“விழா மேடையில் ரசிகர் இருவரின் காலில் விழுந்த நடிகர் சூர்யா! எதற்குத் தெரியுமா? (விடியோ)

0
409

வெள்ளிக் கிழமை வெளியாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழா மேடையில் பார்வையாளர்களுக்கு மத்தியில் ரசிகர் இருவரின் காலில் நடிகர் சூர்யா விழுவதைப் போன்ற விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷுணன், செந்தில் ஆகியோர் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் இந்தப் படம் உருவாகி உள்ளது.

படக் குழுவும் படத்தை விளம்பரப் படுத்த கேரளா, ஆந்திரா, தெலங்கானா என்று சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விழாவில் மேடையில் சூர்யா நின்று கொண்டிருக்க, விழா தொகுப்பாளர் ரசிகர்கள் யாராவது 5 பேர் மட்டும் மேடைக்கு வருமாறு அழைத்தார்.

அப்போது மேடைக்கு வந்த ரசிகர்களில் இருவர் சூர்யாவின் காலில் விழுந்தனர். அவர்களைத் தடுத்த சூர்யா பதிலுக்கு அவர்கள் இருவரது காலையும் தொட்டுக் கும்பிட்டார்.

ஒருவர் தனது காலில் விழும் போது அது எப்படி ஒரு சங்கடமான நிலையை தனக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே தான் அவர்களது காலில் விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எப்போதும் மற்றவர்களது காலில் விழுவதைத் தவிருங்கள் என்றும் அவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். பின்னர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சொடக்கு மேல் சொடக்கு போடுது’ பாடலுக்கு ரசிகருடன் சேர்ந்து நடனம் ஆடினார் சூர்யா.

சமீபத்தில் பதவி, பணம் உள்ளவர்களின் காலில் விழாதீர்கள் என்று நடிகர் ரஜினி தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார், அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர்களைக் காலில் விழுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.