பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் புதிய அரசியலமைப்பும்!: கனவுகள் மெய்ப்படுமா? அல்லது கலைந்து செல்லுமா?- அ.சர்வேஸ்வரன்

0
326

வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாழ்விலிருந்தும், ஆட்சி உரிமைகளிலிருந்தும், அரசியலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக அரசியலமைப்பும், அரசியலமைப்ப்pற்கான திருத்தங்களும் உள்ளன.

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை மூன்று அரசியலமைப்பிற்கான பத்தொன்பது திருத்தங்களும் ஆக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புக்கள் ஆக்கப்படும்போது தமிழ் மக்களின் உணர்வுகள் வெந்து தணிந்தது வரலாறு.

இவ்வாறான பின்னணியில் இன்று புதிய அரசியலமைப்பினை ஆக்குவது பற்றிப் பேசப்படுகின்றது.

ஆட்சியிலிருக்கும் கட்சி தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை முன்வைக்கும்போது அவற்றை எதிரக்;கட்சி எதிர்ப்பதுவும், ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் பின்னர் அவற்றை கைவிடுவதென்பதும் இலங்கையின் அரசியல் வரலாறு.

சீ-600x330

2000 ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின்போது சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சாதகமான பல அம்சங்களைக் கொண்டிருந்த அரசியலமைப்பு வரைபை அன்று எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்து இல்லாமல் செய்தது.

எனவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது, இலங்கையின் இருபெரும் தேசிய கட்சிகள் ஒன்றாகச் சேரும்போது மட்டுமே தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை அரசியலமைப்பு மாற்றங்களால் கொண்டுவர முடியும். என்பதாகும்.

இதன் காரணமாக இருபெரும் தேசிய கட்சிகள் இணைந்து சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தபோது தமிழ் மக்களின் கனவுகள் மெய்ப்படலாமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புகள்

இலங்கையின் சுதந்திர அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களுக்குப் பாதகமான அல்லது பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமான சட்டங்களை ஆக்க முடியாததான சட்ட ஏற்பாட்டைக் கொண்டிருந்தது.

இவ்வாறான ஏற்பாடு இருக்கையில், இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பிரஜா உரிமையையும், அரசியல் உரிமையையும் பறிக்கின்ற பிரஜா உரிமைச் சட்டம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமையைப் பறிக்கின்ற தனிச் சிங்களச் சட்டம் என்பன ஆக்கப்பட்டன.

இவை இலங்கையில் இன ரீதியான துருவமயப்பட்ட அரசியலுக்கும் இலங்கையர் என்ற அடையாளத்தை விட இன ரீதியான அடையானத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அரசியல் கலாசாரத்திற்கும் வழியமைத்தன.

சிங்கள மற்றம் பௌத்த அடையாளத்திற்கு அரசியலமைப்பு ரீதியான முதன்மைத் தானம் வழங்கும் அரசியலமைப்பாக 1972 இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பு ஆக்கப்பட்டது.

இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதாகும், அரசு பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கதல் வேண்டும் என்பதற்குமான அரசியலமைப்பு ரீதியான அங்கிகாரம் இந்த அரசியலமைப்பினால் வழங்கப்பட்டது.

1978 இல் இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு ஆக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பிலும் இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதுவும், இலங்கையின் அரச கரும் மொழி சிங்களம் என்பதுவும், அரசு பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்குதல் வேண்டும் என்பதுவும் மீள உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வகையில் இலங்கை அரசியலமைப்பிலும் இலங்கை அரசியலிலும் ஒற்றையாட்சி என்பதுவும், பௌத்த மதத்திற்கான முதன்மைத் தானம் என்பதுவும் அகற்ற முடியாதவாறு ஆழமாக வேரூன்றியவைகளாக ஆக்கப்பட்டன.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது இலங்கை – இந்திய ஒப்பந்தமென்ற பின்னணியில் அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திருத்தச்சட்டமாகும்.

பதின் மூன்றாவது திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் முக்கியமான விடயங்களாக தமிழுக்கான அரசகரும மொழி அந்தஸ்து, அடுத்துள்ள மாகாணங்களின் இணைப்பு, மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்களின் நிரல், மாகாண ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைகளின் நியதிச்சட்ட ஆக்க தத்துவம், மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் என்பவைகளைக் குறிப்பிடலாம்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திலிருந்த உள்ளார்ந்த குறைபாடுகள் மற்றும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் உள்ளடக்கங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யப் தவறியமை ஆகியவை இனப்பிரச்சினையைத் தீர்க்காமையால், அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பிற்கான தேவை ஏற்பட்டது.

275px-Prabhakaranசந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தில் 1997-2000 வரையான காலப்பகுதியில் அதிகரித்தளவினதாக அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பிற்கான வரைபு ஆக்கப்பட்டது.

ஆயினும் எதிர்க்கட்சியினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளினதும் எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் அரசியல் வரலாற்றிலான அதிகூடிய அதிகாரப் பகிர்விற்கான அரசியலமைப்பு ஆக்கப்படும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பிற்கான முன்மொழிவுகள்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாகவும், நாட்டிலுள்ள இனப்பிரச்சினை உள்ளிட்ட பல அரச அமைப்புக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் வாக்குறுதி வழங்கி, இலங்கைத் தேசிய அரசியலில் பிரதான கட்சிகள் இணைந்து சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் இன்றைய அரசாங்கத்தை அமைத்தன.

அரசியலமைப்பிற்கான பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை ஆக்கி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பை ஆக்கும் களப் பரீட்சையில் இறங்கியுள்ளது.

நாட்டில் முதன்முறையாக மக்கள் கருத்துக்களைக் கேட்டு ஆக்கும் அரசியலமைப்பாகவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் ஆக்கப்படும் அரசியலமைப்பாகவும் இது உள்ளது.

srilanka_parliament-8-415x260

09 மார்ச் 2016 அன்று பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையானது, 05 ஏப்ரல் 2016 அன்று அதனது முதலாவது அமர்வில் ஏகமனதாக புதிய அரசியலமைப்பை ஆக்குவதற்கான ரணில் விக்கிரமசிங்கவைத் தவிசாளராகக் கொண்ட வழிப்படுத்தல் குழுவை நியமித்தது.

வழிப்படுத்தும் குழுவானது புதிய அரசியலமைப்புத் தொடர்பான பன்னிரண்டு பிரதான விடயங்களை அடையாளம் கண்டு அவற்றுள் ஆறு விடயங்களை 05 மே 2016 அன்று அரசியலமைப்புப் பேரவையில் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களுக்கு வழங்கியது.

மத்திய – சுற்றயல் உறவுகள், சட்டம் ஒழுங்கு, அடிப்படை உரிமைகள், நீதித்துறை, பகிரங்க சேவை மற்றும் பகிரங்க நிதியம் ஆகிய விடயங்கள் தொடர்பிலேயே இந்த உப குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த உப குழுக்கள் தமது விதந்துரைகளுடனான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. இவற்றைவிடப் பாராளுமன்றுக்கும், மாகாண சபைகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி ஆராய வழிகாட்டல் குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட நோக்கத்திற்கான குழுவும் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானமாக அமையும் சர்ச்சைக்குரிய ஆறு விடயங்கள் உள்ளடங்காது, அவை தொடர்பான தனது விதந்துரைகளுடனான இடைக்கால அறிக்கையை வழிப்படுத்தும் குழு 21 செப்டெம்பர் 2017 அன்று சமர்ப்பித்தது.

தமிழ் சொற்களில் சிங்களப் பொருள் விளக்கங்கள்.

புதிய அரியலமைப்பாக்க முயற்சியில் அதிகம் விவாதத்திற்குரிய சொற்பதமாக இருப்பது ‘ஒருமித்த நாடு’ என்பதாகும். அரசியலமைப்பிற்கு அறிமுகமில்லாத இச் சொல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதே தென்னிலங்கையில் சர்ச்சையையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

தமிழரசியலிலான புதிய தமிழ் சொற்களைத் தென்னிலங்கையில் உள்ளவர்கள் நுணுக்குக்காட்டிகளால் ஆராய்ந்து பார்ப்பது முதற்தடவை அல்ல.

அண்மையில் தீர்க்கப்பட்ட சந்திர சோமா எதிர் மாவை சேனாதிராஜா என்ற வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கிட்டவர், இக் கட்சியானது தனது யாப்பினை 2008 இல் திருத்தி சமஷ்டி என்ற சொற்பதத்தை கூட்டாட்சி என்ற சொற்பதத்தால் பதிலீடு செய்துள்ளது எனவும், பதிலீடு செய்யப்பட்ட இச் சொற்பதமானது தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாகச் சேருவதையே குறிக்கும் என்பதால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குறிக்கோள்களில் ஒன்றான தனியரசு ஒன்றை இலங்கை ஆள்புலத்தில் தாபிப்பது உள்ளதெனவும் வாதிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தனது யாப்பிலுள்ள சமஸ்கிருத சொற்பதமாக சமஷ்டி என்பதற்கு இணையான தூய தமிழ் சொற்பதமான இணைப்பாட்சி என்பதனால் பதிவிட்டதனை இவ்வழக்கிட்டவர் தவறாக மொழிபெயர்ப்பின் மூலம் தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாகச் சேர்ந்து அமைக்கின்ற கூட்டாட்சி என்பதாகப் புரிந்துள்ளார் என்பதையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நோக்கம் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கையிலுள்ள தமிழ் பேசும் வடக்கு, கிழக்கிலான பாரம்பரியப் பிரதேசங்களில் சுய நிர்ணயக் கோட்பாடுகளுக்கு அமைய மக்களுக்கான சுய ஆட்சியைப் பெறுவதாகும் என்பதையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியால் ஆதார ஆவணங்களிலிருந்து உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இன்று ‘’ஒருமித்த நாடு’ என’பது தென்னிலங்கையில் பாரமானியாலும், நுணுக்குக் காட்டியாலும் ஆராயப்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒருமித்த கருத்தில்லாத ‘ஒருமித்த நாடு’

இதுவரை காலமும் அரசியலமைப்புக்களில் இருந்துவந்த ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற சிங்கள சொற்பதத்திற்கான தமிழ் சொற்பதமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது ‘ஒற்றையாட்சி’ என்பதாகும்.

சிங்கள சொற்பதமானது நாட்டின் தன்மையைப பற்றியதாக உள்ளபோது, தமிழ் சொற்பதமானது ஆட்சி முறையைப் பற்றியதாக உள்ளமை எந்தளவுக்குப் பொருத்தமானது என்ற வினா எழுகின்றது.

எனவே, சிங்களச் சொற்பதத்திற்கு இணையான தமிழ் சொற்பதத்தாலான பதிலீடு அவசியமாகின்றது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பிற்கான ஆலோசனையில் சிங்களச் சொற்பதமானது மாற்றமடையாது ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதாக இருக்க தமிழ் சொற்பதமானது ‘ஒருமித்த நாடு’ என்ற புதிய சொற்பதத்தால் பதிலீடு செய்யப்பட்டது.

‘ஒருமித்த நாடு’ என்பது ‘எக்சத் ராஜ்ஜிய’ என்ற ‘ஐக்கிய நாடு’ என்ற சந்தேகத்தை இது தோற்றுவித்தது. ‘ஒருமித்த நாடு’ என்பது ஒற்றை என்பதைவிட வேறானவை ஒன்றாவதனை சார்ந்ததாகவே அதிகம் உள்ளது எனலாம்.

இவ்வாறான நிலையில் எழும் வினா என்னவெனின், ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதமானது சமஷ்டி என்று ஆகிவிடுமோ என்பதாகும்.

‘ஒருமித்த நாடு’ என்பதனைத் தனியாக எடுத்துப்பார்த்துப் பொருள் விளக்கம் வழங்க முடியாது. புதிய ஆலோசனையில் இறைமை மக்களுக்கு உரியதாகவும், பாராதீனப்படுத்தப்பட முடியாததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் உள்ளதெனப்படுகின்றது.

அரசியலமைப்பால் வழங்கப்பட்ட தத்துவங்களைப் பிரயோகிக்கும் மத்திய மற்றும் மாகாணங்களைக் கொண்டதாக, ‘ஏக்கிய ராஜ்ஜிய’ ஒருமித்த நாடு உள்ளதெனப்படுகின்றது.

அத்துடன் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ ஒருமித்த நாடு பிரிக்கப்படாததாக அல்லது பிரிக்கப்பட முடியாததாக உள்ளது என்பதுடன், அரசியலமைப்பிற்கான திருத்தமானது அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக பாராளுமன்றத்தினாலும் மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்கின்றது.

இறைமை பகிரப்படாத, பாராளுமன்றத்திற்கு இணையான சட்டவாக்க அமைப்பை கொண்டிராத, பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறமுடியாத ஏற்பாடுகளைக் கொண்டிராத மற்றும் அதிகாரங்களைப் பகிராது அதிகாரங்களைப் பரவலாக்கியுள்ள புதிய அரசியலமைப்பு ஆலோசனையில் உள்ள ‘ஒருமித்த நாடு’ என்பது சமஷ்டி முறையிலமைந்த ஒரு நாடாக அமைய முடியாது.

சட்டவாக்கங்களில் சிங்கள மொழியில் உள்ளதற்கும் தமிழ் மொழியில் உள்ளதற்கும் முரண்பாடுகள் ஏற்படுமாயின், சிங்கள மொழியில் உள்ளதுவே மேலோங்கும் எனப் பாராளுமன்றம் எல்லா சட்டங்களிலும் உள்ளடக்கி வருகின்றது.

எனவே ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதற்கு ஒருமித்த நாடு என்பதற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் சிங்கள் மொழியிலுள்ள ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதுவே மேலோங்கும். எனவே தமிழில் என்ன சொற்பதம் உள்ளது என்பதைக் காட்டிலும் சிங்கள மொழியில் என்ன சொற்பதம் உள்ளது என்பதே முக்கியமானது.

2000 ஆண்டு ஆகஸ்டில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான வரைபானது அரசு மத்தியையும் பிராந்தியங்களைக் கொண்டதாக அமையும் என்று இருந்தது.

இது தெளிவான சொற்பதத்திலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான நாட்டின் அமைப்பு முறையிலான ஒரு மாற்றம் ஆகும்.

தென்னிலங்கையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையானது மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை பரவலாக்க செய்ய உடன்படுவதாக இருந்தாலும், நாட்டினதும் ஆட்சிமுறையினதும் தன்மை சமஷ்டி முறையை நோக்கிச் செல்வதாக இருத்தலாகாது என்பதில் கண்களை அகல விரித்ததாக உள்ளது.

ஒற்றையாட்சி என்பதால் எது கருதப்படுகின்றதோ அதனை நாடியதான சொற்பதத்தைச் சேர்ப்பதிலும், அதனை வலுப்படுத்துதல் வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை செலுத்துவதாகவே தென்னிலங்கை அரசியல் உள்ளது.

புதிய அரசியலமைப்பில் பிரிக்கப்படாத பிரிக்கப்பட முடியாத நாடு என்பது போதியளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும், தென்னிலங்கையில், ‘ஒருமித்த நாடு’ என்பது சமஷ்டி என்று ஆகிவிடுமோ என்பதுமான அச்சமே விஞ்சியுள்ளது.

இவ்வாறான ஒருமித்த கருத்தில்லாத ‘ஒருமித்த நாடு;’ புதிய சொற்பதத்தால் பதிலீடு செய்யப்படுமா என்ற வினா எழுகின்றது. இதில் எந்தச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டாலும், அது வழங்குவதாக முன்வைக்கப்படும் அதிகாரங்களின் தன்மையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

North-And-East

வடக்கு, கிழக்கு இணைப்பு.
பதின்மூன்றாவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்புரை 154 (3) ஆனது, அடுத்துள்ள மாகாணங்களை சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் இணைக்கலாம் என்கின்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பைப் பிரிக்கும் வகையில், விஜயசேகரா எதிர் சட்டமா அதிபர் என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தால் 2006இல் வழங்கப்பட்ட தீர்ப்பானது, வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்த மாகாண சபைகள் சட்டத்திலுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக வடக்கு, கிழக்கு இணைப்பை நீடித்துச் சென்றமையானது அரசியலமைப்பிற்கு மாறானது என்பதாக மட்டுமே இருந்தது.

மாகாணங்களை இணைப்பது அரசியலமைப்பிற்கு மாறானது என்பதாகவோ அல்லது மாகாணங்களை இணைப்பது பற்றி அரசியலமைப்பு ஏற்பாடுகளை இல்லாததாக்கும் வகையிலோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கவில்லை.

அடுத்த மாகாணங்களை ஒரே மாகாண சபையாக இணைப்பது என்பது இன்னமும் அரசியலமைப்பின் பாகமாவே இருந்துவருகின்றது.

மாகாணங்களை இணைப்பது பாராளுமன்றின் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெறவேண்டிய அவசியமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய அவசியமோ இல்லை.

பாராளுமன்றமானது சாதாரண பெரும்பான்மை மூலம் இருந்துவரும் மாகாண சபைகள் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் அல்லது புதிதாகவொரு சட்டத்தை ஆக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். இதன்போது அவசியமானால் தேவையான நிபந்தனைகளை உள்ளடக்கலாம் அல்லது சாதாரண சட்டத்தின் மூலம் நிபந்தனைகள் இல்லாதும் இணைக்கலாம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனையில் மூன்று ஆலோசனைகள் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.

முதலாவது ஆலோசனை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள மாகாணங்களின் இணைப்புப் பற்றிய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக இணைக்கப்படும் ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதென்பது உள்ளது.

இது பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ள, பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் மாகாணங்களை இணைக்கலாம் என்பதற்கு மேலதிகமான நிபந்தனையாக உள்ளது.

இவ்வாநாக அமையுமானால் பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் வடக்கு,கிழக்கு இணைப்பைப் பற்றி மட்டும் ஏற்பாடுசெய்வது மட்டும் போதுமானதாகாது என்பதுடன், அதற்கு மேலதிகமாக சம்மந்தப்பட்ட மாகாணங்களின் மக்களின் விருப்பையும் பெறுதல் வேண்டும்.

இது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மாகாணங்களின் இணைப்புப் பற்றிய பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திலிருந்து பின்னோக்கி செல்வதாக அமையும்.

இரண்டாவது ஆலோசனையாக அரசியலமைப்பானது மாகாணங்களின் இணைப்பை ஏற்பாடுசெய்தல் ஆகாது என்று உள்ளது. இது மாகாணங்களின் இணைப்பைப் பற்றி ஏற்கனவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை இல்லாது செய்வதாகும்.

இவ்வாறான ஒரு ஏற்பாடு உள்ளடக்கப்படுமாயின் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றிய ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் எதிர்காலத்தில் ஏற்படுத்துவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதுடன், வடக்கு, கிழக்கு இணைப்பும் என்பதும் எதிர்காலத்தில் சாத்தியமற்றதொன்று ஆகும்.

தொடரும்…

அ.சர்வேஸ்வரன்
கொழும்பு பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.