சிதைந்த கூட்டமைப்பு!! – கருணாகரன் (கட்டுரை)

0
498

“உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும், அதனுடைய எதிர்காலம் எப்படி அமையும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். தனியொருவர் இப்படிக் கேட்பதாக இருந்தாலும் இது தனியொருவரின் கேள்வி அல்ல.

இந்தக் கேள்வி, கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் மற்றும் அதனுடைய பங்காளிகள் தொடக்கம் வெளியே உள்ள சகல தரப்பினரிடத்திலும் எழுந்திருக்கும் ஒன்றாகும். ஆகவே, இதைப் பொதுப் பரப்பில் எழுந்திருக்கும் கேள்வியாகவே கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பைப் பற்றிய கடந்த கால அவதானிப்புகளும் அனுபவங்களும் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளன. “தங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது.

தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அரசியல் ரீதியாகவும் சமூகப் பொருளாதார அடிப்படையிலும் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர்.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு செயற்படவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அது மாறியிருப்பதையே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊடகங்களின் வெளிப்படுத்துகைகளும் இதைத் துல்லியமாகக் காட்டியுள்ளன. அரசியல் ஆய்வாளர்களும் அவதானிகளும் இதையே கோடிட்டுக் காட்டுகின்றனர்.

மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக, நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கூட்டமைப்பின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன.

செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறியுள்ளது.

ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது. போலியான ஒரு கட்டமைப்பாகவே கூட்டமைப்பு இருக்கிறது என்பதே மக்களுடைய அவதானம்.

2009 க்குப் பிறகு மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது கூட்டமைப்பு.

முதலில் (2010) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது.

அண்மையில் (2017) சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. விளைவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது.

மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூட அவமானங்கள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றுக்கும் மத்தியில் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அநேகமாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலைகளே காணப்படுகின்றன.

இதை இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே தெரிவித்திருக்கிறார்கள். அப்படித் தவறினாலும் மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் உடைவு ஏற்பட்டே தீரும்.

உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் கட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும் ஏற்பட்டிருந்த கசப்புகள் ரெலோவையும் புளொட்டையும் தமிழரசுக் கட்சியிலிருந்து அந்நியப்படுத்தியிருந்தன.

பிறகு ஒருவாறு கொழும்பு (ரணில்) தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. ஆனாலும் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த கையோடு இந்தத் தற்காலிக அமைதி சிதையும்.

தேர்தல் முடிவுகளின் பிறகு உருவாகும் அதிகாரப் போட்டியில் இன்னொரு மோதலுக்கு இடமுண்டு.

ஆக, இந்த மாதிரியான முரண்கள், மோதல்களின் விளைவாக இறுதியில் மிஞ்சப் போவது தமிழரசுக் கட்சி மட்டுமே. அப்படித் தமிழரசுக் கட்சி மட்டுமே எஞ்சினால், அது கூட்டமைப்பாக – “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்ற அடையாளத்தோடும் பெயரோடும் இருக்க முடியாது.

அப்படியிருக்குமானால் அது பொய்யாகவும் கோமாளித்தனமாகவும் அரசியல் தோல்வியுமாகவே அமையும்.

இப்போதே கூட்டமைப்பு என்பது ஏறக்குறைய தோல்வியான ஒரு அமைப்பாகி விட்டது. தெளிவற்றதொரு அரசியல் வடிவமாகியுள்ளது.

சிலவேளை தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு ஓரளவுக்குச் சாதமாக இருந்தாலும் அரசியல் உள்ளடக்கத்திலும் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பிலும் அது தோல்வியானதாகவே இருக்கும்.

இதற்கு என்ன காரணம்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலவீனமே – அதனுடைய அடித்தளத்தில் உள்ள பலவீனமே இதுவாகும்.

கூட்டமைப்பை உருவாக்கியதற்கு இன்று பலரும் உரிமை கோருகிறார்கள். கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் பல கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆனால், இதிலெல்லாம் அடிப்படையாக உள்ள பலவீனத்தைப் பற்றி யாருமே பேசுவதில்லை. யாரும் அதற்குப் பொறுப்பெடுப்பதுமில்லை.

அன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்வை நோக்கி முன்னெடுப்பதற்குப் பொருத்தமான அரசியற் செயற்பாட்டியக்கத்தின் தேவை அவசியமாக உள்ளது.

பல அணிகளாகச் சிதறியிருக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்பாக்கி, அதை வினைத்திறனுடன் செயற்பட வைப்பதன் மூலம் நீடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பின்னடைவை முன்னோக்கி நகர்த்த முடியும் என்று உணரப்பட்டதன் விளைவே கூட்டமைப்பின் உருவாக்கமாகும்.

ஆனால், துரதிருஷ்டவசமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் நேர்மையும் ஜனநாயகத் தன்மையும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை.

ஒரு தரப்பு புலிகளின் விசுவாசிகளாகவும் புலிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. இதில் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி, சொலமன் சூ சிறில், ஜெயானந்தமூர்த்தி,  அரியநேத்திரன், ஈழவேந்தன், தங்கேஸ்வரி, கனகரத்தினம், சிவனேசன் போன்றவர்கள் இருந்தனர்.

இன்னொரு தரப்பு இதற்கு மாறாக இருந்தது. அதில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சம்மந்தன், செல்வம் அடைக்கலநாதன், ரவிராஜ், ஆனந்தசங்கரி ஆகியோர் இருந்தனர். இடைநடுவில் ஒரு தரப்பிருந்தது. விநாயகமூர்த்தி, யோசப் பரராஜசிங்கம், மாவை சேனாதிராஜா போன்றவர்கள்.

ஆகவே இந்த மூன்று தரப்பும் பட்டுக்கொள்ளாமலும் தொட்டுக் கொள்ளாமலும் புலிகளோடும் நடந்து கொண்டன. தங்களுக்குள்ளும் அப்படியே நடந்தன.

வெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது.

உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின. ஆனால், இந்த மூன்று விதமான போக்கைப் பற்றியும் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளுர விரும்பினார்கள்.

காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் இந்தக் கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது.

மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.

அதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் நம்பிக்கை – எண்ணம்.

இதேவேளை, இந்தக் கூட்டமைப்பிலுள்ள சில சக்திகளை (ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி – அப்போது தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருக்கவில்லை) புலிகள் முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே இந்தச் சக்திகளை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு சரியான அரசியல் முன்னெடுப்பைச் செய்ய முடியாது என்று புலிகள் கருதினர். இருந்தாலும் புலிகளுக்கு அன்றைய நிலையில் (2002 காலப்பகுதியில்) இந்தக் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது.

புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர்.

இதற்கு கூட்டமைப்பிலிருக்கும் சக்திகளுக்கிடையில் இடைவெளிகளும் மென்னிலையிலான உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணினர்.

அதனால், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.

இதேவேளை கூட்டமைப்பினுள்ளும் கட்டமைப்பின் அடிப்படைகளைப் பற்றிய அக்கறைகள் பெரியளவில் காணப்படவில்லை.

இதனால் அதற்கான விதிமுறைகளும் சட்ட ஏற்பாடுகளும் புரிந்துணர்வுடன்படிக்கைகளும் செய்யப்படவில்லை. குறைந்த பட்ச ஜனநாயகப் பண்பை வளர்ப்பதையும் கடைப்பிடிப்பதையும் கூட யாரும் கவனத்திற் கொள்ளவில்லை.

இந்தக் குறைபாடுகள், புலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகளை முற்றாகவே மாற்றின. புலிகள் இருக்கும் வரையில் சமாளித்துக் கொண்டும் அடங்கியும் இருந்தவர்கள் புலிகள் இல்லாத சூழலில் தன்னிச்சையாகச் செயற்பட முற்பட்டனர்.

குறிப்பாகப் புலிகளுக்குச் சார்பானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை வெளித்தள்ளும் முயற்சியில் சம்மந்தன் தலைமையிலானவர்கள் ஈடுபட்டனர்.

இதற்கு வாய்ப்பாக ஏற்கனவே நடந்த ஆனந்தசங்கரியின் வெளியேற்றம் சம்மந்தனையும் அவருக்கிசைவானவர்களையும் பலமாக்கியது.

மெல்ல மெல்லத் தமக்குச் சாதகமாக ஒரு சூழலை உருவாக்க முற்பட்டார் சம்மந்தன். இதற்கு தான் சார்ந்த தமிழரசுக் கட்சியையும் தனக்கிசைவானவர்களையும் சம்மந்தன் பயன்படுத்தினார்.

இறுதியில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் மேலோங்கியது. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது.

இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.

இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது. இனிக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையை அது எட்டியுள்ளது.

ஒரு அரசியற் கூட்டமைப்பு என்பது கொள்கை சார்ந்தும் அந்தக் கொள்கை கொண்டிருக்கும் இலக்கு சார்ந்துமே அமைய முடியும்.

அதற்கேற்பவே இயங்கவும் செயற்படவும் முடியும். இல்லையெனில் அந்தக் கட்டமைப்போ கூட்டமைப்போ நீடிக்க முடியாது.

கூட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் உள் நெருக்கடிகளும் உடைவுகளும் இதைத் துலக்கமாகக் காட்டுகின்றன.

இங்கே கொள்கை, இலக்கு போன்றவற்றுக்கு அப்பால், ஒவ்வொரு தரப்பினதும் இருப்பு, அடையாளம் என்பனவே முக்கியமாகக் கருதப்படுகின்றன.

இதனால்தான், இன்று எந்த இலக்கில், எந்த அடிப்படையில், எத்தகைய கொள்கையின் வழியே கூட்டமைப்பு சென்று கொண்டிருக்கிறது என்று கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களால்கூட உறுதியாகக் கூற முடியாமலிருக்கிறது. இதுதான் எங்கள் பாதை. இதுதான் எங்கள் இலக்கு.

இதுதான் எங்கள் பயணம் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் எல்லோரும் தடுமாறித் தவிக்கிறார்கள்.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த, வகித்துக் கொண்டிருக்கும் அரசியற் சக்திகளிடத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் இலக்குக் குறித்த பொது உடன்பாடுள்ளதாக ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதுண்டு.

அதில் பல குழப்பங்கள் நீடித்தன. இன்று அவையெல்லாம் மலிந்து அம்பலமாகி விட்டன.

உண்மையில் கூட்டமைப்பானது மேலும் வளர்ச்சியடைந்திருக்க வேணும். புலம்பெயர் மக்களின் பேராதரவைப் பெற்றிருக்க வேணும்.

இதற்கு வாய்ப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள மக்கள் கூட்டமைப்புக்குப் பேராதரவை வழங்கியிருந்தனர்.

இதன் மூலம் மாபெரும் அரசியல் இயக்கமாக கூட்டமைப்புப் பரிணமித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவேயில்லை.

பதிலாக அது ஒவ்வொரு காலப்பகுதியிலும் உடைந்து உடைந்து நலிவுற்றே வந்திருக்கிறது.

அரசியல் ரீதியாகவும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் மிகமிகத் தளர்ந்திருக்கிறது.

வெளிப்படைத்தன்மை முற்றாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் தன்னுடைய வெளிப்படைத் தன்மையை இழக்குமாக இருந்தால், அது வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுகிறது என்றே அர்த்தமாகும். கூட்டமைப்புக்கு இன்று நேர்ந்திருக்கும் கதி இதுதான். அது சந்திக்கவுள்ள விதி இதுவே.

இதற்குப் பிரதான காரணம், சம்மந்தனுடைய அணுகுமுறைத் தவறுகளும் நிலைப்பாடுகளுமாகும். கூட்டமைப்பின் தலைவராக அவரே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் சார்ந்த தமிழரசுக் கட்சி ஜனநாயக விரோதச் செயற்பாடுகளில் – அடாவடிகளில் – ஈடுபடுகிறது. சக பங்காளிகளை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

அரசியல் உறுதிப்பாட்டைக் குலைக்கிறது. இதையெல்லாம் சம்மந்தன் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்றால், இதற்கான முழுப்பொறுப்பும் சம்மந்தனுக்கும் தமிழரசுக் கட்சிக்குமே உரியது.

இவ்வளவுக்கும் சம்மந்தன் ஒரு மூத்த தலைவர். தமிழரசுக் கட்சி பாரம்பரியமுடையதொரு அரசியற் கட்சி.

இருந்தும் அதுவே பிற கட்சிகளை விட மோசமான முறையில் – ஜனநாயக விரோதமாகச் செயற்படுகிறது என்றால் இதனுடைய அர்த்தம் என்ன?

உண்மையில் ஆயுதம் தாங்கிய அமைப்புகளாக இருந்த கட்சிகளையே பலரும் இதுவரையில் குறை சொல்லி வந்தனர்.

அவற்றிடமே ஜனநாயகமின்மை நிலவியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இன்று மற்ற எல்லாத் தரப்பையும் விட அடாவடி, தன்னாதிக்க முனைப்பு, ஜனநாயக விரோதம் போன்றவற்றில் தமிழரசுக் கட்சியே உயர்ந்து நிற்கிறது.

இது அதனுடைய வீழ்ச்சியையே குறிக்கிறது. அரசியல் விழுமியமற்ற தரப்பாக அது மாறிச் சிதைந்து விட்டது.

எனவே, கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது, தமிழரசுக் கட்சி செய்கின்ற தவறுகளின் விளைவுகளால் சிதைக்கப்பட்டதாகவே இருக்கும். மிஞ்சப்போவது தீராப் பிரச்சினையும் தமிழரசுக் கட்சி – எதிர் பிற கட்சிகள், கூட்டுகள் என்பதாகவுமே அமையும்.

ஒன்றுபட்ட – வலுவான அரசியற் அரசியற் சக்தியின் மூலமே தமிழர்களின் உரிமைக்கோரிக்கைக்கு வலுச் சேர்க்க முடியும் என்ற கருதுகோளை உடைத்துச் சிதைத்திருக்கிறது கூட்டமைப்பு – அதாவது தமிழரசுக் கட்சி.

இதுவே வரலாற்றின் துயரம் நிறைந்த இன்னொரு பதிவாகும்.

– கருணாகரன-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.