பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்!

0
260

நெல்லையில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் மோட்டார் முருகன். இவர், மணல் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

தொழில் தொடர்பாக இவருக்குச் சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ராஜேந்திரநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

படுகாயமடைந்த மோட்டார் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்ததும் மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சுகுணாசிங் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் சாவகாசமாக ஒருவரை கொலை செய்து விட்டு சென்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன் கங்கைகொண்டான் பகுதியில் பேச்சிமுத்து என்பவரை ரியல் எஸ்டேட் தகராறு காரணமாக ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது.

அதே கும்பலுடன் மோட்டார் முருகனுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதே கும்பல் மோட்டார் முருகனையும் கொலை செய்து இருக்கக் கூடும் என்கிற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.

அந்தக் கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, இந்தக் கொலைச் சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பட்டப்பகலில், இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதால், பழைய குற்றவாளிகளே தைரியமாக இத்தகைய கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.