சென்னை பெண் கடத்திக்கொலை கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு

0
325
கடப்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்த சென்னை பெண் கடத்திக்கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருடைய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கடப்பாக்கம் பேரூராட்சி கடற்கரையில் உள்ள ஆலம்பாறை கோட்டை அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

அவரது உடல் கடல் மணலில் பாதி அளவுக்கு புதைந்து இருந்தது. உடலில் காயங்களும் இருந்தன.

அந்த பெண்ணின் உடல் அருகே கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் எழுதி வைக்கப்பட்டு இருந்த செல்போன் எண் இருந்தது.

அதில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பிணமாக கிடந்தவர் சென்னை எர்ணாவூர் காந்திநகரைச் சேர்ந்த முனிரா (வயது 25) என்பதும், ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

முனிராவின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முனிராவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

கடந்த 27–ந் தேதி இரவு விமான நிலையத்தில் துப்புரவு வேலை தொடர்பாக சிலரை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு முனிரா தனது கள்ளக்காதலன் ராஜேசுடன் ஆட்டோவில் சென்று உள்ளார்.

அதன்பிறகு அவரை காணவில்லை. இதுபற்றி அவருடைய தந்தை காதர்பாட்ஷா, எண்ணூர் போலீசில் மகளை காணவில்லை என புகார் செய்தார்.

ஆனால் அதன்பிறகு மாயமான முனிரா, கடப்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்து உள்ளார்.

எனவே அவருடைய கள்ளக்காதலன் ராஜேஷ், முனிராவை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரை கொலை செய்து விட்டு, உடலை கடற்கரை மணலில் புதைத்து இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜேஷை தேடியபோது அவர் மாலை போட்டு சபரிமலை கோவிலுக்கு சென்று இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

உண்மையில் அவர் சபரிமலை கோவிலுக்கு சென்று உள்ளாரா? அல்லது தலைமறைவாக உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அவரை பிடித்தால்தான் முனிரா கொலை தொடர்பாக முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.