`கொடுத்தது 4; மறைத்தது 9′ – ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்களில் என்ன இருக்கிறது?

0
415

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி வருகிறது முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். `அப்போலோ மருத்துவமனையில் 13 வீடியோக்களை சசிகலா எடுத்தார்.

அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் எதிர்காலத்துக்காக சில வீடியோக்களை பத்திரப்படுத்தியுள்ளனர்’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பெயல் உட்பட முன்னணி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி அவர் மரணமடைந்தாக அறிவித்தது அப்போலோ மருத்துவமனை. ‘அவரின் மரணத்தில் மர்மம்’ எனத் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

இதன் விளைவாக முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆணையத்தின் முன் ஆஜராக, தீபா, தீபக், மருத்துவர் பாலாஜி, சசிகலா, தினகரன், சுதா சேஷய்யன் உட்பட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதால், அவர் சார்பாக விளக்கமளித்த அவரின் வழக்கறிஞர், `ஜனவரி இறுதி வரையில் மௌனவிரதம் இருப்பதால் சசிகலாவால் ஆஜராக முடியாது’ எனத் தகவல் அனுப்பினார்.

இதன்பின்னர், மருத்துவச் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்குமாறு தினகரனுக்கும் கிருஷ்ணபிரியாவுக்கும் சம்மன் அனுப்பினார் ஆறுமுகசாமி.

இதை ஏற்று நேற்று ஆணையத்தில் ஆஜரான தினகரனின் வழக்கறிஞர், சிகிச்சை வீடியோக்களைப் பென் டிரைவ் மூலமாக ஒப்படைத்தார்.

வீடியோக்களில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் குறித்து சசிகலா உறவினர் ஒருவரிடம் பேசினோம். “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 20 விநாடி வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இந்த வீடியோவை வெளியிட்டது தொடர்பாகத் தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சமாதானப்படுத்தச் சென்ற தினகரனுக்கும் தோல்வியே மிஞ்சியது.

‘தன் வாழ்நாளில் சசிகலா மௌனவிரதத்தைக் கடைப்பிடித்ததில்லை. தினகரனுடன் பேசப் பிடிக்காமல் அமைதியாக இருந்துகொண்டார்’ எனத் தகவல் பரவியது.

சசிகலா வசம் இருந்த வீடியோக்கள், விவேக்கிடம் ஒப்படைக்கப்பட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. தர்மயுத்தத்துக்குப் பன்னீர்செல்வம் கிளம்பிய அதே பிப்ரவரி மாதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார் சசிகலா.

சிறை வாசலில் நின்றுகொண்டு, ‘சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்கிறார்கள். தற்போதுள்ள சூழலில் நமது குடும்பத்துக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

நாளையே சி.பி.ஐ விசாரணை நடந்தால், அவர்களிடம் இந்த வீடியோக்களை ஒப்படைத்துவிடு’ என விவேக்கிடம் வீடியோக்களை ஒப்படைத்தார் சசிகலா.

jaya_dead_12272

இதை ஒப்படைத்தபோது தினகரனும் திவாகரன் மகன் ஜெயானந்தும் அந்த இடத்தில் இருந்தனர். தன்னிடம் ஒப்படைக்காமல் விவேக்கிடம் ஒப்படைத்ததை தினகரன் ரசிக்கவில்லை” என விவரித்தவர், “அப்போலோவில் இருந்த நாள்களில் மொத்தம் 13 வீடியோக்களை சசிகலா எடுத்தார்.

இவற்றில் சில வீடியோக்களை அப்போலோ நர்ஸ்கள் எடுத்தனர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், பரோலில் வந்தார் சசிகலா. தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து நடராஜனை சந்தித்து வந்தார்.

அப்போதும், ‘இந்த ஒரு வீடியோ (வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ) வெளியிட்டால் போதும். உங்கள் மீதான கறை நீங்கிவிடும்’ என உறவினர்கள் வலியுறுத்தியபோதும், ‘என்னைக் கொலைகாரி என்பார்கள்.

சொல்லிவிட்டுப் போகட்டும்’ என உறுதியாக மறுத்துவிட்டார். விவேக்கிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வீடியோக்கள் அனைத்தும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா அறையில்தான் வைக்கப்பட்டிருந்தன.

ஐ.டி ரெய்டில் இந்த வீடியோக்கள் வெளிப்பட்டுவிடும் என பயந்துதான், வருமான வரித்துறை அதிகாரிகளை ஜெயலலிதா அறைக்குள் நுழையவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினார் விவேக்.

தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிப்பதற்காக 4 வீடியோக்களைப் பென் டிரைவில் ஏற்றி சமர்பித்துள்ளனர். மீதம் உள்ள ஒன்பது வீடியோக்களை விவேக் தரப்பினர் வைத்துள்ளனர்” என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.