புளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா? -கருணாகரன் (சிறப்பு கட்டுரை)

0
613

 

“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளIது.

அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன.

அரசியல் ரீதியாக இன்று புளொட் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. அந்த இயக்கத்தினுடைய – அந்த அரசியற் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இன்றைய நெருக்கடிகள் உள்ளன.

உண்மையில் புளொட் மிகச் சாதாரண நிலையில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாது.

அதைப் பதற்றமடையச் செய்யுமளவுக்கான நெருக்கடிகள் இவை. கட்சி திட்டமிட்டுத் தமிழரசுக் உருவாக்கும் நெருக்கடிகளாக இருப்பதால், இந்த இடத்தில் புளொட் எதிர் நடவடிக்கைளுக்குத் தள்ளப்பட்டேயாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனாலும் “எதையும் நாம் சகித்துக் கொள்வோம். எந்த நிலையிலும் நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டோம்.

எங்களுக்குள் (கூட்டமைப்புக்குள்) பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன என்பது உண்மைதான்.

ஆனால், அதற்காக நாம் கூட்டமைப்பை விட்டு இப்போது வெளியேறப்போவதில்லை.

ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் (தேர்தல் தருணத்தில்) பிரச்சினைப் பட்டு வெளியேறினால், அது பதவிச் சண்டையினால் – ஆசன ஒதுக்கீட்டுப் பிரச்சினையினால் – வெளியேறியதாகவே அர்த்தப்படும்.

ஆகவே, இதைத் தவிர்க்க விரும்புகிறோம். கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள் என்று மக்கள் எங்களிடம் கூறினால், நாங்கள் அப்போது அதைப் பரிசீலிப்போம்.

அப்பொழுது கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதைப் பற்றி முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்.

சித்தார்த்தனுடைய இத்தகைய பொறுமை காத்தலும் எல்லை கடந்த சகிப்பும் புளொட்டை ஓரங்கட்ட தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும் செயற்பாடுகளும் புளொட்டின் (PLOT) எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

இந்தக் கேள்வி, அரசியல் நோக்கர்களிடத்திலும் புளொட்டின் ஆதரவாளர்கள் மத்தியிலும் புளொட் உறுப்பினர்களிடத்திலும் எழுந்துள்ளது. அப்படியென்றால், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் இதைக் குறித்து என்ன கருதிக் கொண்டிருக்கிறார்?

ஏனென்றால், தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தில் சித்தார்த்தனுக்கு பெரிய பிரச்சினைகளில்லை.

625.0.560.320.160.600.053.800.700.160.90சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சித்தார்த்தனுக்கு மதிப்பளிக்கின்றனர்.

இதற்கு அவருடைய தந்தையார் தர்மலிங்கத்தின் தமிரசுக் கட்சியுடனான அரசியற் தொடர்பு ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு. இருக்கலாம்.

அதற்கப்பால், சித்தார்த்தனுடைய மென்போக்கும் எதையும் பதட்டமில்லாமல் அணுகுகின்ற தன்மையும் தனிப்பட்ட ரீதியில் சித்தார்த்தனிடம் மிகுதியாக இருக்கும் நற் பண்புகளும் அவரை மதித்தே ஆக வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலையைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.

இதனால்தான் கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான தூதராக சித்தார்த்தன் செயற்படக் கூடிய நிலை உருவானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் சம்மந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் சமாதானத் தூதராகச் சித்தார்த்தனே செயற்பட்டார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால், இதே தமிழரசுக் கட்சித் தலைவர்கள், தங்கள் அடுத்த நிலையாளர்களிடத்தில் சித்தார்த்தனுக்குரிய மதிப்பை ஏற்படுத்தவில்லை.

அப்படியான ஒரு மதிப்பை ஏற்படுத்தியிருந்தால், கிளிநொச்சியில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் சிறிதரன் புளொட்டை எடுத்தெறிந்து, அவமதித்துப் பேசியிருக்க மாட்டார்.

sritharanஇவ்வளவுக்கும் அரசியல் வரலாற்றில் முதிர்ச்சியோ பெரும்பங்களிப்போ இல்லாத சிறிதரன், பெரும் பங்களிப்பையும் அனுபவத்தையும் கொண்ட புளொட் உறுப்பினர்களை அவமதித்திருக்கிறார்.

வட்டுக்கோட்டை, மானிப்பாய் போன்ற இடங்களில் சரவணபவன் புளொட்டையும் சித்தார்த்தனையும் கீழிறக்கிப் பேசியுள்ளார். இப்படிப் பல சம்பவங்கள்.

இந்த வகையில் சித்தார்த்தனுக்குத் தற்போது சில நெருக்கடிகள் உண்டு.

1. புளொட்டை தொடர்ந்தும் ஒரு அரசியற் கட்சியாக வைத்திருப்பதா? அல்லது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து (கரைந்து) விடுவதா? என்பது.

இதற்குக் காரணம், சித்தார்த்தனைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் அவருக்குத் தமிழரசுக் கட்சியுடன் கரைந்து விடுவதற்கான புள்ளிகள் அதிகமாக உண்டு.

அவருடைய தந்தையார் தர்மலிங்கம் தமிழரசுக் கட்சியின் புகழ் மிக்க தலைவர்களில் ஒருவராகவும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இது சித்தார்த்தனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான ஒரு நெருக்கத்தையும் உள்ளோட்ட உறவையும் கொண்டுள்ளது.

அத்துடன், சித்தார்த்தனைச் சுற்றியிருக்கும் அவருடைய யாழ்ப்பாணத்து ஆதரவாளர்களில் அநேகர் தர்மலிங்கத்தின் ஆதரவாளர்களே.

அதாவது இவர்கள் இன்னொரு பக்கத்தில் தமிழரசுக் கட்சியின் அபிமானிகளே. கடந்த தேர்தலில் சித்தார்த்தனின் வெற்றிக்கு இவர்களுடைய பங்கு முக்கியமானது.

இப்பொழுதும் இவர்களே சித்தார்த்தனை கணிசமான அளவுக்கு வழிநடத்துகின்றனர். ஆகவே, இவர்களை மீறிச் சித்தார்த்தனால் எந்தத் தீர்மானங்களுக்கும் செல்ல முடியாது. என்பதால் ஒரு பக்கம் அவர் புளொட்டையும் கவனிக்க வேண்டும்.

அதேவேளை தமிழரசுக் கட்சியின் உறவையும் தொடர வேண்டும். இத்தகைய ஒரு நெருக்கடி நிலை – இக்கட்டான சூழல் சித்தார்த்தனுக்குள்ளது.

2. புளொட் என்ற அமைப்பை அல்லது அரசியற் கட்சியை எப்படி அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுப்பது என்பது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இணைவதற்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வெளியே கணிசமான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்தது புளொட்.

வவுனியா மாவட்டம் அல்லது வன்னி மாவட்டம் அதற்கு ஒரு கோட்டையாக விளங்கியது எனலாம். புளொட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். வவுனியா நகரசபை புளொட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது.

வவுனியா நகரசபையின் பொற்காலம் அது என இன்னும் வவுனியாவில் பலரும் புளொட்டின் அந்த நிர்வாகக் காலத்தை மதிப்போடு நினைவு கூருகிறார்கள்.

வவுனியா நகரப்பகுதியின் இன்றைய தோற்றத்தை வடிவமைத்ததில் புளொட்டின் அந்தக் காலத்துக்கே பெருமையுண்டு. லிங்கநாதன் அன்று நகரபிதாவாகச் செயற்பட்டார். கிழக்கிலும் அதற்கு பலமானதொரு தளம் இருந்தது.

அதை விரிவாக்க வேண்டியபோதும் புளொட்டுக்குள் ஏற்பட்ட சில உள்விரிசல்களை அந்த அமைப்பைச் சற்றுப் பலவீனப்படுத்தியிருந்தன.

இதனால், இடைப்பட்ட காலத்தில் – குறிப்பாக 2009 க்குப் பிறகு புளொட்டினால் உரிய வெற்றிகளைப் பெற முடியாமற் போய் விட்டது. இதனால், அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணையக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த விளைந்தது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலமாக சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். புளொட் மெல்லத் தன்னைத் தேற்றிக் கொண்டு விட்டதாகப் பலராலும் நோக்கப்பட்டது. ஆனால், அந்த நிலை நீடிக்கவில்லை.

இப்பொழுது புளொட்டைச் சேர்த்தணைத்து உறிஞ்சிக் கெடுக்கிறது என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக என்ன செய்வது? கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதா? புளொட்டைத் தனியான அமைப்பாகவும் கட்சியாகவும் நிர்வகித்துத் தனித்து நிற்பதா? அல்லது புதியதொரு கூட்டுக்கு எதிர்காலத்தில் செல்வதா? என்று சிந்திக்க வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது புளொட்.

[UNSET]3. ரணில் விக்கிரமசிங்கவைச் சமாளிக்க வேண்டும். இதற்குக் காரணம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சித்தார்த்தனை அழைத்துப் பேசியிருக்கிறார் ரணில். தற்போதைய சூழலில் எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் சித்தார்த்தனிடம் கேட்டுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் அதற்கான வழிகாட்டற் குழுவில் அங்கத்துவராக இருக்கிறீர்கள்.

ஆகவே உங்களுக்கு இதில் கூடிய பொறுப்புண்டு. அதோடு இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் நீடிக்க வேண்டும்.

அதற்கும் நீங்கள் உதவ வேண்டும். எனவே நீங்கள் முடிந்தளவுக்கு எம்முடன் ஒத்துழையுங்கள் என்று ரணில் சித்தார்த்தனிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த சித்தார்த்தன், கூட்டமைப்பிற்குள் நிலவுகின்ற நெருக்கடிகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

அதைப் பற்றி தான் சம்மந்தனுடனும் சுமந்திரனுடனும் பேசுகிறேன் என்றிருக்கிறார் ரணில். அதன்படி பிறகு அவர் சம்மந்தனையும் சுமந்திரனையும் அழைத்து அறிவுறுத்தியுள்ளார். ஆகவே, இந்த நிலையில் ரணிலின் அறிவுறுத்தலை மீறி எந்தளவுக்கு வெளியே செல்ல முயற்சிப்பார் சித்தார்த்தன் என்பது கேள்வியே.

ஆனால், அரசியலில் ஒரு உண்மை உண்டு. பொருத்தமான இடத்தில், பொருத்தமான முடிவை எடுக்கவில்லை என்றால், அது அந்தத் தலைமைக்கும் அந்தக் கட்சிக்கும் அல்லது அந்த அமைப்புக்கும் எதிரான விளைவுகளையே உண்டாக்கும் என்பது.

அந்தத் தரப்பின் அடையாளத்தையே அழித்து விடும் என்பது. ஏறக்குறையப் புளொட்டுக்கு இவ்வாறான ஒரு சூழலே இன்று உருவாகியுள்ளது.

வரலாறு புளொட்டைப் பெரும் சோதனைக் களத்தில் தள்ளி விட்டிருக்கிறது. இதில் அந்த அமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்தால்தான், அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லையெனில் அவ்வளவுதான். இறுதி வணக்கத்தைச் செலுத்தி விட்டு அவரவர் தங்கள் வேலையைப் பார்க்க வேண்டியதே விதியாகும்.

இந்த இடத்தில் நாம் ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. இன்று விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் போராளிகளையும் தலைவர்களையும் நினைவு கூருகிறார்கள்.

அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். புளொட் தன்னுடைய ஆட்களை நினைவு கொள்கிறது. அதைப்போல ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி, என்.எல்.எவ்.ரி அல்லது பி.எல்.எவ்.ரி போன்றவையும் தங்கள் தங்கள் தலைவர்களை நினைவு கூருகின்றன.

ஆனால், ஈரோஸ் மட்டும் தன்னுடைய போராளிகளையும் நினைவு கூர்வதில்லை. தன்னுடைய தலைவர்களையும் நினைவு கொள்வதில்லை. அந்த நிலையை அது இழந்து விட்டது. இதற்குக் காரணம், வரலாறு அதற்கு உண்டாக்கிய நெருக்கடிச் சூழலில் அது தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறியமையே.

balakumaran-300x209பாலகுமாரன்

ஈரோஸ் இயக்கத்தைக் கலைத்து, புலிகளோடு தன்னை இணைத்துக் கொண்டதன் மூலமாக ஒரு கட்ட நெருக்கடியைத் தணித்து பல ஆயிரம் போராளிகளின் உயிரைப் பாதுகாத்தவர் பாலகுமாரன் என்பது உண்மை.

இதைப்பற்றிய பல முனை விமர்சனங்கள் இருந்தாலும் அன்றைய நிலையில் அது ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையே. தவிர்க்க முடியாத விளைவே.

ஆனால், அதற்குப் பிறகு அடுத்த கட்டத்தில் அவரோ அந்த அமைப்பைச் சேர்ந்த பிறரோ பொருத்தமான முடிவுகளை எடுக்காததனால், ஈரோஸ் என்ற அடையாளமே இன்று இல்லாது போய் விட்டது.

யாரும் அதை நினைவு கொள்ளவே முடியாத ஒரு வரலாற்றுக் கைவிடல் நேர்ந்துள்ளது. இவ்வளவுக்கும் அந்த இயக்கத்தில் ஆற்றல் மிக்க பல போராளிகளும் தலைவர்களும் இருந்தனர்.

ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இன்று புளொட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. பாலகுமாரனைப்போலவே பலராலும் மதிக்கப்படுகின்றவர் சித்தார்த்தன்.

இருவருக்கிடையிலும் பல ஒத்த தன்மைகள் உண்ட. பாலகுமாரனைப்போலவே சித்தார்த்தனும் மென்னியல்புடையவர். அமைதியானவர்.

இதன்காரணமாக பலராலும் விரும்பப்படுகின்றவர். இதெல்லாம் சித்தார்த்தனை நல்லவர் என்ற அடையாளத்தையே உருவாக்க உதவுகின்றன. வல்லவர் என்பதற்கு அவர் வேறு பல காரியங்களைச் செய்ய வேண்டும். அதைச் செய்து நிரூபிக்க வேண்டும். அரசியலில் நல்லவர் என்பதுடன், வல்லவர் என்ற அடையாளமும் தேவை.

Umamakeswaran_1புளொட் ஒரு காலத்தில் மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. அதனுடைய தலைவர் உமா மகேஸ்வரன் லெபனான், சிரியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆயுதப்பயிற்சியைப் பெற்றிருந்தவர்.

புளொட்டில் மிகப் பெரிய ஆளுமைகளாக நிறையப்பேர் இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமான போராளிகளைக் கொண்ட இயக்கமாக 1980 களின் நடுப்பகுதியில் இருந்த இயக்கமும் புளொட்டே.

ஆனால், அது உள் முரண்பாடுகளினாலும் வெளியே புலிகளின் நெருக்கடியினாலும் ஆயிரக்கணக்கான போராளிகளைப் பலியிட்டது. மாலைதீவு மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக நேரடியாகவே இந்தியாவோடு பகையைச் சம்பாதித்தது.

இந்த நடவடிக்கை இந்திய அரசின் தூண்டுதலில்தான் நடந்தது என்று கூறப்பட்டாலும் இதற்குப் பிறகு இந்தியா புளொட்டுடன் நல்ல மாதிரி நடந்து கொண்டதில்லை. இதன்பின்னர், இலங்கை அரசோடு மேற்கொண்ட சமரச முயற்சிகளின் விளைவாக அது கொழும்புக்கு இணக்கமாகிச் செயற்பட்டது.

இதனால், அது ஒரு காலகட்டம் வரையில் துணை இராணுவக்குழுவாகச் செயற்பட வேண்டியிருந்தது. இவற்றினால், புளொட்டுக்கு வரலாற்றில் பல கறுப்புப் பக்கங்கள் உண்டு. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் முந்திய புளொட்டின் அலுவலகம் இருந்த இடத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இதற்கு மேலும் ஒரு சான்று.

ஆனால் இதையும் கடந்து அதற்கு இன்னொரு சிறப்பான பக்கமும் வரலாற்றில் உண்டு. காந்தீயம் அமைப்போடு இணைந்து வவுனியாவிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது, தமிழ் மக்களை எல்லையோரங்களில் குடியேற்றி நிலத்தைப் பாதுகாக்க முற்பட்டது, நிலமற்ற பல நூறு குடும்பங்களுக்கான காணிகளைப்பெற்று வழங்கியது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டது என இந்தப் பங்களிப்பு நீள்கிறது. வவுனியாவிலும் மன்னாரிலும் பல கிராமங்கள் புளொட்டினால் இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதை இன்னும் நீங்கள் காணமுடியும்.

இப்படி நன்றும் தீதும் கலந்த அரசியல் வரலாற்றைக் கொண்ட புளொட், தனக்குரிய அடையாளத்தையும் செல்வாக்குத் தளத்தையும் இன்னும் தக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.

இருந்தும் அது தமிழரசுக் கட்சியினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. புலிகள், இலங்கை, இந்திய அரசுகள் ஏற்படுத்திய நெருக்கடியை விட தமிழரசுக் கட்சி உண்டாக்கும் நெருக்கடியே புளொட்டின் இதயத்தை – அதன் உயிர் முடிச்சை நசுக்கும் அளவுக்குள்ளது.

இதுதான் இன்றைய பொதுப் பிரச்சினை. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு அளவுக்கதிகமான நெருக்கடியைக் கொடுத்து அதைப் பலவீனப்படுத்தி வெளியே தள்ளியதைப்போலவே, இப்பொழுது ரெலோவுக்கும் புளொட்டுக்கும் நெருக்கடியைக் கொடுக்கிறது தமிழரசுக் கட்சி.

இந்தக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி வெளியே தள்ளி விடுவதே தமிழரசுக் கட்சியின் நோக்கமாகும். அதாவது, அணைத்துக் கெடுத்து, அழிப்பது.

புளொட்டுக்கும் பிறருக்கும் அச்சுறுத்தலை விடுத்துக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சி தன் வரலாற்றில், குறிப்பிடத்தக்க அரசியற் செயற்பாட்டையோ ஒரு பெரிய பங்களிப்பையோ எங்கும் செய்ததில்லை.

ஆனால், அது இன்று ஏனைய பங்களிப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் சவால் விடுகின்றது. நெருக்கடிகளை உண்டாக்குகிறது. இதில் சிக்கியுள்ளது புளொட்டும்.

தூண்டிலில் சிக்கிய மீனாகவும் தொண்டியில் சிக்கிய முள்ளாகவும் புளொட்டின் கதி மாறியுள்ளது. இதை எப்படிக் கையாளப்போகிறார் சித்தார்த்தன்? இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது புளொட்?

-கருணாகரன்-

கட்டுரை மூலம்: http://www.thenee.com/231217/231217.html

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.