“சாபத்தில் இருந்து நீங்கியது மைசூரு மன்னர் குடும்பம்: வாரிசு பிறந்தது; மக்கள் மகிழ்ச்சி”

0
374

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மைசூரு அரண்மனையின் வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மனைவியும் பட்டத்து இளவரசியுமான திரிஷிகாகுமாரிதேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, மைசூரு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மைசூரு அரண்மனை வாரிசு பிறந்ததற்கான கொண்டாட்டங்களைத் தொடங்கியது.

400 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான திருமலைராஜாவின் குடும்பத்தை நிர்க்கதியாக்கியதற்காக மைசூரு உடையார் குடும்பத்துக்கு வாரிசு இல்லாமல் போக வேண்டும் என திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா அளித்த சாபத்திலிருந்து தற்போது மைசூரு மன்னர் குடும்பம் விமோசனம் பெற்றுள்ளதாக  பொதுமக்கள் நம்புகின்றனர்.

மைசூரு பகுதியை ஆண்ட உடையார் மன்னர் குடும்பத்து வாரிசான பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரின் மனைவியும், பட்டத்து இளவரசியுமான திரிஷிகாகுமாரிதேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 இந்தத் தகவல் மைசூரு உடையார் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமல்லாது, மைசூரு, மண்டியா, சாமராஜ்நகர் மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மன்னர் வம்சம்
மைசூரு ராஜ்ஜியத்தை 1399 முதல் 1950-ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள் உடையார் மன்னர் குடும்பத்தினர்.

1950-ஆம் ஆண்டில் இந்தியா குடியரசாக மாறிய பிறகு மன்னர் பட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பட்டங்களும் துடைத்தெறியப்பட்டன.

சமுதாயத்தில் எவ்வித ஆளுகையும் இல்லாவிட்டாலும், மன்னர் குடும்பம் என்றழைக்கப்படும் உடையார் குடும்பத்துக்கு மைசூரு பகுதி மக்களிடையே இன்னும் மதிப்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்கிறது.

உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னராக விளங்கிய சாமராஜ உடையாரின் மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பட்டத்து இளவரசராக இருந்து வந்தார்.

2013-ஆம் ஆண்டு இவர் மாரடைப்பால் மரணமடைந்ததும், அவரது தூரத்து உறவினரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் 2015-ஆம் ஆண்டு உடையார் மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், துங்கர்பூர் மன்னர் குடும்பத்து வாரிசான திரிஷிகாகுமாரிதேவியை 2016 ஜூன் 27-ஆம் தேதி மணந்து கொண்டார்.

சாபத்தின் கறை
1399-ஆம் ஆண்டு முதல் விஜயநகர பேரரசின் ஆட்சிப் பகுதியான மைசூரு பகுதியை ஆண்டு வந்த உடையார் வம்சாவளி மன்னர்கள், காலப்போக்கில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்தனர்.

1610-ஆம் ஆண்டில் ஆட்சி செய்துவந்த முதலாம் ராஜா உடையார், விஜயநகர பேரரசின் அப்போதைய பிரதிநிதியான திருமலைராஜாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டையை முற்றுகையிட்டு வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, திருமலைராஜா தலக்காடு எனும் ஊருக்கு தனது மனைவிகளுடன் குடிபெயர்ந்து விடுகிறார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த திருமலைராஜா இறந்துவிடுகிறார்.

ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் மூலஸ்தானத்தில் இருந்த பெண் கடவுளான ரங்கநாயகியின் தீவிர பக்தையாக இருந்தார் திருமலைராஜாவின் இரண்டாவது மனைவி அலமேலம்மா.

தலக்காடுவுக்குச் செல்லும்போது ரங்கநாயகிக்குச் சூட்டிவந்த வைரம், தங்கம், முத்து நகைகளை அலமேலம்மா கொண்டு சென்றிருந்தார். இவற்றை ராஜா உடையார் கேட்ட போது, அவற்றை தர அலமேலம்மா மறுத்துவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து, 1612-ஆம் ஆண்டில் ராஜா உடையாரின் உத்தரவின்பேரில் தலக்காடு அருகே மாலங்கி கிராமத்தில் தங்கியிருந்த அலமேலம்மாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக நகைகள் பறித்து வரப்பட்டன.

இதனால், வேதனையடைந்த அலமேலம்மா, ராஜா உடையாருக்கு சாபமிட்டு, தலக்காடு மணல் காடாகட்டும், மாலங்கி சுழல்காடாகட்டும், மைசூரு மன்னர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாதாகட்டும் என்று உரக்கக் கூறிவிட்டு, தலக்காடுவில் பாய்ந்தோடிய காவிரி ஆற்றின் சுழலில் எஞ்சியுள்ள நகைகளுடன் குதித்துவிடுகிறார்.

அன்று முதல் உடையார் மன்னர் குடும்பத்துக்கு நேரடி வாரிசுகள் இல்லாத நிலை நீடித்துவந்தது.

அலமேலம்மாவின் இந்த சாபம் உடையார் மன்னர் குடும்பத்தை ஆட்கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது.

சாபம்: இதுநாள் வரையில் சாபம் நிலைத்திருந்த நிலையில், யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரின் மனைவி திரிஷிகாகுமாரிதேவிக்கு குழந்தை பிறந்ததிருப்பதன் மூலம் சாபம் நீங்கியதாகக் கருதப்படுகிறது. இதனால் மைசூரு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே, அலமேலம்மாவின் சாபம் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்து விட்டது என பொதுமக்கள் நம்பி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.