யாழில் பரவும் மர்ம காய்ச்சலால் சிறுவன் பலி

0
478

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் அடையாளம் காணமுடியாத காய்ச்சலால் சுகவீனமுற்றிருந்த 8 வயதான சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ். உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பீ. நிவாசன் என்ற இந்த சிறுவன் காய்ச்சல் காரணமாக கடந்த 23ஆம் திகதி மாந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிறுவன் ஆபத்தான நிலையில் இருந்ததால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை அறிய சட்டவைத்திய அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனைகளை நடத்துமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவில் 9 நோயாளிகளும், யாழ்ப்பாணத்தில் 11 நோயாளிகளும் கண்டறியாத காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து பரிசோதனையை நடத்த சுகாதார அமைச்சு கொழும்பில் இருந்து விசேட மருத்துவர்களை முல்லைத்தீவு அனுப்பி பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

பரவி வரும் காய்ச்சல் என்ன என்பது இதுவரை கண்டறியப்படாததாலும், நோய் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தாத காரணத்தினாலும் அமானுஷ்ய சக்தி இந்த நோயை பரப்பி மக்களை கொன்று வருகிறதோ என்ற அச்சம் யாழ். மக்கள் மத்தியில் நிலவுவதாக கூறப்படுகிறது.

காய்ச்சல் காரணமாக இறப்பவர்கள் ஆவியாக மாறி நோயை பரப்பி வருவதாக மக்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.