சொர்க்கவாசல் உருவான கதை

0
225

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

விஷ்ணுபகவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.
பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந்நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

இதனால் வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள்.

தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று கருதி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

“எம்பெருமானே தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.

.அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏகாதசி தோன்றியது எப்படி?

201712291338510621_ekadasi-story_SECVPF.gif

ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

முரன் என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

அவர்களைக் காப்பதற்காக, முரனுடன் திருமால் போரிட்டார். பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னிப்பெண்ணாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று அருளினார்.

இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.