மகிந்த ராஜபக்ஸா: தருணங்களுக்கான காத்திருப்பு – கருணாகரன் (கட்டுரை)

0
377

நெருக்கடிகளாச் சூழப்பட்டுக் கொண்டேயிருக்கும் தலைவர்களில் ஒருவர் மகிந்த ராஜபக்ஸ.

இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்த ஒருவர், முடியவே முடியாது என்றிருந்த யுத்தத்தை முற்றாகவே நிறுத்தியவர், பெரிய கட்சியொன்றின் தலைவராக இருந்தவர், புகழும் கீர்த்தியுமாக இருந்திருக்க வேண்டியவர், அமைதியும் மகிழ்ச்சியும் நிறைய வாழ வேண்டியவர் இன்று கொந்தளிக்கும் அரசியற் சுழலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முக்கியமான காரணம், அவர் தன்னைச் சுற்றித் தானே உருவாக்கிய நெருக்கடிகளாகும். இன்னொன்று அவரைச் சுற்றி இந்தியாவும் மேற்குலகமும் உருவாக்கிய நெருக்கடிகள்.

இந்த இரண்டு வகையான நெருக்கடிகளும் மகிந்த ராஜபக்ஸவை மட்டுமல்ல, ராஜபக்ஸ குடும்பத்தையும் அதனுடைய எதிர்காலத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.

இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர். நீண்டகாலமாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் பின்னர் அந்தக் கட்சியின் தலைவராகவும் இருந்தாலும் இன்று எந்தக் கட்சியின் உறுப்பினர் என்று தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

இனி அவருடைய அரசியல் எதிரகாலம் எப்படி அமையவுள்ளது என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு நிலைமைகள் உருவாகியுள்ளன. இதற்கெல்லாம் காரணம், முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல, அவர் உருவாக்கிய நெருக்கடிகளேயாகும்.

உண்மையான எதிர்க்கட்சி அவருடைய கைகளில்தான் உள்ளது. இன்னும் வலுவான ஒரு தரப்பாகவே மகிந்த ராஜபக்ஸ இருக்கிறார் என்று குறிப்பிடுவோர் உண்டு.

அவரைச் சுற்றி ஒரு அணியினர் உள்ளனர் என்பதும் உண்மையே. ஆனால், அதனுடைய வலு வரவரச் சரிவடைந்து வருவதையே நிலைமைகள் காட்டுகின்றன.

தற்போது வந்துள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மகிந்த தரப்பை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது மகிந்த அணியுடன் நின்றவர்களில் சிலர் வேறு பக்கங்களுக்குத் தாவிக் கொண்டிருக்கின்றனர். மேலும் காலம் செல்லச் செல்ல இந்த நிலை மேலும் நீடிக்கலாம்.

ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் ஆயுட்காலம் நீடிக்காது என்ற நம்பிக்கையே மகிந்த தரப்பினரை ஒரு அணியாகத் திரட்டி வைத்திருந்தன. ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் முதலாவது உடன்படிக்கைக் காலம் இன்னும் சில நாட்களில் – 31.12.2017 உடன் – முடிவுக்கு வருகிறது.

இந்த ஆட்சி தொடர வேண்டுமானால், மேலும் ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இதற்குள் ஏகப்பட்ட குழப்பங்களும் இழுபறி நிலைகளும் சுதந்திரக் கட்சிக்குள் நிலவுகின்றன. இதை எப்படி அறுவடை செய்யலாம் என்றே மகிந்த ராஜபக்ஸ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதே நிலைமை நீடிக்குமானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து சிதறி விடும்.

ஏறக்குறைய 1977 க்குப் பிறகு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறித்து, அதனுடைய தலைமையைப் பலவீனப்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பாரிசவாதப் படுக்கைக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தள்ளியதைப்போன்றதொரு நிலைக்கு இப்போது ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்று கூறுகிறார்கள் சிலர்.

ஆகவே மைத்திரியும் மகிந்தவும் பகை முரணோடு தொடர்ந்தும் நிற்காமல், சினேக முரண்பாடாகக் கொண்டு மீளவும் இணைந்து சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கோரப்படுகிறது.

இதற்கான பேச்சுகளும் நடந்தன. ஆனால், உரிய நற்பயனை இந்தப் பேச்சுகளின் மூலம் பெறமுடியவில்லை. இதற்கு மகிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்திருக்கும் அணி தடையாக உள்ளது என சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

இதற்கிடையில் பொது ஜன பெரமுனவுக்கு மகிந்த ராஜபக்ஸ தலைமை தாங்கப்போகிறார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.

G.L_.Peiris_1ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலுள்ள பொது ஜன பெரமுனவை மகிந்த ராஜபக்ஸ தலைமை தாங்க முற்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான தொடர்பும் உறவும் முற்றாக இல்லாமற் போய்விடும் என்று கூறப்படுகிறது.

அப்படியானால், இன்னொரு மாற்று அணிக்கான தலைமைப்பொறுப்பை உத்தியோகபுர்வமாகவே மகிந்த ராஜபக்ஸ ஏற்பதாக அமையும்.

ஆனால், அது அவரையும் ராஜபக்ஸ குடும்பத்தினரையும் சுற்றியிருக்கும் நெருக்கடியைத் தணிக்க உதவுமா? ராஜபக்ஸ குடும்பத்தின் மீள் எழுச்சிக்கு வாய்ப்பளிக்குமா? என்ற கேள்விகள் உள்ளன.

தவிர, இப்பொழுதுள்ள சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மகிந்தவோ அல்லது அவருடைய தரப்போ ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவருமோ எடுப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்தே காணப்படுகின்றன.

மறுபக்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இது தலையிடிக் காலகட்டமே. கட்சியை எப்படி வலுவான கட்டமைப்பாக வைத்திருப்பது? என்பது பெரிய சவாலாக மாறியுள்ளது.

ranil-maithiri-88f-750x400அத்துடன், ரணில் தரப்புடன் தொடர்ந்தும் சுமுகமான முறையில் ஆட்சியைத் தொடரமுடியுமா என்ற கேள்விகளும் மைத்திரியிடம் எழுந்திருக்கிறது.

ஆனால், ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான உறவு தொடரவே போகிறது. அதற்கான சாத்தியங்களே அதிகமாக உண்டு.

ஆட்சியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகினால், அதற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும். பலர் ஐ.தே.கவின் பக்கமாகத் தாவக்கூடிய வாய்ப்புகளே உண்டு. இதுவும் மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் நெருக்கடியை உண்டாக்கும். இதில் மகிந்தவுக்கான நெருக்கடிகளே அதிம்.

உண்மையில் இந்த நெருக்கடிகளையெல்லாம் அவர் முன்னரே கடந்திருக்க வேண்டும். குறிப்பாக –

1. யுத்தத்தை முடித்த கையோடு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த அரசியல் பிரச்சினைக்கான தீர்வை – அரசியல் உரிமைப் பகிர்வை முன்வைத்திருக்க வேணும். அப்படிச் செய்திருந்தால், யுத்தக் காயங்களை அவர் ஓரளவு ஆற்றியிருக்க முடியும்.

இதனால் மகிந்த ராஜபக்ஸவின் மீதான குற்றச்சாட்டுகளில் பாதிக்கு மேல் இன்று இருந்திருக்காது.

அவர் மீதான பகையுணர்ச்சி தமிழ் மக்களிடம் இந்தளவுக்கு உச்சத்திற்கு வந்திராது. மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளும் இவ்வளவுக்கு வலுப்படுத்தப்பட்டிருக்காது.

இதை அவர் செய்யவில்லை. பதிலாக அவர் வேறு விதமாகவே இதைக் கையாள முற்பட்டார். யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தப் பிரச்சினையை அதிகாரத்தின் கீழ் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என்று கருதினார்.

இதற்கான வழிமுறையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் துரித அபிவிருத்தியை மேற்கொண்டால் சரியென எண்ணினார். இப்படியான நோக்கில்தான் அவர் சிந்திக்க வைக்கப்பட்டார். இப்படித்தான் அவருக்கு வழிகாட்டவும்பட்டது.

அபிவிருத்தி என்ற எண்ணக் கருவிற்குள் அரசியற் பிரச்சினை தொடர்பான உணர்வுகள் மறைந்து விடும், மழுங்கடிக்கப்பட்டு விடும், திருப்தியடைந்து விடும் என்று நம்பப்பட்டது.

ஆனால், அப்படி நடக்கவேயில்லை. இதற்கு மறுவளமாகவே நிலைமைகள் மாறத் தொடங்கின. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துச் சிறுபான்மைச் சமூகங்களும் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தேகிக்கத் தொடங்கின.

அவருக்கு எதிராகத் திரண்டன. அவருடைய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தையும் தூர விலகிச் செல்ல வைத்தது.

இதெல்லாம் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது என்பதை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் கணிப்பிடத் தவறினார்.

எல்லாவற்றையும் அதிகாரத்தின் மூலம் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கை அவரிடமும் அவரைச் சார்ந்தவர்களிடத்திலும் மிகுந்திருந்தது. இந்த அதிகார நம்பிக்கையே ஏனைய விடயங்களிலும் அவரை வழிநடத்தியது.

2. யுத்தத்தை வென்றதன் மூலம் உண்டாகிய வெற்றியை, அது உண்டாக்கிய செல்வாக்கை மையமாகக் கொண்டு, தன்னை வலுவான சக்தியாகக் கட்டமைக்கத் தொடங்கினார் மகிந்த ராஜபக்ஸ. தன்னை ஒரு தேசியத் தலைவராக அடையாளப்படுத்துவதற்கு முற்பட்டார்.

இதற்காகத் தன்னைச் சுற்றி தன்னுடைய குடும்பத்தினரையே அரண்களாக்க முயன்றார்.

gotabaya-415x260இதன்படியே வலுவான பொறுப்புகளில் அவருடைய சகோதரர்களான பஸில் ராஜபக்ஸவும் (பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்) கோத்தபாய ராஜபக்ஸவும் (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்) மகன் நாமல் ராஜபக்ஸவும் (இளைஞர் விவகாரங்களுக்கான பொறுப்பு) நியமிக்கப்பட்டனர்.

இந்த அணி (இந்த அணிக்குள் நிறைய உள் முரண்பாடுகள் இருந்தன என்பது வேறு விடயம்) அரசாங்கத்திற்குள்ளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் வலுவான அதிகாரச் சக்தியாக வளர்ச்சியடைந்தது.

மாற்றுத் தரப்புகளுக்கு இரண்டாம் மூன்றாம் இடம். அல்லது இடமேயில்லை என்ற அளவுக்கு ராஜபக்ஸ குடும்பத்தின் அதிகார வலு வளர்ச்சியடைந்தது.

அதிகாரம் கண்ணை மறைக்கும் என்று சொல்லப்படுவதை நிரூபிப்பதாகவே ராஜபக்ஸ குடும்பத்தினரின் நடவடிக்கைகள் அமைந்தன. எல்லாம் தன்மயம் என்ற நிலையை மகிந்த ராஜபக்ஸ உருவாக்கினார்.

இது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் நாட்டு மக்களிடத்திலும் ஜனநாயக சக்திகளிடத்திலும் ராஜபக்ஸ குடும்பத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியது. ராஜபக்ஸக்களைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியது. இதுவே அவரைத் தோற்கடித்ததும் தீரா நெருக்கடியை உண்டாக்கியதுமாகும்.

m3. மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கையாகும். சீனாவை நெருங்க அணைத்துக் கொண்டு ஏனைய தரப்பைச் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு பொறிமுறையைத் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையாக வைத்திருந்தார் மகிந்த ராஜபக்ஸ.

இந்த அணுகுமுறை இந்தியாவுக்கும் மேற்குலகத்துக்கும் இதமளிக்கவில்லை. பதிலாக அவற்றுக்கு நெருக்கடியாக அமைந்தன.

எனவே தமக்கு எதிராகவே மகிந்த ராஜபக்ஸ இயங்குகிறார் என்ற அடிப்படையில் ஆட்சியிலிருந்து அவரை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் ரணிலை அமர்த்துவதற்கு இந்தியாவும் மேற்குலகும் முயற்சித்தன.

இதற்கான வாய்ப்பை – ரணிலுக்கான வாய்ப்பை – உருவாக்கிக் கொடுத்தது மகிந்த ராஜபக்ஸவே. அதுவரையிலும் பல தோல்விகளை அல்லது தொடர் தோல்விகளைச் சந்தித்து, தோல்விகளின் நாயகன் என்று கூறப்படும் அளவுக்கு இருந்தவர் ரணில்.

அப்படியிருந்த ரணிலுக்கான ஆதரவைச் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே கொடுக்கும் அளவுக்கு மகிந்த ராஜபக்ஸ நடந்து கொண்டார்.

ரணில் வெற்றியடைந்ததோடு சுதந்திரக் கட்சியையும் பிளவு நிலைக்குக் கொண்டு சென்றார். இதன் விளைவுகளையே இப்பொழுது சுதந்திரக் கட்சியும் அனுபவிக்கிறது. மகிந்த ராஜபக்ஸவும் ராஜபக்ஸ குடும்பத்தினரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மட்டுமல்ல, தனக்குப் பிறகு தன்னுடைய சகோதரர்கள் அல்லது மகனே தலைமைப் பொறுப்புக்கு வரவேணும் என்று கருதிய மகிந்தவின் கனவுக்கு நெருக்கமாக உள்ளது இவர்களுக்கான சிறைக் கதவுகளே.

ஆகவே தீராத நெருக்கடிகளின் மத்தியிலிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அடுத்து என்ன செய்யப்போகிறார்? இந்த நெருக்கடிகளிலிருந்து தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் எப்படி மீட்கப் போகிறார்? அவருடைய கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்படி மீளப்போகிறது? என்பவையே இன்றுள்ள கேள்விகளாகும்.

– கருணாகரன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.