“என்ன சொல்ல முனைகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு…?

0
382

 

இலங்கைத்தீவில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது நாட்டில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தே தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை கோரியிருந்தார்.

அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் என்பன பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக புதிய அரசியலமைப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களது அபிலாசைகளையும், அவர்களது உரிமைக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் என கூறப்பட்டத்திற்கு இணங்க நீண்ட இழுபறிக்கு பின்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது.

அவ் அறிக்கைக்கு தமிழரசுக் கட்சி மற்றும் அதன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அதனை வடமாகாண முதலமைச்சர் அவர்களின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப் என்பனவும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும், பொது அமைப்பக்களும் எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்தி அதில் பெறும் வெற்றி மூலம் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் ஆணை கிடைத்து விட்டது.

புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட விடயங்களை மக்கள் ஏற்றுப் கொண்டு விட்டார்கள் என்கின்ற ஒரு வெளிப்பாட்டை காட்டுவதற்கு தமிழரசுக் கட்சி கடுமையாக முயல்கிறது.

இந்த நிலையிலேயே அண்மையில் தொலைகாட்சி ஒன்றின் நேரடி விவாத நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளரும், ஜெனீவா விவகாரம் முதல் புதிய அரசியலமைப்பு வரையிலான விவகாரங்களை கையாள்பவருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையில் நேரடி விவாத நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

அதில் இருந்து பல விடயங்களை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. இதில் இருந்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் அறியக் கூடிய நிலை உருவாகியும் உள்ளது.

சமஸ்டி அடிப்படையில் தான் தீர்வைப் பெறுவதற்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது. ஆனால் சமஸ்டி என்கின்ற பெயர்பலகை முக்கியமானது அல்ல.

ஆனாலும் ஒற்றையாட்சி என்கின்ற பெயர்பலகை இருக்கக் கூடாது என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்த இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பொருத்தமற்றது என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் ஒற்றையாட்சிக்புகு இணங்கிப் போகின்றோம் என்று எப்படி கூற முடியும் என சுமந்திரன் அந்த நிகழ்வில் கேள்வி எழுப்பினார்.

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள நிலையில் சிங்கள மொழியில் வெளிவந்த அறிக்கையே இலங்கையில் தாக்கம் செலுத்தக் கூடியதும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் ஆகும்.

அந்த நிலையில் தமிழில் வந்த அறிக்கையில் ஒற்றையாட்சி என்கின்ற பதம் நீங்கப்பட்டுள்ளதுடன் சிங்கள அறிக்கையில் ஏக்கய ராஜ்ஜிய என்கின்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் இந்த வரைபில் உள்ள ஒற்றையாட்சி முறைமை முன்னர் இருந்ததை விட இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது என பலதடவை கூறியிருக்கின்றார்.

அப்படி என்றால் இந்த ஏக்கிய ராச்சிய என்ற வார்த்தை தற்போது உள்ளதை விட இறுக்கமாக்கவே உள்ளது என்பதையே அவரது கருத்து வெளிப்படுத்துகின்றது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் பின்னினைப்பு ஒன்றினை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கின்றது.

Sumanthiranபுதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் சமஸ்டி தான் இருக்கின்றது என சுமந்திரன் கூறுவதை ஏற்பதாக இருந்தால் ஏன் பின்னிணைப்பில் சமஸ்டி வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுகின்றது.

ஆக, தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த இரட்டை நிலை தொடர்பில் எதனை வெளிப்படுத்த முயல்கின்றது என்ற கேள்வி தவிர்க்க முடியாததே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கூட்டுக்குள் இருந்த ஈபிஆர்எல்எப் கட்சியும் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிரசுக் கட்சியுடன் முரண்பட்டு வெளியேறியுள்ளது.

ஆனால் கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புதிய அரசியலமைப்பு வரும் வரை நாம் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் அவர்களது முயற்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தொகுதி பங்கீடு தொடர்பில் ரெலோ முரண்பட்டு தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக தெரிவித்த நிலையிலும், புளொட் தாம் தேர்தலில் இருந்து ஒதுங்குவோம் என்றே தெரிவித்திருந்திருந்தது.

இதன்மூலம் சம்மந்தனது தீர்வு முயற்சியை தாம் குழப்பக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான முடிவை எடுப்பதாக புளொட் காட்டிக் கொண்டது.

Sitharthan-yaalaruviஆனாலும் தனது வேட்பாளர்களுடனான சந்திப்பின் பின் வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அவர்கள், ‘ தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை தனக்கு இல்லை’ என அடித்துக் கூறியுள்ளார்.

இதன் மூலம் புதிய அரசியலமைப்பு மூலமும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. அதில் தமிழ் மக்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை கூட்டமைப்பு பங்காளிக் கட்சித்தலைவரும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட உபகுழு ஒன்றின் உறுப்பினருமான சித்தார்தன் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களிடம் எவ்வாறு வாக்குக் கேட்கப் போகின்றது…? அவர்களது நகர்வு என்ன என்கின்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னுறுத்தியே மக்களிடம் ஆணை கோரியது.

அதற்கு மக்களின் அதீத ஆணையும் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து விலகியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி நகர்ந்து செல்கின்றது.

இதனாலேயே தமிழ் மக்கள் அந்த தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள். இதனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கூட்டு இன்று சிதைவடைந்திருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது உரிமைக்காக போராடியவர்கள். அதற்காக அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடி இழப்புக்களை சந்தித்தாவர்கள்.

இந்த நிலையில் இவ்வளவு இழப்புக்கள், துயரங்கள், துன்பங்கள் என்பவற்றை அந்த இனம் கடந்த பின்னரும் மீண்டும் தேசிய இனப்பிரச்சனைக்கு காரணமாகவிருந்த ஒற்றையாட்சி முறைமை, பௌத்ததிற்கான முன்னுரிமை என்பவற்றை ஏற்கக் கூடிய நிலையில் இல்லை.

இதனை அம் மக்களின் பிரதிநிதிகளாக தம்மைக் காட்டும் தமிழரசுக் கட்சியின் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மக்களது அபிலாசைகளையும், அவர்களது உரிமைக் கோரிக்கைகளையும் முன்னகர்த்திச் செல்வதற்கும், அவற்றை அடைவதற்கு வழிகாட்டுவதற்கும் மட்டுமே தலைமைகள் தேவையே தவிர, அவற்றை வலுவிழக்கச் செய்வதற்கும், அடக்கி ஆண்டவர்கள் தாமாகவே கொடுப்பதை பெறுவதற்கும் ஒரு தலைமை அவசியம் இல்லை.

அத்தகையதொரு தலைமையின் கீழ் தமிழ் மக்கள் பயணிப்பதால் எதனையும் அடையவும் முடியாது. மாறாக மக்களை ஏமாற்றி தமது இருப்புக்களை தலைவர்கள் வைத்திருப்பதற்கு மட்டுமே அவை உதவும்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளையும், உரிமைகளையும் அடைவதற்காகவும், தாம் மேற்கொண்டு வரும் போராட்டங்களை முடிவுறுத்துவற்காகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய ஒரு அரசியல் சக்தியை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்கான ஒரு ஆரம்ப படியாக இன்று அரசியல்வாதிகள் மக்களின் வீட்டு படிகளுக்கு வரவேண்டிய நிலையை உள்ளூராட்சித் தேர்தல் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஒரு சரியான, நேர்மையான, கொள்கைப் பற்றுதி கொண்ட தலைமையை மக்கள் இனங்காண வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை இந்த தேர்தலில் வழங்குவதன் மூலமே மட்டுமே 2018 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய அரசியல் வீரியம் பெற்று முன்னகரக் கூடிய சூழல் உருவாகும்.

அதுவே தமிழ் தேசிய இனத்தின் இருப்புக்கான பாதுகாப்பையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்த உதவும்.

இதனை மக்கள் புரிந்து கொண்டு தமது பெருவிரல்களில் பூசப்படும் நீல நிற மையை சரியான பாதையே நோக்கி நகர்த்த பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. அதனை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

-நரேன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.