விமானத்தில் பாலியல் தொல்லை: கண்ணீருடன் புகார் செய்த பிரபல நடிகை!! (வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு)

0
1081

விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகையின் வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17).

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் சாயிராவின் பின் இருக்கையில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். அவர், தனக்கு முன் உள்ள இருக்கையில் இருந்த சாயிராவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

முதலில் சாயிராவின் இருக்கையில் உள்ள கைப்பிடி மீது அவர் தனது காலை வைத்தார்.

அதற்கு சாயிரா எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர், “எனக்கு கால் வலிக்கிறது. அதனால்தான் காலை வைத்திருக்கிறேன்” என்று கூறி சமாளித்தார். சாயிராவும் அதை உண்மை என நம்பி விட்டார்.

201712110039284566_1_slhvflg6._L_styvpfஅவருக்கு தூக்கம் வந்தது. அரைகுறை தூக்கத்தில் இருந்தபோது, அவரது கழுத்து, தோள், பின்புறம் என ஒவ்வொன்றின் மீதும் அவர் காலை வைத்து தடவி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் அவரது சில்மிஷங்களை பொறுக்க முடியாமல் போன சாயிரா, அதை தனது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்தார்.

ஆனால் அப்போது அரைகுறை வெளிச்சம் என்பதால் நேர்த்தியாக படம் பிடிக்க முடியவில்லை. அரைகுறையாகத்தான் படம் எடுக்க முடிந்தது.

அந்த விமானம் மும்பையில் தரை இறங்கும் வரை சாயிராவுக்கு இவ்வளவு நேர்ந்தும் விமான ஊழியர்கள் யாரும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து போனார்.

இது தொடர்பாக அவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் அவர் தனக்கு விமான பயணத்தின்போது நேர்ந்த கதியை மிகுந்த வேதனையுடன் விவரித்தார். அப்போது அவர் பல நேரம் மனம் உடைந்து போனார்.

“இது ஒரு பயங்கரமான அனுபவம், இப்படிப்பட்ட தருணங்களில் நாம் நமக்கு நாமேதான் உதவிக்கொள்ள வேண்டும். யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.

1512886507-5058“இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பீர்கள்? இப்படி உணர்கிற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. இது பயங்கரமானது” என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், நடிகை சாயிரா வாசிமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இதுபற்றி அந்த நிறுவனம் விளக்கம் அளிக்கையில், “இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம். இப்படிப்பட்ட நடத்தையை சகித்துக்கொள்ள முடியாது” என கூறியது.

இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத அந்த விமான பயணி மீது மும்பை சாஹர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (மானபங்கம்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தனது மாநிலத்தை சேர்ந்த நடிகை சாயிரா வாசிம், விமான பயணத்தின்போது பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெண்களுக்கு எதிரான தொல்லை, குற்றம் போன்றவற்றில் விரைவாகவும், திறம்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மகள்களுக்கு நான் தாய் என்ற வகையில் சாயிராவுக்கு நடந்திருப்பது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி உள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, “சம்பந்தப்பட்ட பயணியை விஸ்டாரா விமான நிறுவனம், போலீசுக்கு அடையாளம் காட்ட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலம் கோர்ஹேயும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பயணி மீது வழக்கு தொடர்வதுடன், தனது நடத்தைக்காக அவரை மன்னிப்பு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

நடிகை சாயிரா வாசிமுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை போலீசார் கைது செய்வதற்கு உதவாதது குறித்து ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மராட்டிய போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அப்படி அறிக்கை அளிக்க தவறினால், தேசிய மகளிர் ஆணைய சட்டம், 1990-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசும் இதில் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சாயிரா வாசிமுக்கு நடந்துள்ள இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.