சசிகலாவுக்குச் சம அதிகாரம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 49

0
900

சசிகலாவின் சதுரங்கம்!

சசிகலாஅ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்.

அந்த ஆட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெட்டப்பட்டனர்; அதிகாரிகள் அகற்றப்பட்டனர்; அமைச்சர்களின் பதவி பலி வாங்கப்பட்டன; ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டன; தேவைப்படும்போது சசிகலாவின் சொந்தங்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆனால், ஜெயலலிதாவின் ராஜ்ஜியத்தில், சசிகலா மட்டும் இறுதிவரை ராணியாகவே வலம் வந்தார்.

imageproxy-14சசிகலா-ஜெயலலிதா உறவை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, “சசிகலா தனக்குச் சமமான அதிகாரம் படைத்தவர்” என்பதை ஜெயலலிதா சொல்லாமல் சொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில்கூட அந்தளவுக்கு சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்தான். ஆனால், தஞ்சை மாநாடு மன்னார்குடி குடும்ப மாநாடாகவே நடந்து முடிந்தது.

அந்தக் கதை அரங்கேறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, போயஸ் தோட்டத்துக்குள் புகுந்த ஒரு புதிய சக்தி சசிகலாவுக்குச் சிறிது நாள்கள் லேசாக குடைச்சல் கொடுத்தது.

ஜெயலெட்சுமி Vs சசிகலா!

ஜெயலலிதாவின் சொந்த சித்தி ஜெயலெட்சுமி. 17 வருடங்களுக்கு முன்னால், ஜெயலலிதாவுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதாவோடு இருந்த பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டார்.

அதன்பிறகு ஜெயலலிதாவும் சித்தியைத் தேடிப் போகவில்லை. ஆனால், மீண்டும் ஜெயலலிதா-ஜெயலெட்சுமி உறவு துளிர்த்தது.

1994-ம் ஆண்டு ஜெயலெட்சுமி திடீரென சீனுக்கு வந்தார். ஜெயக்குமாரின் குடும்பம் வெளியே போன சில நாள்களில் ஜெயலெட்சுமி போயஸ் கார்டனுக்குள் புகுந்தார்.

“தன் கணவருக்கு அப்போலோவில் சிகிச்சை நடக்கிறது. அதற்கு ஜெயலலிதா உதவ வேண்டும்” என்ற கோரிக்கையோடுதான் அவர் போயஸ் கார்டன் வந்தார்.

அதற்கு முன்பே ஜெயலலிதாவின் வளர்ச்சி பற்றி ஜெயலெட்சுமி அறிந்து வைத்திருந்தாலும், அதை நேரில் அவர் கண்டதில்லை. ஆனால், போயஸ் கார்டன் வீட்டுக்குள் வந்தபிறகே ஜெயலெட்சுமிக்கு எதார்த்தம் புரிந்தது.

அரசியலில் ஜெயலலிதா அடைந்திருந்த அபார வளர்ச்சி, ஜெயலலிதாவிடம் குவிந்து கிடந்த அதிகாரம், ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்த செல்வச் செழிப்பின் மகத்துவத்தை உண்மையாக அவரால் உணர முடிந்தது.

போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றிப் பார்த்துப் பிரமித்தார். ஜெயலலிதாவின் காருக்கு முன்னும் பின்னும் அணிவகுக்கும் பாதுகாப்புப் படைகள், ஜெயலலிதா முன் குனிந்து வணங்கும் அமைச்சர்கள், ஜெயலலிதாவின் தரிசனத்துக்காக காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, ஒரு விஷயம் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. அது சசிகலாவின் இருப்பு. போயஸ் கார்டன் மாளிகையில் எல்லாம் இருந்தாலும், அவற்றோடு ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருக்கும் ஆபத்தான மாளிகையைப் போலவே அது இருப்பதாக ஜெயலெட்சுமி உணர்ந்தார்.

எப்போதும் ஜெயலலிதாவை நிழலைப்போலவே ஒட்டிக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகவும் ஜெயலெட்சுமி கருதினார்.

சசிகலாவைத் தாண்டி ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியவில்லை; ஜெயலலிதாவை அப்படி எதையும் செய்ய சசிகலாவும் அனுமதிப்பதில்லை” என்பதும் ஜெயலெட்சுமிக்கு அப்போது புலப்பட்டது.

வீட்டில் தனக்கு வேண்டிதகவல்களை யார் கொடுப்பார்கள் என்று ஜெயலெட்சுமி ஆழம் பார்த்தார். அதற்கும் சிலர் இருந்தனர்.

imageproxy-13சசிகலாவை நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த சிலர் ஜெயலெட்சுமியிடம் மனம் திறந்து விஷயங்களைக் கொட்டினர்.

அதன்பிறகு, ஜெயலெட்சுமியும் ஜெயலலிதாவை நிழல் போல் தொடர ஆரம்பித்தார். அந்தப் புள்ளியில், சசிகலா-ஜெயலெட்சுமிக்கு இடையில் பனிப்போர் மூளத் தொடங்கியது.

அந்த நேரத்தில், சென்னை தரமணியில் திரைப்பட நகரம் திறக்கப்பட்டது. அந்த விழாவில் ஜெயலெட்சுமியும் பிரதான வி.ஐ.பி-யாக பங்கேற்றார்.

அது சசிகலாவை உச்சக்கட்டமாக எரிச்சல் அடைய வைத்தது. “கணவரின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்தவர், நிழலாகத் தொடர ஆரம்பித்து, இன்று அரசு விழாவுக்கும் வந்துவிட்டாரே…” என அச்சமடையத் தொடங்கினார்.

“உண்மையில், ஜெயலெட்சுமி கணவரின் சிகிச்சைக்காக வரவில்லை… வேறு நோக்கத்தோடு வந்துள்ளார்” என சசிகலா சந்தேகப்படத் தொடங்கினார்.

போயஸ் தோட்டத்துக்குள் கனன்று கொண்டிருந்த சசிகலா-ஜெயலெட்சுமியின் அதிகாரச் சண்டையின் அனல் மெல்ல வெளியிலும் அடிக்கத் தொடங்கியது.

இருவரும் ஒருவரைமாற்றி ஒருவர் உளவு பார்க்கத் தொடங்கினர். உளவு ரிப்போர்ட்டுகள், சசிகலாவின் சந்தேகம் சரியானதே என்பதை உறுதி செய்தன.

“ஜெயலெட்சுமியின் வருகை, கணவரின் சிகிச்சைக்காக அல்ல; ஜெயக்குமார் கேட்டுக் கொண்டதன்படி, ஜெயக்குமார்-ஜெயலலிதா குடும்பங்களை இணைப்பதற்காகவும், சசிகலாவை கொஞ்சம் தலையில் தட்டி வைப்பதற்காகவும்தான்” என்று உளவுத்துறை அறிக்கை சொன்னது.

சசிகலா உள்ளே… ஜெயலெட்சுமி வெளியே!

imageproxy-12ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமிதரமணியில் ‘ஜெ.ஜெ பிலிம் சிட்டி’ திறப்பு விழா நடந்த அன்று மாலை, தீபக்கிற்கு பூணூல் அணிவிக்கும் விழாவும் நடந்தது.

அங்கு சென்ற ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமி, பல விஷயங்களை ஜெயக்குமாரிடம் பேசினார்.

அங்கிருந்து மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவர், ஜெயலலிதாவிடம் பேசினார். ‘நீ ஏன் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வரவில்லை’ என்று ஜெயலெட்சுமி கேட்டபோது, ‘எனக்கு அழைப்பே அனுப்பவில்லையே’ என்றார் ஜெயலலிதா.

உடனே, ஜெயலெட்சுமி பல விஷயங்களைப் போட்டு உடைத்தார். “அண்ணன் உனக்கு அழைப்பிதழ் அனுப்பினான். 10-க்கும் மேற்பட்ட தடவை ‘பேக்ஸ்’ தகவல் கொடுத்துள்ளான்.

ஆனால், அவை எதுவும் உன்னை வந்து சேரவில்லை. அவற்றை உன்னிடம் சேர்க்காமல், இங்குள்ள சிலர் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டனர்” என்றார். ஜெயலலிதா அதிர்ந்து போனார்.

அதன்பிறகு ஜெயலெட்சுமி சொன்ன பல விஷயங்கள் ஜெயலலிதாவை மிரள வைத்தன. ஆனால், என்ன செய்ய? இதற்காகவெல்லாம், சசிகலாவைப் பிரிந்துவிட முடியாது.

இந்த விஷயங்களை நான் சசியிடம் பேசி சரி செய்துவிடுவேன். ஆனால், சசி இங்கிருந்து சென்றுவிட்டால், அந்த இழப்பை வேறு எதுவாலும் நிகர் செய்ய முடியாது” என ஜெயலெட்சுமியிடம் கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா.

அதன்பிறகும் ஜெயலெட்சுமி எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் மனதைக் கரைக்க முடியவில்லை. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலெட்சுமியும் போயஸ் கார்டனை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

சித்தி சொல்வதில் உண்மை இருப்பது ஜெயலலிதாவுக்குப் புரிந்தாலும், அதைவிட அதிகமாக சசிகலாவின் இருப்பு ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. அதனால், சசிகலாவை போயஸ் கார்டனுக்குள் உள்ளேயே வைத்துக்கொண்டு, சித்தியை வெளியேற்றினார் ஜெயலலிதா.

imageproxy-11சசிகலாவுக்கு சம அதிகாரம்

தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தன் வழக்கமான ஆடம்பரங்களுடன் நடத்தினார் ஜெயலலிதா.

உலகத் தமிழ் மாநாடு, தமிழின் புகழைப் பாடியதைவிட, ஜெயலலிதாவின் புகழையே அதிகமாகப் பாடியது.

அந்த மாநாட்டில் உறுதியாக… இறுதியாக ஒன்றைத் தெளிவுபடுத்தினார் ஜெயலலிதா. “தானும் சசிகலாவும் சமம்… இருவரின் அதிகாரமும் சம அதிகாரம்” என்பதை அந்த மாநாட்டில் ஜெயலலிதா நிருபித்தார்.

முதல்நாள் ஊர்வலத்தைப் பார்வையிட சசிகலா குடும்பத்துக்குத் தனி மேடை அமைக்கச் சொல்லி ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் எல்லாம் சாலையில் அமர்ந்து மாநாட்டைப் பார்வையிட, சசிகலா குடும்பம் தனி மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்தது.

அதைவிட முக்கியம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட விஐபி-கள் அனைவருக்கும் சசிகலாவைத் தானாகப் போய் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா.

‘வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, தானும் சசிகலாவும் சேர்ந்திருக்கும் படத்தைத்தான் கொடுக்க வேண்டும்’ என்று கறார் உத்தரவும் போட்டார் ஜெயலலிதா.

தஞ்சையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கிய அந்த 5 நாள்களும் தஞ்சை பஞ்சர் ஆனது. மூன்றாம் நாளில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில், தஞ்சையில் உள்ள அனைத்து ரோடுகளும் முடக்கப்பட்டன.

பீரங்கி வண்டிகளோடு வந்திருந்த Anti Air Craft ராணுவத்தினர், வானில் ஏதாவது சந்தேகப்படும்படியான விமானங்கள் பறக்ககிறதா? எனக் கண்காணிக்க ஆரம்பித்தபோது தஞ்சை மக்கள் கதிகலங்கினர்.

அலங்காரங்கள், ஆடம்பரங்கள், கலைப் பயிற்சிகள் என்று மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டன.

மாநாட்டுக்குப் பல நாள்களுக்கு முன்பு இருந்தே, சாலைகள் முழுவதும் 50 கி.மீ. தூரத்துக்கு யூப் லைட்டுகளைப்போட்டு இரவைப் பகலாக்கி இருந்தனர்.

இதுதவிர சோடியம் விளக்குகள், கட்-அவுட்கள் என்று தஞ்சை குலுங்கியது. விளக்குகளை அமைப்பதற்கான மொத்தக் குத்தகையை எடுத்திருந்தவர், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் பிள்ளைகள்தான்.

நீதியால் சரித்திரம்… நிதியால் தரித்திரம்!

மாநாட்டின் முதல் நாளான்று எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்பட்டது. மூன்றரை மணி நேரம் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்வையிட மூன்று மேடைகள் அமைக்கப்பட்டன.

முதல் மேடையில் ஜெயலலிதா, சசிகலா, வெளிநாட்டு அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இரண்டாவது மேடை தமிழக அமைச்சர்களுக்காக. மூன்றாவது மேடை சசிகலாவின் குடும்பத்துக்காக.

தஞ்சை காவலர் அணிவகுப்புத் திடலில் 1-ம் தேதியில் இருந்து 5-ம் தேதி வரை கவியரங்கள் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கவிஞர்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல, மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தியை கவிதைகளால் இகழ்ந்தனர்.

imageproxy-10ஜெயலலிதாவைப் புகழ்ந்தனர். அப்படிப் படிக்கப்பட்ட கவிதை ஒன்றில்,

“திருவாரூருக்கு நீதியினால் (மனுநீதிச் சோழன்)
வந்தது சரித்திரம்…
நிதியினால் (கருணாநிதி வந்தது தரித்திரம்…”

என்ற வரிகள் வந்தபோது, சசிகலாவும், ஜெயலலிதாவும் ரசித்துச் சிரித்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் இந்திராகுமாரியும் ரசித்துச் சிரித்தார்.(மேலே உள்ள படம்).விழாவில் பிரதமர் நரசிம்மராவ் ஒப்புக்கு கலந்துகொண்டு ராஜராஜ சோழனின் ஸ்டாம்பை வெளியிட்டார்.

நடராஜனுக்குத் தடா!

imageproxy-9ஜெயலலிதா அந்தக் காலகட்டத்தில், சசிகலாவை தனது சதுரங்க ஆட்டத்தில் ராணியாக வைத்துக்கொண்டார்; சசிகலாவின் உறவுகளை தன் தேவைக்கேற்ப அமைச்சர்கள், தளபதிகள், சிப்பாய்களாகப் பயன்படுத்திக்கொண்டார்.

ஆனால், நடராஜனை மட்டும் நடராசன்ஆட்டத்துக்குள்ளேயே சேர்த்துக்கொள்ளவில்லை. அந்தக் காலகட்டம் முழுவதும் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தார்.

நடராசனும் விடாமல் ஜெயலலிதாவை மிரட்டிக்கொண்டே இருந்தார். தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு துவங்கிய முதல் நாள், இரவு தஞ்சை அருகே உள்ள தனது சொந்த ஊரான விளாருக்கு வந்துவிட்டார் நடராசன்.

தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை எல்லாம் அங்கு வரவழைத்துச் சந்தித்தார். செய்தித்துறை இணை இயக்குநர் சம்சுதின், விளார் கிராமத்துக்கு இரவில் சென்று நடராசனைச் சந்தித்தார்.

மாநாட்டின் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றன. அந்த மாநாட்டில் நடைபெற்ற ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி அதுதான்.

ஆனால், 5 நாள்களில் ஒரு நாள்கூட அந்தப் பக்கமே போகவில்லை ஜெயலலிதா. அதைத் தெரிந்துகொண்ட நடராசன் 5-வது நாள் காலையில் பந்தாவாக அங்கு போனார்.

தஞ்சைப் பல்கலைக் துணைவேந்தர் அவ்வை நடராசனுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண வி.ஐ.பி கேலரி வழியாக நுழைய முயன்ற நடராசனை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.

அதற்கு அசைந்து கொடுக்காத நடராசன், “நான் பத்திரிகைக்காரனாக வந்துள்ளேன்” என்றார். நடராசனுக்குச் சளைக்காத போலீஸ், “பி.ஆர்.ஓ அலுவலகத்தில் இருந்து கொடுத்த பாஸ் இருக்கிறதா?” எனக் கேட்டு, அவரைத் திருப்பி அனுப்பினார்கள்.

அதன்பிறகு பொதுமக்கள் செல்லும் வழியில் சென்று மாநாட்டைப் பார்வையிட்டார் நடராசன். இப்படித் தொடர்ந்து, தான் அவமானப்படுத்தப்படுவதை உணர்ந்து நொந்துகொண்ட நடராசன், தனக்கு நெருக்கமான ஒருவரிடம், “இந்தம்மா என்னைப் போய் ஏன் போட்டியா நினைக்குது? உண்மையில் நான் அந்த அம்மாவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன்.

சுப்பிரமணியன் சுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி என இருவரையும் என் கைக்குள் வைத்திருந்தேன். அதைப் புரிந்துகொள்ளாமல், ‘நான் அவர்களோடு சேர்ந்து இந்த அம்மாவுக்கு எதிராக சதி செய்கிறேன்’ என்று நினைக்கிறது. என் பெயர் வேண்டுமானால் நடராசனாக இருக்கலாம்… ஆனால், நான் உண்மையில் யாரையும் அழிக்கும் சிவன் இல்லை. படைக்கும் பிரம்மா. காக்கும் விஷ்ணு. அதை இந்த அம்மா மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்போல…” என்று பொங்கித் தள்ளினார்.

சசிகலாவுக்கு சம அதிகாரம் கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவின் குடும்பம்தான், தன் குடும்பம் என்று அறிவிக்கும் காரியம் ஒன்றையும் செய்தார். தமிழகம் என்றென்றைக்கும் மறக்காது அந்தக் காரியத்தை!

கதை தொடரும்…

ஜெயக்குமார் Vs சசிகலா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 48

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.