த.தே.கூ பங்காளிக் கட்சிகளிடையே முறுகல்: ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்கிறார் சம்பந்தன்-(வீடியோ)

0
235

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நீடிக்கின்றது.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் இன்று தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க முயற்சி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

மக்களின் ஆணைக்கு புறம்பாக தமிழரசுக் கட்சி செயற்படுவதாகத் தெரிவித்து வௌியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட சில தரப்பினருடன் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தமது கட்சியின் நிலைப்பாட்டில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சட்டத்தணி ஶ்ரீ காந்தா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்குச் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ஶ்ரீ காந்தா, வீ. ஆனந்த சங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை மற்றுமொரு பங்காளிக் கட்சியான புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கூட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக அவர் பதிலளித்தார்.

ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் துவிச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்திலும் இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.