தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்த மது பாட்டில். வைரம் பதித்த மூடி. இதன் மதிப்பு ரூ.8.23 கோடி (1.3 மில்லியன் டாலர்). ஆனால், டென்மார்க் நாட்டின் மதுவிடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்றவருக்கோ அதில் இருந்த ஓட்காவின் மீதுதான் போதை போலும்.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள ‘கேஃப் 33′ மது விடுதியில் இருந்து அதைத் திருடிச் சென்ற நபர் நகரில் உள்ள கட்டுமானப் பகுதியில் விட்டுச் சென்றுள்ளார்.
பாட்டிலைக் கண்டெடுத்த போலீசார் பாட்டில் உடைக்கப்படவில்லை என்றும் ஆனால் அது காலியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
பாட்டிலைக் கடனாகப் பெற்ற மதுவிடுதி அதில் ரஸ்ஸோ-பால்டிக் ஓட்காவை நிரப்பி காட்சிக்கு வைத்திருந்தது.
அந்த விடுதிக்குள் நுழைந்த நபர் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.
அதில் இருந்த ஓட்கா என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கோபன்ஹேகன் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ரியட் தோபா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
”கட்டுமானப் பகுதியில் வேலை செய்த ஒருவர் அந்த பாட்டிலை கண்டெடுத்துள்ளார். நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்று கூறிய மதுவிடுதி உரிமையாளர் பிரையன் இங்க்பெர்க் “நல்ல காலம் ஓட்கா கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்” என்கிறார்.