பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பும்!: வட-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு சாத்தியமா?? கனவுகள் மெய்ப்படுமா? – அ.சர்வேஸ்வரன் (பாகம்-2)

0
602

மூன்றாவது ஆலோசனையாக வடக்கு,கிழக்கு மாகாணங்களைத் தனித்ததொரு மாகாணமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளது.

இது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களின் இணைப்புப் பற்றித் தற்போது உள்ளதைவிட மிகவும் முன்னேற்றமான ஒன்றாக உள்ளது.

ஆனால், இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இவ்வாறானவொரு ஏற்பாட்டை அரசியல் அமைப்பினுள் சாத்தியமானால் அது அதியங்களுள் ஒன்றாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த மூன்றாவது ஆலோசனையானது சாத்தியமற்றதாகின்றபோது, தற்போது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களின் இணைப்புப் பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதனை உள்ளவாறாகச் சேர்த்துக் கொள்வதே சிறந்த விருப்பத் தேர்வாகத் தமிழ் மக்களுக்கு அமையலாம்.

மாகாணங்களை இணைப்பது தொடர்பில் புதிய அரசியலமைப்பிற்கான வழிகாட்டல் குழுவின் மூன்றாவது ஆலோசனையாக வடக்கு,கிழக்கு மாகாணங்களைத் தனியொரு மாகாணமாக அங்கீகரித்தல் வேண்டும் என்பது உள்ளது.

இது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களை இணைப்பது பற்றித் தற்போது உள்ளதில் மிகவும் முன்னேற்றகரமான ஒன்றாகவுள்ளது.

ஆனால், இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இவ்வாறானவொரு ஏற்பாட்டை அரசியல் அமைப்பினுள் உள்வாங்குவதென்பது சாத்தியமானால் அது அதியங்களில் ஒன்றாகப் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த மூன்றாவது ஆலோசனையானது சாத்தியமற்றதாகின்ற போது நாம் கடந்தவாரம் பார்த்தவாறான தற்போது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களின் இணைப்பைப் பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதனை உள்ளவாறாகச் சேர்த்துக் கொள்வதே சிறந்த விருப்பத் தேர்வாகத் தமிழ் மக்களுக்கு அமையும் எனலாம்.

buddist-jana-1021x563

பௌத்தத்திற்கான முதன்மைத் தானம்.
இலங்கை அரசியலில் பிரிக்க முடியாத பாகமாக பௌத்த மதம் உள்ளது. இதன் காரணமாக பௌத்த சமயத்திற்கு இலங்கையில் முதன்மைத் தானம் வழங்கும் அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் முதன்முதலாக வழங்கப்பட்டது.

இது பின்னர் மாற்றமின்றி இன்று நடைமுறையில் உள்ள, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்று நடைமுறையிலுள்ள அரசியலமைப்பானது இலங்கை குடியரசில் பௌத்த சமயத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் என்பதோடு, அதற்கிணங்க, 10 மற்றும் 14(1) (e) ஆகிய உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் உத்தரவாதப்படுத்தும் அதேவேளை, பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என்கின்றது.

உறுப்புரை 14(1) (e) ஆனது தனியான அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து தனது மத வழிபாட்டில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது என்கின்றது.

அரசியலமைப்பிலுள்ள பௌத்த மதம் பற்றி ஏற்பாடானது, இலங்கையின் அரசபூர்வ மதமாக பௌத்த மதத்தை அங்கீகரிக்காது விட்டாலும், பௌத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதுடன், பௌத்த சாசனத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்கின்றது.

இது இலங்கை அரசினை மதச் சார்புள்ள அரசாக்குகின்றது. பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரமானது, தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும் அந்த மத வழிபாட்டில் ஈடுபடுவதற்குமான உரிமைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே காணப்படுகின்றது.

பௌத்த மதம் சாராத ஏனைய மத அமைப்புக்களின் பிரசாரம் மற்றும் அம் மத அமைப்புக்களால் நலிவடைந்த நிலையிலுள்ள மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நலன்களை வழங்குவது ஆகியவை மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என்பதனால் அவை பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மீறுபவையாக அமைகின்றன என அவ்வாறான மத நிறுவனங்களைத் தாபிப்பதற்கான சட்ட மூலங்கள் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய அரசியலமைப்புத் தொடர்பான ஆலோசனைக் குழுவின் முதலாவது ஆலோசனையாக, மேலே கூறப்பட்டுள்ளவாறாக இன்றைய அரசியலமைப்பில் பௌத்த சமயத்திற்கான முதன்மைத்தானம் பற்றி எது உள்ளதோ அதனை உள்ளவாறாகவே உள்ளடக்குதல் உள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கான இரண்டாவது ஆலோசனையாக, இலங்கையில் பௌத்த சமயத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, பௌத்த சமயத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருக்கையில், எல்லா மதங்களையும் நம்பிக்கைகளையும் மதிப்பிடனும் கௌரவத்துடனும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசியலமைப்பால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளையும் எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதப்படுத்தல் வேண்டும் என்பது உள்ளது.

இந்த இரண்டாவது ஆலோசனையானது முன்னுக்குப் பின் முரணானதாக உள்ளது. பௌத்த சமயத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்படுகையில் எல்லா மதங்களும் பாரபட்சமின்றி நடத்தப்படுதல் என்பது சாத்தியமற்றது.

வழிகாட்டல் குழுவின் இந்த இரண்டு ஆலோசனைகளிலும் அடிப்படையில் பெரிய வேறுபாடு இல்லை.

இரண்டு ஆலோசனைகளிலும் முதன்மைப்படுத்தப்பட்ட நோக்கமானது, பௌத்த சமயத்திற்கு முதன்மைத் தானம் வழங்கப்படுவதுடன், பௌத்த சமயத்தைப் பாதுகாத்தலையும் பேணி வளர்த்தலையும் அரசின் கடமையாக ஆக்குவதாகும்.

இலங்கை அரசியலமைப்பிலே, பிரஜைகளுக்கிடையில் இனம் மற்றும் மதம் அடிப்படையில் பாரபட்சம் காட்டுதலாகது எனவும், அவ்வாறான பாரபட்சம் அடிப்படை மீறலாக அமையும் எனவும் உள்ளது.

ஆயினும், அரசியலமைப்பிலே பௌத்த சமயத்திற்;கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதனால் இலங்கை சமூகத்திலே பௌத்த சமயத்தவர்கள் முதன்மையானவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மத்தியில் உள்ளது.

பற்றுதல்களிலிருந்து விடுபடுதலை வலியுறுத்தாத இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மதத்திலிருந்து அரசியலை வேறாக்கி மதச் சார்பற்ற நாடுகளாக அவைகளை ஆக்கியுள்ளன.

பற்றுதல்களிலிருந்து விடுபட்டிருக்கும் பௌத்த மதத்தை பற்றியிருப்பதிலிருந்து விடுபட முடியாததாகவே இலங்கை அரசும் அரசியலமைப்பும் உள்ளன.

இலங்கையில் மதம் என்பது, இன்று மதம் என்பதற்கு அப்பாற்பட்டு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் இன்றுள்ள நிலையில் எந்த மாற்றத்தையும் புதிய அரசியல் அமைப்பில் கொண்டுவர வழிகாட்டல் குழுவானது வழிகாட்டாது எனலாம்.

மாகாண ஆளுநர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் இடையேயிருந்த அதிகார முரண்பாடு என்பது நாடறிந்த ஒன்று.

பதின்மூன்றாவது திருத்தத்தினால் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களானவை பேரளவிலான வெற்றான அதிகாரங்களாக இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் அதிகாரங்களானவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவைகளாக உள்ளன.

இவை மாகாண முதலமைச்சரின் அதிகாரங்கள் மீதான ஆக்கிரமிப்பாக மட்டும் இருக்காது, மாகாண மக்களின் இறைமை மீதான ஆக்கிரமிப்பாக மட்டும் உள்ளது.

வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணப்படுகின்ற முக்கிய அம்சங்களில் ஒன்று மாகாண ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதும் ஆகும்.

இந்த அறிக்கையானது பெரும்பாலான மாகாணங்களின் முதலமைச்சர்களின் அபிப்பிராயமாக, மாகாண சபைகளின் நிறைவேற்று அதிகாரமானது மாகாண அமைச்சரவைக்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதுடன், ஆளுநர் வெறுமனே சடங்கு ரீதியான வகிபங்கை வகிப்பவராகவே இருத்தல் வேண்டும் என்பதாக உள்ளது என்கின்றது.

வழிகாட்டிக் குழுவின் அபிப்பிராயமாக அமைச்சரவையின் ஆலோசனையின் மீது செயற்படுபவராக ஆளுநர் இருத்தல் வேண்டும் என்பது உள்ளது.

வழிகாட்டிக் குழுவானது ஆளுநர் அவரது பதவிக்காலத்தின் போது, கட்சி அரசியலில் ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும் என்கின்றது.

பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அமைவாக, ஆளுநரை நியமிப்பவராக ஜனாதிபதி உள்ளார்.

ஆகவே, ஜனாதிபதிக்கு மாகாண முதலமைச்சர் விரும்புபவரை அல்லாது மாகாண முதலமைச்சர் விரும்பாத ஒருவரையும் ஆளுநராக நியமிக்கும் அதிகாரம் உள்ளது.

மத்திய- சுற்றயல் விடயங்கள் பற்றிய உப குழுவானது அதனது விதந்துரையில் மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியினால் மாகாண முதலமைச்சரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் நியமித்தல் வேண்டும் என்கின்றது.

இந்த அறிக்கையிலான மற்றொரு அபிப்பிராயமாக மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியினால் முதலமைச்சருடனான கலந்தாலோசனையுடன் நியமிக்கப்படுதல் வேண்டும் என்பது உள்ளது.

மாகாண ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஒருமித்த இணக்கப்பாடு இருத்தல் வேண்டும் என்பது ஜனாதிபதியைப் பிணிப்பதாகவும், கட்டுப்படுத்துவதாகவும், முதலமைச்சருடன் கலந்தலலோசனை செய்வது ஜனாதிபதியை பிணிக்காததாகவும், கட்டுப்படுத்தாததாகவும் உள்ளது.

ஆனால், மத்திய சுற்றயல் பற்றிய உப குழுவின் அறிக்கையில் உள்ளதைப் போலல்லாது, வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையானது, மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்பது லழிகாட்டல் குழுவின் அபிப்பிராயமாக உள்ளது என்கின்றது.

வழிகாட்டல் குழுவின் அறிக்கையில் உள்ளதே முன்னுரிமை பெறலாம் என்பதால் மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்படுதல் வேண்டும் என்ற விடயம் புதிய அரசியரல் அமைப்பில் உள்ளடக்கப்படுவதாக அமையலாம்.

மாகாணத்திலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் விருப்பத்திற்கு மாறான ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுதல் என்பது மாகாணத்திலுள்ள மக்களின் விருப்பதற்கு மாறானதாகவும் அமைகின்றது.

எனவே. புதிய அரிசியலமைப்பில், மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியினால் மாகாண முதலமைச்சரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்படுதல் வேண்டும் என்பதாக அமைவதே பொருத்தமானதாகவும், மாகாண முதலமைச்சருக்கும் மாகாண ஆளுநருக்கும் இடையே எழக்கூடிய முரண்பாடுகளைத் தவிர்ப்பதாகவும் அமையும்.

மாகாண ஆளுநரானவர் ஜனாதிபதியின் விருப்பத்தைப் பிரதிபலிப்பவராக மட்டும் இருக்காது மாகாண மக்களின் சமூக கலாசார விடயங்களைப் பிரதிபலிக்கும் ஒருவராக இருப்பதே விரும்பத்தக்கது.

புதிய அரசியலமைப்பிற்கான ஆலோசனையாக மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், மாகாண சபைகளின் நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்படுதல் வேண்டுமென்பதுவும், மாகாண ஆளுநர் சடங்கு ரீதியான ஆளுநராகவே இருத்தல் வேண்டுமென்பதுவும் மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலான பதின்மூன்றாவது திருத்தத்திலிருந்த முன்னேற்றகரமான விடயங்களாக உள்ளன.

சட்டவாக்க அதிகாரம்
பதின்மூன்றாவது திருத்தமானது மாகாண சபைகளுக்கான நிரலிலுள்ள விடயங்கள் பற்றிய நியதிச் சட்டங்களையாக்கும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குகின்றது.

ஆனால், இந்த நியதிச் சட்ட அதிகாரங்கள் மீது மத்திய அரசாங்கம் ஆக்கிரமிப்புச் செய்ய முடியும். கடந்த ஆட்சிக்காலத்தின் போது, ஆக்கப்பட்ட திவிநெகும சட்டமானது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்களில் ஆக்கிரமிப்புச் செய்தால் மாகாண சபைகளின் சம்மதத்ததைப் பெறுதல் வேண்டுமென உயர்நீதிமன்றத்தால் தீரக்கப்பட்டது.

பதின்மூன்றாவது திருத்தமானது மாகாண சபைகளுக்கு வழங்பட்ட விடயங்களுடன் தலையீடு செய்கின்ற சட்டங்களை மத்திய அரசாங்கம் ஆக்குவதாயின், எல்லா மாகாண சபைகளினதும் சம்மதத்தை அதற்குப் பெறுதல் வேண்டும் என்கின்றது.

ஏதேனுமொரு மாகாண சபை அதற்கான சம்மதத்தை வழங்காது அச் சட்டமானத சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுமாயின் அச் சட்டமானது அதற்கான சம்மதத்தை வழங்கிய மாகாணங்களுக்குள் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

ஆனால் பாராளுமன்றம் அச்சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றினால் அச் சட்டமானது எல்லா மகாணங்களுக்கும் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு ஆக்கிரமிப்புச் செய்வதற்குப் பதின்மூன்றாவது திருத்தமானது வழி செய்கின்றது.

வழிகாட்டிக் குழுவின் இடைக்கால அறிக்கையில் மத்திய அரசானது எல்லா மாகாண சபைகளுக்கும் சம்மதம் வழங்கினால் மாகாண நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பில் சட்டத்தை ஆக்கலாமென்கின்றது.

பரவலாக்கப்பட்ட தத்துவங்களை மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக மீளப்பெறமாட்டாது போதிய அரசியலமைப்பு பாதுகாப்புகளின்றி சம்மந்தப்பட்ட மாகாண சபைகளின் சம்மதமின்றி மாகாண சபை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பில் மத்திய அரசு அச்சட்டத்தை ஆக்குதலாகாது என்கின்றது.

இதனை மேலும் ‘போதிய அரசியலமைப்புப் பாதுகாப்பின்றி’ என்ற கருத்து மயக்கமான சொற்களை நீக்கிவிட்டு, மாகாண சபைகளின் சம்மதமின்றி மாகாண சபையின் நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பில் மத்திய அரசு அச் சட்டத்தை ஆக்குதலாகாது எனவும், அவ்வாறு ஆக்கினால் அந்தச் சட்டம் சம்மதத்தை வழங்காத மாகாண சபைகளுக்கு ஏற்புடையதாகாது எனவும் இருந்தால், மாகாண சபைக்கு வழங்கப்பட்ட விடயத்தை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக பறிப்பதாகவும் அது அமையும்.

பதின்மூன்றாவது திருத்தத்திற்கமைய மாகாண சபைகளால் நிறைவேற்றப்படும் நியதிச் சட்டங்கள் ஆளுநரின் சம்மதம் வழங்கப்படும்வரை நடைமுறைக்கு வரமாட்டாது என்பதுடன், அவைகளில் திருத்தங்களைச் செய்யுமாறு கூறும் அதிகாரமும் ஆளுநருக்குள்ளது.

பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளின்படி மாகாண சபையென்றால் ஆக்கப்பட்ட நியதிச்சட்டமொன்றை ஆளுநர் அங்கீகரிப்பதற்கான வரையறைகள் இல்லை.

மாகாண ஆளுநர் மாகாணங்களின் நியதிச்சட்டத்திற்கான தனது சம்மதத்தை வழங்காவிடின், இயன்றளவு அச்சட்டத்தை மீள் பரிசீலனைக்காக அந்த மாகாண சபைக்கு மீள அனுப்புதல் வேண்டும் என்று மட்டுமே உள்ளது.

மாகாண சபைகள் அவைக்கு வழங்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நியதிச் சட்டங்களை ஆக்கும் போது அவைகளை அங்கீகரிப்பதாக அல்லது அங்கீகரிக்காமல் விடுவதா என்பது தொடர்பில் ஆளுநருக்கு இருந்துவரும் தற்றுணிவு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் அபிப்பிராயத்தை வழிகாட்டிக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆளுநர் விதந்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் (உதாரணமாக இரண்டு வார காலப்பகுதி) மாகாண சபை ஆக்கிய நியதிச் சட்டத்திற்கான தனது சம்மதத்தை வழங்குதல் வேண்டும் அல்லது மாகாண சபையின் மீள் பரிசீலனைக்காக அதனைத் திருப்பியனுப்புதல் வேண்டும்.

அவ்வாறான எதனையேனும் ஆளுநர் செய்யாதுவிடின் அக்குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர் அச் சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் என வழிகாட்டி குழுவின் விதந்துரையில் உள்ளது.

மாகாண சபையானது ஆளுநர் வழங்கிய விதந்துரைகளை உள்ளடக்கி அல்லது உள்ளடக்காது நியதிச் சட்டங்களை ஆக்கி ஆளுநரின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கும் போது குறிப்பிட்ட காலப்பகுதியினுள் (குறிப்பாக இரண்டுவார காலப்பகுதி) ஆளுநர் அந் நியதிச் சட்டத்திற்கான தனது சம்மதத்தை வழங்குதல் வேண்டும் அல்லது அந்த நியதிச் சட்டத்தை அதனது அரசியலமைப்பார்ந்த தன்மையை ஆராய்வதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

அவ்வாறான எதனையேனும் ஆளுநர் செய்யாதுவிடின் அக் குறிப்பிட்ட காலப்பகுதியின் (உதாணமாக இரண்டுவார காலப்பகுதி) பின் அச் சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் என வழிகாட்டிக் குழுவின் விதந்துரையில் உள்ளது.

மத்திய- சுற்றயல் விடயங்கள் பற்றிய உப குழுவானது பதின்மூன்றாவது திருத்தத்தால் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களுக்கான முகவுரையில் ‘எல்லா விடங்கள் தொடர்பான தேசிய கொள்கை’ என்பது நீக்கப்படுதல் வேண்டுமென்ற பரிந்துரையை வழங்கியுள்ளது.

(அடுத்த வாரமும் தொடரும்)

– அ.சர்வேஸ்வரன்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பும்!: கனவுகள் மெய்ப்படுமா? அல்லது கலைந்து செல்லுமா?- அ.சர்வேஸ்வரன் (பாகம்-1)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.