“ரஜினிகாந்த் : மாயையின் புனித வடிவம்”!!- முனைவர் ரவிக்குமார் (கட்டுரை)

0
685

ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். தமிழ்நாட்டில் திரைத்துறையோடு தொடர்பில்லாதவர்களும் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டு ஓராண்டுதான் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தை அறியாமை இருளில் மூழ்கடிக்க மீண்டும் ஒரு சினிமா நட்சத்திரம் அரசியலுக்குள் பிரவேசிக்கிறது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்குவதையோ அதன் தலைவராவதையோ எந்த சட்டமும் தடை செய்யவில்லை.

இந்தியக் குடிமகனுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமையை எதன்பேராலும் நாம் மறுக்க முடியாது.

ஆனால், அவரது அரசியலையும், அதனால் தமிழக மக்களுக்கு நேரப்போகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுவது நமது கடமை.

எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவர் கட்சி ஆரம்பிக்கலாம் எனக் கூறுகிறோமோ அதே அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அவரது அரசியலை நாம் எதிர்க்கிறோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழ்நாட்டில்தான் சினிமாவின் செல்வாக்கு அதிகம். இங்கு சினிமா என்பது ஒரு மதமாக மாறியிருக்கிறது.

மதத்தைப் போலவே அதுவும் ஒரு அபின். அந்த அபினால் மயக்குண்டு கிடக்கும் மக்களைப் பார்க்கும் கதாநாயகர்கள் அதனால்தான் தம்மைக் கடவுள்களாகக் கருதிக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் வருபவர்தான் ரஜினிகாந்த்.

அதிமுகவை உருவாக்கிய திரு. எம்ஜிஆரைப்போல நாம் ரஜினிகாந்த்தைப் பார்க்க முடியாது.

எம்ஜிஆர் திரைத் துறையைச் சேந்தவராக இருந்தாலும் தன்னை ஒரு அரசியல் தலைவராக உருமாற்றிக்கொண்டவர்.

தனது அரசியலுக்காக சினிமாவைப் பயன்படுத்தியவர். ஆனால் ரஜினிகாந்த்தோ தன்னை அரசியல்வாதியாக உருமாற்றவில்லை, மாறாக, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மேடை, ’பஞ்ச் டயலாக்’, சினிமாவில் பயன்படுத்திய முத்திரை என அரசியலையே ஒரு திரைப்படமாக மாற்றுவதற்கு அவர் முயற்சிக்கிறார்.

அதனால்தான் அவரது கண்ணில் மக்களோ அவர்களது பிரச்சனைகளோ தென்படவில்லை. வெறும் ரசிகர்கள் மட்டுமே தெரிகிறார்கள்.

Chennai: Super star Rajinikanth addresses fans at an event at Raghavendra Kalyana Mandapam in Chennai on Monday. PTI Photo(PTI5_15_2017_000144A)

இந்தியாவில் நாம் ஏற்றுக்கொண்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயக முறை. அதன் அடிப்படையாக இருப்பது அரசியலமைப்புச் சட்டம்.

ஒரு தனி மனிதனுக்கு குடிமகன் என்ற அந்தஸ்தை அது அளிக்கிறது. குடிமகனுக்கான உரிமைகளை வரையறுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்த மனிதன் ஒரு சினிமா கதாநாயகனின் முன்னால் ரசிகனாக இழிகிறான்.

ரசிகன் என்ற நிலை விமர்சனத்தை அல்ல, வழிபாட்டையே கோருகிறது. ஒரு ரசிகன் தான் வழிபடும் நாயகனின் முன்னால் கேள்வி எதுவுமின்றி சரணடைகிறான்.

அவன் கண்ணுக்குத் தெரிவது ஒரு தலைவன் அல்ல, புனிதத் திரு உரு. குடிமக்களை ரசிகர்களாக சீரழிக்கும் நாயக வழிபாடு ஜனநாயகத்துக்கு விரோதமானது.

இதனால்தான் ரஜினிகாந்த்தின் அரசியல் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, அதன் ஆன்மாவாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்கிறோம்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால் வகுப்புவாதிகள் அதை ஏற்பதில்லை. இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே அவர்களது ஆசை.

அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்க வேண்டும் என அவர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்கள்.

ரஜினிகாந்த்துக்கும் மதச்சார்பின்மை என்பதில் உடன்பாடில்லை. அதனால்தான், தான் நடத்தப்போவது ’ஆன்மீக அரசியல்’ என அவர் கூறியிருக்கிறார்.

அவர் குறிப்பிட்டுள்ள ஆன்மீகம் என்பது உள்நோக்கிய தேடலை வலியுறுத்திய காந்தியடிகளின் ஆன்மீகம் அல்ல, அது மதச்சார்பின்மைக்கு எதிரான ஒரு நிலைபாடு அவ்வளவுதான்.

ராமகிருஷ்ணா மடத்துக்கு அவர் ஆசி பெறச்சென்றபோது நடந்த உரையாடலே அதைத் தெளிவுபடுத்திவிட்டது.

ரஜினிகாந்த் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பாஜகவுடன் மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியோடும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என அதன்மூலம் உணர்த்தியிருக்கிறார்.

அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதாலேயே அவர் அக்கட்சிக்கு எதிரானவர் என நாம் கருதமுடியாது.

அவர் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பாரோ இல்லையோ, அவரது அரசியல் பாஜக காலூன்றுவதற்கான களத்தைத் தயாரிக்கும்.

அரை நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் நடந்துவரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்மீதும், அவற்றின் கருத்தியல் மீதும் நமக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம்.

ஆனால் இப்போதும்கூட இந்தியாவில் வகுப்புவாத இருள் அண்டாத தனித் தன்மை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்றால் அதற்குத் திராவிட அரசியலின் உள்ளீடுகளில் ஒன்றாக இருக்கும் சமத்துவ விழைவே காரணம்.

அந்த உணர்வை அழிக்க விரும்பும் வகுப்புவாத சக்திகள் தமது நோக்கத்தைத் திராவிட எதிர்ப்பு என்ற விதத்தில் வெளிப்படுத்துகின்றன.

மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தையும் அந்த சக்திகள்தான் எள்ளி நகையாடுகின்றன.

ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்திருக்கிறது. தாங்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய மதவாத அரசியலை ரஜினிகாந்த் ‘ஆன்மீக அரசியல்’ என்ற பெயரில் பேசிவிட்டதில் வகுப்புவாதிகள் குதூகலமடைந்துள்ளனர்.

செல்வி ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தந்திரங்களை பாஜக செய்து வருகிறது. அதிமுக பிளக்கப்பட்டதிலும், சேர்க்கப்பட்டதிலும் பாஜகவுக்கு இருந்த பங்கை எல்லோருமே அறிவோம்.

ஆளுமைமிக்கத் தலைமை இல்லாமல் பலவீனப்பட்டு நிற்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தளம் அமைக்கலாம் என்ற பாஜகவின் கனவு ஆர்கே நகர் இடைத் தேர்தலில் கருகிப்போனது.

rajini-fans-celebrate-pti.jpg.image_.975.568

பாஜகவுடன் இணக்கமாக இருப்பதான ஒரு தோற்றம்கூட தேர்தல் களத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று தெரிந்து கொண்டுவிட்ட ஆளும் கட்சி இப்போது வெளிப்படையாகவே பாஜக எதிர்ப்பில் இறங்கியிருக்கிறது.

இன்னொரு பக்கம் அதிமுகவின் ஆளுமை மிக்கத் தலைவராக டிடிவி தினகரன் உருவெடுத்துவருகிறார்.

அவர் பெற்றிருக்கும் வெற்றி தமிழக அரசியல் களத்தை மீண்டும் திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியலுக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இந்த சமன்பாட்டை உடைத்தால்தான் பாஜக இங்கே கால் பதிக்க முடியும் என்பதை அக்கட்சியினரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தங்களால் செய்ய முடியாததை ரஜினிகாந்த் முன்னெடுக்கும் அரசியல் செய்யும் என அவர்கள் நம்புகிறார்கள்.

வகுப்புவாத அரசியலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் என்பதை மட்டும் வைத்து ரஜினிகாந்த்தின் அரசியல் ஆபத்தானது என நான் கூறவில்லை. அதையும் தாண்டி அவரது ’காட்சி அரசியல்’ நிகழ்த்தப்போகும் சேதத்தை எண்ணி நான் அஞ்சுகிறேன்.

’காட்சி அரசியல்’ என்பது தன்னைப் பற்றியே பேசும், தன் புகழையே பாடும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும்.

மக்களின் விழிப்புணர்வை சிதறடித்து அவர்களை உணர்வற்ற மயக்கநிலையில் வைக்கும். பிம்பங்களே காட்சி அரசியலின் மூலதனக் குவியல்.

அது குடிமக்களை ரசிகர்களாக்கி முகமற்ற கும்பலாகத் திரட்டும். நாயக வழிபாடு என்னும் பித்தேறிய அந்தக் கும்பல் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்.

ரஜினிகாந்த்தின் அரசியல் ஏற்கனவே இங்கு இருப்பதுபோன்ற கட்சி அரசியல் அல்ல; அது காட்சி அரசியல்.

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.