உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள்!! – கே. சஞ்சயன் (கட்டுரை)

0
455

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதற்கு, 14ஆம் திகதிக்குள் வியாக்கியானம் அளிக்குமாறு, அவர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு எழுத்துமூலமான ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள்.

ஆனால், அவர்கள் அப்போதிருந்த அரசமைப்பு நடைமுறைக்கு அமைய, 12 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள்.

இருந்தபோதிலும், முழுமையாக அந்தக் காலத்துக்குப் பதவியில் இருக்க முடியவில்லை. காரணம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இவர்கள் தமது பதவிக்காலம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோரிப் பெற்றிருந்தனர்.

இந்த இடத்தில், சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன எவ்வாறு வேறுபடுகிறார் என்று பார்க்கலாம்.

1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க தெரிவுசெய்யப்பட்டார்.

அப்போது, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்று அரசமைப்பில் கூறப்பட்டிருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், எந்த நேரத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்புவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அதைப் பயன்படுத்தி, தனது ஆறு ஆண்டு பதவிக்காலம் முடிய முன்னரே, ஜனாதிபதி தேர்தலை சந்திரிகா நடத்தினார்.

1999 டிசெம்பர் 20ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில், இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற சந்திரிகா குமாரதுங்க, அதற்கு மறுநாளே தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனால், முதலாவது பதவிக்காலத்தின் 11 மாதங்களை அவர் இழந்தார்.

1435767984-97இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, சந்திரிகாவுக்கு, தனது முதலாவது பதவிக்காலத்தில் இழந்த 11 மாதங்களையும் சேர்த்தே பதவியில் இருக்கும் ஆசை வந்தது.

1999 டிசெம்பரில் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற சந்திரிகாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் 2005 டிசெம்பருடன் நிறைவடையவிருந்த நிலையில்தான், முதலாவது பதவிக்காலத்தின் 11 மாதங்களையும் சேர்த்து, 2006 இறுதி வரையில் பதவியில் இருக்க அவர் எத்தனித்தார்.

அதற்காக அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்கவில்லை.

ஒரு பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் தான் என்பதைத் தெளிவுபடுத்தி, 2005 டிசெம்பருடன் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிந்து விடும் என்றும் கூறியது. இதனால் வேறு வழியின்றி, சந்திரிகா, 2005 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

2005 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் மூலம், பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, போரில் வெற்றியீட்டிய சூட்டோடு சூடாக, தனது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் ஈடுபட்டார்.

அவர், தனது ஆறு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே, 2010 ஜனவரியில், ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்.

2011 நவம்பர் வரையில் அவருக்குப் பதவியில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலை நடத்தினார்.

அதில் வெற்றி பெற்றவுடன், அவர் சந்திரிகா குமாரதுங்கவைப் போல, இரண்டாவது பதவிக்காலத்துக்காக உடனடியாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை.

சந்திரிகாவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், முதலாவது பதவிக்காலத்தையும் முழுமையாகவே அனுபவிப்பதற்காகவும், உயர்நீதிமன்றத்திடம், தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது என்று அவர் விளக்கம் கேட்டார்.

அதற்கு உயர்நீதிமன்றம், மஹி ந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 2016 நவம்பர் 18 ஆம் திகதி முடிவடைவதாக அறிவித்தது.

இதனால், முதலாவது பதவிக்காலத்தின் எஞ்சிய ஒரு வருடத்தையும் முன்கூட்டியே தேர்தலை நடத்தி தோல்வியுற்றதால், இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டு ஆண்டுகளையும் மஹிந்த ராஜபக்ஷவினால் அனுபவிக்க முடியாமல் போனது.

இப்போது, ஜனாதிபதி மைத்திரிபாலவும் தனது பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருக்கிறார்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விளக்கத்தைக் கோரியுள்ள சூழல் வித்தியாசமானது. முன்னையவர்கள், விளக்கம் கோரிய சூழலில், அரசமைப்பு விதிகளில் எந்த மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது இருந்த அரசமைப்பு விதிகள் இப்போது இல்லை.

புதிய விதிமுறைகளை, அரசமைப்பு கொண்டிருக்கிறது. இது, மைத்திரிபால சிறிசேன இந்த விளக்கத்தைக் கோரியுள்ளமைக்கு முக்கிய காரணம்.

maithri2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது, அவர் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும் என்று அரசமைப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னர், 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில்தான், தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்பதை உயர்நீதிமன்றத்தின் மூலம் தெளிவுபடுத்த முனைந்திருக்கிறார் ஜனாதிபதி. அதுவும், ஜனாதிபதியாகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழித்து அவர் இந்தப் பதிலை அறிய முயன்றிருக்கிறார்.

பதவியேற்றபோது, இருந்த அரசமைப்பு விதிகளுக்கு அமைய, ஆறு ஆண்டுகள், அதாவது 2021 வரை பதவியில் இருக்க முடியுமா? அல்லது 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய 2020 வரை, அதாவது ஐந்து ஆண்டுகள் மாத்திரம் பதவியில் இருக்க முடியுமா என்ற கேள்விக்கான விடையைத்தான் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது.

சந்திரிகா குமாரதுங்க, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவுக் கட்டத்தில்தான் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

சந்திரிகாவுக்கு ஏற்பட்ட நிலை, தமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன்தான் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்க முன்னரே, இந்தக் கேள்வியை உயர்நீதிமன்றத்திடம் எழுப்பியிருந்தார்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது பதவிக்காலத்தின் நடுப்பகுதியிலேயே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவர் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடமாட்டேன் என்ற வாக்குறுதியை ஏற்கெனவே மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடாத போதிலும், அவரது கட்சியினர் மீண்டும் அவரையே முன்னிறுத்துவோம் என்று கூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும், தனது பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா என்பதை அறிந்து கொள்ள ஜனாதிபதி முற்பட்டிருப்பதற்குக் காரணம், அடுத்தடுத்த கட்ட முடிவுகள் பலவற்றை எடுப்பதற்காகவே என்று கருதப்படுகிறது.

மீண்டும் ஒரு பதவிக்காலத்துக்குப் போட்டியிடுவதா என்பதைக் கூட, உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் அடிப்படையில் அவர் தீர்மானிக்கக் கூடும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிலவிடயங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தனது பதவிக்காலத்தில் அழுத்தமான சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்புகிறார்.

அதைச் செய்வதற்கு காலஅவகாசம் தேவைப்படக் கூடும். அதனால் 5 ஆண்டுகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால், அவர் அடுத்த பதவிக்காலத்துக்கும் போட்டியிடும் முடிவை எடுக்கக் கூடும்.

அவ்வாறின்றி, ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என்ற முடிவை எடுத்தால், அந்தக் காலஅவகாசத்துக்குள் தனது உறுதியான செயற்பாடுகளை நிலைநிறுத்துவதற்கு முற்படக் கூடும்.

பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் நின்று கொண்டு, ஜனாதிபதி எழுப்பியுள்ள சந்தேகம் முக்கியமானது. ஏனென்றால், எஞ்சிய பதவிக்காலத்தை அவர் இப்போதே திட்டமிடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்.

பதவியை விட்டு விலகும்போது, சாக்குப் போக்குகளைச் சொல்லாமல், வாக்குறுதிகளையும் கடப்பாடுகளையும் அவர், நிறைவேற்ற விரும்புவதாகவே தெரிகிறது. அதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்.

இதனால், உயர்நீதிமன்றத்தின் விளக்கம், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாத்திரமன்றி, அவரது அடுத்தகட்ட முடிவுகளையும் அவரது வாள் வீச்சின் வீரியத்தையும் தீர்மானிப்பதாக இருக்கக் கூடும்.

-கே. சஞ்சயன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.