மணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள்! ராணி வீட்டுக் கல்யாணம்!: (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 52)

0
757

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்!!

ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம்.

அந்தப் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு சசிகலாவும் அந்தக் குடும்பமும் நடத்திய ஜெகஜாலங்கள் ஏராளம்… ஏராளம்! ‘ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்’ என நிரூபிக்க சசிகலாவால் நிகழ்த்தப்பட்ட மாயங்களில் ஒன்றுதான் ‘சுதாகரன் திருமண திமிலோகம்’.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் கடைசி மகன் சுதா என்ற சுதாகரன். இன்றைக்கு அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரனின் கடைசித் தம்பி. இவற்றை எல்லாம்விட மிகப்பெரிய தகுதி, 30 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்குக் கிடைத்தது.

அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழகத்தின் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ என்ற தகுதிதான் அது. அந்தப் பட்டம் சூட்டப்பட்டதும், சுதாகரனின் வாழ்வில் நிகழ்ந்தவை எல்லாம் கற்பனைக் கதைகளில்கூட கற்பனை செய்ய முடியாதவை.

ஜெயலலிதா அவருக்கு நடத்தி வைத்த திருமணத்தைப் போல வேறோரு திருமணத்தை தமிழகம் அதற்கு முன்பும் கண்டதில்லை; அதற்குப் பின்பும் இதுவரை காணவில்லை. சுதாகரனை பரமபத ஏணிகள் வேகமாக வாழ்க்கையின் உச்சிக்கு ஏற்றிவிட்டன.

அதே நேரத்தில் பரமபத பாம்புகள் அவரைக் கொத்திக் கீழிறக்கவும் தவறவில்லை. ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ பட்டத்தோடு, தமிழகத்தின் முடிசூடா இளவரனைப்போல் வலம் வந்த சுதாகரன், அதன்பிறகு ஹெராயின் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

12 வருடங்கள் அந்த வழக்கைச் சந்தித்த சுதாகரன், சொத்துக்குவிப்பு வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அதில் தண்டனை பெற்ற சசிகலாவுடன், இளவரசி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர்களோடு சேர்த்து அதே சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் சுதாகரன்.

baskaran_sudhakaran_12182வளர்ப்பு மகன்’ வார்க்கப்பட்ட பின்னணி

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தை ஜெயலலிதாவிடம் இருந்து வெட்டி வைத்தார் சசிகலா. ஆனாலும்கூட, ‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது சசிகலாவுக்கு நன்றாகப் புரிந்தே இருந்தது.

எந்தநேரத்திலும் ஜெயக்குமார் குடும்பம் ஜெயலலிதா வீட்டுக்குள் வேர்விட்டு துளிர்த்துவிட வாய்ப்பு உண்டு என அவர் அஞ்சிக் கொண்டே இருந்தார். எப்போதும் அது நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தினார்.

அதற்காக அவர் ஜெயலலிதாவைச் சுற்றிப் போட்ட முள்வேலிதான், ‘வளர்ப்பு மகன்’. அதற்காக தன் உடன் பிறந்த சகோதரி வனிதாமணியின் மகனைத் தேர்ந்தெடுத்து, தன் உடன்பிறவாச் சகோதரி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கினார்.

சுதாகரின் அண்ணன் பாஸ்கரனுக்கு தஞ்சையில் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜெயலலிதாவுக்குத் அங்கு வைத்தே ‘வளர்ப்பு மகன்’ தூபம் போடப்பட்டது. மெல்லிய புன்னகையோடு அதைக் கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, பதில் எதுவும் சொல்லாமல் சென்னை திரும்பிவிட்டார்.

ஜெயலலிதாவின் மனதைக் கரைக்க, சசிகலா அறியாத வழிகளா? ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்றை வைத்தே ஜெயலலிதாவை மடக்கினார் சசிகலா. “என்னை உடன்பிறவாச் சகோதரி என அறிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள்.

நான் உங்களுக்குச் சகோதரி என்றால், என் மகனைப்போல் உள்ள சுதாகர், உங்களுக்கும் மகன்தானே. அவரை வளர்ப்பு மகனாக நீங்கள் ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்னை” என்று வாதிட்டார்.

ஏனென்றால், அதற்குச் சில மாதங்கள் முன்புதான், ‘என் உடன்பிறவாச் சகோதரி சசிகலா’ என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் தஞ்சையில் ஒரு திருமணம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட சிவாஜியின் பேத்தி சத்திய லெட்சுமியைப் பார்த்த சுதாகரனுக்கு, அவரை மிகவும் பிடித்துப்போனது. சிவாஜியின் மைத்துனர் வேணுகோபால் மூலம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

இந்த வேணுகோபால், சிவாஜியின் தங்கையை மணந்தவர்; சாந்தி தியேட்டர் நிர்வாகத்தைக் கவனித்தவர். அவர் மூலம் சிவாஜியின் வீட்டில் பேச்சு வார்த்தை நடந்தது.

ஜெயலலிதாவோடு சசிகலாவின் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. வேணுகோபால் பேச்சுவார்த்தைக்கு சிவாஜியின் குடும்பம் உடன்பட்டது. சசிகலாவின் பேச்சுவார்தையில் ஜெயலலிதாவின் மனம் கரைந்தது; மௌனம் உடைந்தது.

வளர்ப்பு மகன் சுதாகரன்!

1995 ஜூன் 12-ம் தேதி சிவாஜியின் தி.நகர் இல்லத்தில் திடீரென போலீஸ் படை குவிந்தது. முதல்வர் ஜெயலலிதா, தன் தோழியோடு சிவாஜி வீட்டுக்கு வரப் போவதாக தகவல்கள் பறந்தன.

அதன்படியே ஜெயலலிதாவும் சசிகலாவும் சிவாஜியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அன்று மாலை ஜெயலலிதாவின் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

அதில் சிவாஜியின் மகள் வயிற்றுப்பேத்தி சத்திய லெட்சுமிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வளர்ப்பு மகன்’ சுதாகரனுக்கும் திருமணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் திணிக்கப்பட்டு இருந்த ‘வளர்ப்பு மகன்’ என்ற வார்த்தை அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தின. சசிகலா நிம்மதியானார்; மன்னார்குடி குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.

கல்யாணம் அல்ல… கட்சி மாநாடு!

marriage_1_17144

‘‘ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!’’ என தன் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கத் தொடங்கியதுமே அறிவித்துவிட்டார் ஜெயலலிதா.

‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க… விவரிக்க அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம்… ‘இந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கம் மறுபுறம். இவற்றைப்போட்டுக் குழப்பிக் கொண்ட அமைச்சர் ஒருவர் தட்டுத் தடுமாறி ஜெயலலிதாவிடம் அதைக் கேள்வியாக எழுப்பினார்.

அதற்கு, ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல… கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என உத்தரவிட்டு பதில் கொடுத்தார் ஜெயலலிதா.

அதன்பிறகு மின்னல்வேகத்தில் செயல்பட்டனர் அமைச்சர்கள். மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்! நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை! வழக்கமான அணிவகுப்பு ஆர்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர்.

அவருடன் தோழி சசிகலா இல்லை! அடையாறு சிக்னல் வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலை வரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண ‘சீரியல் செட்’ அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட்-அவுட்கள், சாலை நெடுக அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வரவேற்பு மேடைகளை நேரில் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் ஜெயலலிதா.

அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் ‘பேண்ட்’ அணிந்து மிடுக்குடன் காத்திருந்தனர்! நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர்.

முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

மணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள்!

marriage_8_17231தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் மாந்திரீகத் தகடுகளைக் கொண்டுவந்திருந்தார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடத்தி செய்யப்பட்ட மாந்திரீகத் தகடு என்று சொல்லப்பட்டது.

திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள்.

அத்துடன் வைர வைடூரியம் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்! திருமணம் நடந்த இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தனர்.

தமிழக அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்தனர். பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மணமேடை ஒரு அரண்மனையின் ராஜதர்பார் போல அமைக்கப்பட்டது.

மணமேடையின் வெளிப்புறம் விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டன! ஒன்று – முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை!

இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு! இந்த மூன்று மாளிகைகளையும் எப்போதும் போலீஸ் சூழ்ந்து நின்று பாதுகாத்தது!

வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என விரும்பினார் ஜெயலலிதா!

இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைத்தது கல்வித்துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளில் இருந்து மிக அழகான பத்து மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்! அந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்தினர்!

ராணி வீட்டுக் கல்யாணம்!

jaya_walk_17043சாலையெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதந்தன! ஜெயலலிதா, சசிகலா உடலெல்லாம் வைரமும் தங்கமும் மின்னின! மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் தகதகவென கலந்து கொண்டார் ஜெயலலிதா!

மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க… சரியாக 6.30-க்கு வந்தார் சுதாகரன்! அந்தக் கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகரன் நிற்க… சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர்.

சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வளர்ப்புமகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்! 6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம்.

சந்தனமரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பில் இருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! சட்டம்-ஒழுங்கு காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத்துக்கூட பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது!

கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல… அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடிக் கலக்க… தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப்படை அணிவகுத்தது! அதன் பின்னே பார்த்தால் அதிசயம்… ஆச்சரியம்! இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ஜெயலலிதா நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜுவல்லரியாக’ உடல் முழுதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக காட்சியளித்தார்.

கின்னஸ் திருமணம்!

marriage_7_17560தமிழகத்துக்கே உரிய ‘விசேஷ நிகழ்ச்சிகளுடன்’ களைகட்டியது செப்டம்பர் ஏழு… கல்யாண நாள்! மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அடுத்தடுத்து வந்திறங்க… எம்.ஆர்.சி. நகரில் இருந்த அந்த மாபெரும் திருமண வளாகம் (ப்ளேகிரவுண்ட்) கலகலப்பு பெற்றது.

‘தகதக’க்கும் தங்க நிறத்துடன் மணமேடை மினுங்கியது. பந்தல் மிக நீளமாக அமைக்கப்பட்டதால், முக்கால்வாசிப் பேர் க்ளோஸ் சர்க்யூட் டிவியில்தான் கல்யாணத்தை பார்த்தார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தவர்களில் தலையானவர் தலைமைச் செயலர் ஹரிபாஸ்கர். நாட்டியமாடுவதுபோல் அங்குமிங்கும் ஓடிச் செயல்பட்டவர் பத்மா சுப்பிரமணியம்.

இடுப்பில் இருந்த ரிவால்வரைத் தொட்டபடியே நடை பழகினார் வால்டர் தேவாரம். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை சகிதம் மனைவியுடன் வந்தார் முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீபால். சசிகலாவின் கண்ணசைப்பில் செயல்பட்டவர் இந்திரகுமாரி. தொழிலதிபர்களையும் வி.ஐ.பி-க்களையும் மட்டுமே கவனிக்கும் பொறுப்பு இந்திரகுமாரியுடையது. சசிகலா எங்கு திரும்பினாலும் அங்கே இருந்தார் அவர்.

யாதவரான பீகார் முதல்வருடன் மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் கண்ணப்பன். ஒவ்வொரு வி.ஐ.பி.க்கள் தன்னைக் கடந்து சென்றபோதும் எழுந்து எழுந்து நின்றார் முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங்.செம்மங்குடி சீனிவாச ஐயர் வந்தபோது யாரும் அவரை வரவேற்கவில்லை.

‘சிவனே’ என்று ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார். கமல்ஹாசன் மனைவியுடன் வந்து, சிவாஜி கணேசனையும் மணமக்களையும் பார்த்துப் பேசிவிட்டு, ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளாமலேயே போய்விட்டார்.

திருமண மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் மணமகனின் பெயரை ஒவ்வொரு தடவை உச்சரிக்கும்போதும், தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெ. ஜெயலலிதாவின் மகன் சுதாகரன் என்று கூறினார்கள்.

ஆனால் செவாலியர், நடிகர் திலகம் என்றெல்லாம் அடைமொழி தராமல் ‘சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தி’ என்று சிம்பிளாகச் சொன்னார்கள்.திருமண விழாவில் ஒரு ஸ்பெஷாலிட்டி! திருமண மந்திரங்களில் நிறைய திவ்யப்பிரபந்தங்களும் திருக்குறளும் சொல்லப்பட்டதுதான்.

முகூர்த்தம் பத்தரையில் இருந்து பன்னிரண்டு மணிக்குள், தாலி கட்டியபோது கரெக்டாக மணி பதினொன்று இருபது!‘‘இந்தக் கல்யாண விஷயத்திலேயே மிகக் கவனமாக முதல்வர் ஏற்பாடு செய்தது தொண்டர்களுக்கான சாப்பாடுதான்.

ஒரே மூச்சில் ஒரே சமயத்தில் பன்னிரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்தத் திருமணத்தில் சாப்பிட்டார்கள்.

இதை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு எழுதி அனுப்பப்போகிறோம்!’’ என்று அமைச்சர்கள் பரமசிவம் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் சொல்கிறார்கள். இவர்கள்தான் சாப்பாட்டுப் பந்தி ஒழுங்காக நடக்கிறதா என்று பார்க்க வேண்டிய முக்கிய இன்சார்ஜ்!

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்… நான்… நான்…

marriage_5_17258‘‘உலகிலேயே நடக்காத அளவுக்கு மிக மிக காஸ்ட்லியான ஒரு மொய் விருந்து நடந்தது. வளர்ப்பு மகனுக்குத் திருமணம் என்ற பெயரில் பல ரூபத்திலும் வந்த பரிசுப் பொருட்களை, ஏழாம் தேதி இரவே கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தனர்! தாராளமாக இருநூறு கோடி ரூபாய் தேறும் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் மிதந்தது சசிகலா குடும்பம்!’’

‘இப்படி ஒரு திருமணம் நடத்துவதற்காகவே வளர்ப்பு மகனைத் ‘தத்து’ எடுத்தாரா? அல்லது வளர்ப்பு மகனாகச் சுதாகரனை தத்து எடுத்ததால் இப்படி ஒரு ஆடம்பரத் திருமணத்தை நடத்தினாரா?” என்ற சஸ்பென்ஸுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.

மேடைக்கு வந்த பல அரசியல் புள்ளிகளுக்கு வணக்கம் சொல்லிச் சிரித்த முதல்வர், உலகப் புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசனை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனையவில்லை.

முதல் சில நிமிடங்களுக்கு மணமக்களின் இன்னொரு புறம் நின்று பார்த்த சிவாஜி, பிறகு தளர்வுடன் நடந்து தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.திருமண சம்பிரதாயங்கள் முடிந்தன.

இனி தங்களுக்கு வேலை இல்லை என்று புரிந்ததுமே, சிவாஜி கையசைத்து தன் மனைவியிடம் ஏதோ சொல்ல… ‘பரபர’வென்று மேடையிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டது சிவாஜி குடும்பம்.

மொத்தத்தில், வெற்றிகரமாக ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று தான் நினைத்ததை மணமேடையிலேயே சசிகலா குடும்பம் அதிரடியாக நிரூபித்துக் காட்டியது.

சுதாகரனுக்கு நடத்திய ஆடம்பரத் திருமணத்தின் மூலம் சசிகலா குடும்பத்தோடு மேலும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு இருந்தார். ஆனால், மக்கள் அவர் மீது வைத்திருந்த இறுக்கமான பிணைப்பை அந்த நேரத்தில் அறுத்துவிட்டு இருந்தனர்.

கதை தொடரும்…

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்!! : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.