாமையின் விளைவா? பழக்கதோசத்தின் வெளிப்பாடா? இயலாமையின் முடிவா?

இப்படி இந்தத் தேர்தலுக்கு பொருத்தமற்ற முறையில் அரசியற் சாயமிடுவதன் மூலம் மெய்யாகவே செய்யப்பட வேண்டிய உள்ளுர் மட்டத்திலான வேலைகள் (சமூகத்திற்கான அத்தியாவசிய வேலைகள்) இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இதனால் தமிழ்ச் சமூகமே நேரடியாகப் பாதிக்கப்படவுள்ளது. இதற்குச் சிறந்த உதாரணம், வடமாகாணசபை அரசியற் சுழலுக்குள் புதையுண்டதால் ஏற்பட்ட பின்னடைவு. இதனால், வடமாகாணசபையினால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய பணிகளும் வளர்ச்சியும் சோர்வு நிலைக்குள்ளாக்கப்பட்டன. வினைத்திறனின்மை உருவாகியது. ஊழலும் குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் தலைதூக்கின.

விளைவாக வடமாகாணத்தின் கல்வி, தொழில்துறை எல்லாவற்றிலும் பெரு வீழ்ச்சியேற்பட்டது. நாட்டின் மிக வறிய மாவட்டங்கள் வடக்கிலேயே உள்ளன என்ற நிலை உருவாகியது. மிகப் பின்தங்கிய கல்வி நிலையும் வடக்கிலேயே.

வடமாகாணசபையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பொறுப்பேற்றபின்னர், அது முற்றிலும் புதியதொரு வினைத்திறனாக்கத்தை உருவாக்கிக் காண்பித்திருக்க வேணும்.

ஆட்சித்திறனை நிரூபித்திருக்க வேண்டும். கூடவே சிறந்ததொரு அரசியற் பண்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்க முடியும்..

இலங்கையின் ஏனைய மாகாணங்கள், வடக்கு மாகாணசபையைப் பார்த்து வியக்கும் நிலையை உருவாக்கியிருக்கலாம். கூடவே வடக்கு மாகாணசபையைப் பின்பற்றக்கூடிய நிலையை உருவாக்கியிருக்க முடியும்.

ஆனால், அப்படிச் செய்யவே இல்லை. குறைந்தது தமது மாகாணத்துக்குட்பட்ட அளவிலாவது மக்களுக்கான பணிகளைச் செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. இதனால் மாகாணசபையின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்.

மாகாணசபையோ தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக கோஷங்கள், பிரகடனங்கள், கண்டனங்கள், குற்றச்சாட்டுகள் என்றவாறானதொரு அரசியலை (எதிர்ப்பரசியலை) பேசிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு தேக்க நிலைக்கு – பின்னடைவு நிலைக்கே இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் கொண்டு வருவதற்கு தமிழ்ப் புத்திஜீவிகளும் கட்சிகளும் ஊடகங்களும் தலைவர்களும் முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் வசதியான – வாய்ப்பான ஒன்றாக இருப்பது இந்த எதிர்ப்பரசியல். அதைச் செய்து கொண்டே சிரமமில்லாமல் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் புகழிலும் வசதி, வாய்ப்புகளோடும் இருந்து கொள்ளலாம்.

வேறு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. “எல்லாத் தவறுக்கும் அரசாங்கமே காரணம்” என்று கையைக் காட்டி விட்டால் போதும். மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள்.

பிறகென்ன? வெற்றியும் கொண்டாட்டமும்தான். இந்த வகையான அரசியலே 1960 களிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு வாய்ப்பாக சிங்களத்தரப்பும் “இன முரண்” என்ற தீனியைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகவே ஒரு சிறிய (உயர்) குழாத்தினருக்கு இது அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் அவர்கள் எப்போதும் இந்த “எதிர்ப்பரசியல்” என்ற கண்ணாடிக்குள்ளாலேயே எதையும் பார்க்க முற்படுகின்றனர். அப்படியான ஒரு பழக்கத்தை மக்களுக்கும் உண்டாக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அடிப்படையாக (கருவியாக) இருப்பது இனவாதம். இந்த இனவாதமே எதிர்ப்பரசியலுக்கான முதலீடு.

இதை அழியவிடாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகள் காலந்தோறும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், உலகம் இந்த அரசியற் போக்கிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அது பன்மைத்துவம், ஜனநாயக வலுவாக்கம். பல்லினத்துக்கான இடம் எனத் தன்னை நெகிழ்த்திக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

நாம் எதிர் நிலையில் இறுக்கமாகிக் கொண்டிருக்கிறோம். இதனால், உலகத்தை விட்டு விலகியே இருக்கிறோம். இதனால்தான் நமக்குத் தொடர்ந்தும் பிரச்சினைகளும் துயரங்களும் தொடரும் தோல்விகளும் உலகத்தின் ஆதரவின்மையும் நீடிக்கிறது.

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்திலாவது மக்கள் புதிய அரசியற் சிந்தனை முறைக்குச் செல்வதைப்பற்றிச் சிந்திக்க வேணும். இந்த உக்கிப்போன கட்சிகள் ஒரு போதுமே திருந்தாது.

அவை தமது நலனுக்காக தாறுமாறாகவே சிந்திக்கும். இந்தக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் கூட புதிய சிந்தனையைக் கொண்டவர்களில்லை.

ஒழுங்கான வாசிப்புப் பழக்கத்தை உடையவர்களில்லை. புதிய கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய ஆளுமையும் ஆற்றலும் உள்ளவர்களில்லை. அத்தகையமாதிரித் தங்களை வளர்த்துக் கொண்டவர்களுமில்லை. ஒரு புத்தகத்தை எழுதக் கூடிய வல்லமையைப் பெற்றவர்களில்லை.

எனவே இவர்களின் கட்சிகள் தவறாகவே செயற்படும்.

மக்களாகிய நாம்தான் நமது பிரச்சினைகள் என்ன? அதற்கான பரிகாரம் என்ன? நமது தேவைகள் என்ன? அதற்கான தீர்வு எப்படியாக அமையவேணும்? அதையெல்லாம் செயற்படுத்துவது யார்? யார் இதற்குப் பொருத்தமானவர்கள்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேணும். ஏனெனில் பசியும் பட்டினியும் புழுதியும் இருளும் காடும் புதரும் வெள்ளமும் சேறும் வரட்சியும் தாகமும் எங்களுடையதல்லவா.

இதற்காகத்தான் தேர்தல் வந்திருக்கிறது. பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து இவற்றை நிவர்த்தி செய்யுங்கள் என.

தேர்தல் என்பதே மக்கள் தெளிவடைவதற்கான ஒரு சந்தர்ப்பம். தங்களுக்குப் பொருத்தமான தெரிவுகளைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு. மக்கள் வெற்றியடைவற்கான ஒரு களம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், காற்றடிக்கிற பக்கம் சாய்ந்தால், கதையளக்கிற பக்கம் போனால் கதை கந்தலாகி விடும்.

பெரியவர் சொன்னதையே மீள நினைவூட்டலாம்.

இது உள்ளுராட்சித் தேர்தல். உங்கள் உள்ளுர்த்தேவைகளோடு சம்மந்தப்பட்ட தேர்தல். இதை அதற்குரியவாறு பயன்படுத்துங்கள்.

பிளேட்டினால் பேப்பரைத்தான் வெட்டலாம். மரத்தை அல்ல. மரத்தை வெட்டுவதற்குக் கோடாலி அல்லது மரம் அரியும் வாள் தேவை.

இப்படி ஒவ்வொன்றைச் செய்வதற்கும் ஒவ்வொரு கருவி – பொருத்தமான கருவியே தேவை. எல்லாவற்றுக்கும் ஒரே கருவியைப் பயன்படுத்த முடியாது.

இது மக்கள் தமக்கெனக் கொள்ளப்பட வேண்டிய தேர்தல். கட்சிகள் தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. இதை மனங்கொண்டு செயற்படுவதே மக்களுக்கு நல்லது. அதன் வழியே இந்த நாட்டுக்கும் நன்மையாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.