ரோஹித், ராகுல் அதிரடி..! – டி20 தொடரை வென்றது இந்திய அணி!!

0
280

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா-லோகேஷ் ராகுல் கூட்டணி தொடக்க வீரர்களாக ஆட வந்தது.

இதில் கேப்டன் ரோஹித் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக ரன்கள் சேகரித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

இந்நிலையில், 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். இருவரின் அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா.

இலங்கையின் பந்துவீச்சை ரோஹித்-ராகுல் கூட்டணி நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர்களாக சிதறடித்தது.

அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இவ்வாறாக இந்தியா 150 ரன்களை எட்டிய நிலையில், லோகேஷ் ராகுல் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதமடித்தார்.

இந்நிலையில், 12.4-ஆவது ஓவரில் ரோஹித்-ராகுல் ஜோடி பிரிந்தது. சமீரா வீசிய அந்த ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார்.

43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-ராகுல் ஜோடி 185 ரன்கள் குவித்தது.

DRqBOAKVoAALD33_22301
அவரை அடுத்து வந்த தோனி நிலையான ஆட்டத்தை கடைபிடிக்க, 18-ஆவது ஓவரில் நுவான் பிரதீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராகுல்.

அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த ஹார்திக் பாண்டியா 3 பந்துகளை எதிர்கொண்டு தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை பறக்கவிட்டு 10 ரன்களில் அடுத்த பேட்ஸ்மேனுக்கு வழிவிட்டார். அவர் நுவான் பிரதீப் பந்துவீச்சில் சமரவிக்ரமாவிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக தோனி 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து திசர பெரேரா பந்துவீச்சில் போல்டானார்.

இவ்வாறாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இந்தியா. மணீஷ் பாண்டே 1, தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், திசர பெரேரா தலா 2 விக்கெட்டுகளும், சமீரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

list1
சரிந்த விக்கெட்டுகள்: இதையடுத்து 261 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு வீழ்ந்தது.

அந்த அணியில் குசல் பெரேரா மட்டும் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். உபுல் தரங்கா 47, நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

சமரவிக்ரமா, சதுரங்கா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, திசர பெரேரா, குணரத்னே டக் அவுட் ஆகினர். மேத்யூஸ் களம் காணவில்லை.

இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல் 4, குல்தீப் யாதவ் 3, உனத்கட், ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

* இந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்தார் ரோஹித். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்) ரோஹித் சமன் செய்துள்ளார். இந்திய வீரர்களில் இத்தகைய அதிவேக சதமடித்த ஒரே வீரர் ரோஹித் ஆவார்.

* இந்த ஆட்டத்தில் இந்தியா எட்டிய 260 ரன்களே, டி20 ஆட்டத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அத்துடன் சர்வதேச அளவில் இது 2-ஆவது அதிக ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் ஆஸ்திரேலியா 263 ரன்களுடன் உள்ளது.

* இந்தூரில் இதுவரை நடைபெற்ற 7 டி20 ஆட்டங்களில் ஸ்கோரை சேஸ் செய்யும் அணியே 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

* இந்த ஆட்டத்தில் ரோஹித்-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் முதல் ஜோடி எட்டியுள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

முன்னதாக, கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித்-தவன் ஜோடி 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.