என்ர பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்!! பத்மாவதியின் மரணம் கொலையா? தற்கொலையா?

0
1391

பத்மாவதியின் மரணம்
கொலையா? தற்கொலையா?
உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும்!

‘என்ர பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்’ பெட்டி மூடப்படும்போது பெற்ற தாய் இப்படி அழுதாள். அது முன்னாள் ஊடகப் பணியாளர் பத்மாவதியின் தாய்தான்.

பொன்னாலையைச் சேர்ந்த பத்மாவதி அமைதியான பெண் என்றுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எனது பார்வையிலும் அவள் அப்படியே.

ஐந்து வருடங்களாக உதயன் பத்திரிகை அலுவலகத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் அங்கிருந்து விலகி காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்திலும் அதே பிரிவில் சில மாதங்கள் பணியாற்றினார்.

இவைகளுக்கு முன்னர் தனியார் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்பித்தார். வீட்டுச் சூழல் அவரை உழைக்கவேண்டிய நிற்பந்தத்திற்குள் தள்ளியது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றது. வேலணை சிற்பனை என்ற இடத்தைச் சேர்ந்த யோகேந்திரா என்பவரை பேசித் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பின்னர் கணவன் வீட்டிலேயே வசித்தார். தற்போது இரு மாதக் கர்ப்பவதியாக இருந்தார் எனவும் கூறப்படுகின்றது.

திருமண வாழ்வில் கணவன் – மனைவிக்குள் நீடித்த ஒற்றுமை இருந்திருக்கவில்லை. சச்சரவுகள் தலைதூக்கின.

முரண்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றன. கணவன் நேரம் தாமதித்து வீட்டிற்கு வருவதை அவள் கண்டித்தாள் எனவும் தெரியவருகின்றது.

இந்நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை (30) அதிகாலை அவள் கிணற்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டாள்.

அன்று அதிகாலை 4.15 மணியளவில் அவளது கணவன் பொன்னாலையில் உள்ள அவளின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இயற்கை மரணங்களை விட அகால மரணங்களில் பொதுவாகவே சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல்தான் பத்மாவதியில் மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன என அவளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மரணத்திற்கு முதல்நாள் மாலை 6 மணிக்கு பொன்னாலையில் உள்ள தங்களுடன் தொலைபேசியில் உரையாடினாள் என அவளின் சகோதரி கூறினார்.

தன்னுடனும் தாயுடனும் உரையாடினார் எனவும் எப்போதும் உரையாடுவது போலவே அது அமைந்திருந்தது எனவும் சகோதரி தெரிவித்தார்.

‘பிரச்சினைகள் இருந்தது போல அவளின் கதையில் எதுவும் தெரியவில்லை. அப்படி ஏதும் என்றால் அவள் விட்டுவிட்டு வந்திருப்பாள்’ எனவும் சகோதரி கூறினார்.

பத்மாவின் சடலத்தில் இரு கைகளிலும் உள்ள காயங்களே அவரது மரணத்தில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.

இரு கைகளிலும் மணிக்கட்டுப் பகுதியில் கூரிய ஆயுத்தால் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. தலையிலும் சிறிய காயம் காணப்பட்டது என அவரின் சகோதரி கூறினார்.

‘பத்மாதான் தனது கையில் பிளேற்றால் வெட்டியிருக்கலாம்’ என கணவனின் உறவினர்கள் கூறுகின்றனர். மரண விசாரணையிலும் அவர்கள் இதையே கூறினர்.

ஆனால், ‘எனது தங்கை அப்படியாவள் அல்ல. வருத்தம் என்றால் பனடோல் போடுவதற்கே அவளுக்கு பயம். இப்படியெல்லாம் அவள் கையில் வெட்டியிருக்கவே மாட்டாள்’ என அவளின் இளைய சகோதரி கூறினார்.

பத்மாவுடன் படித்தவர்களும் பழகியவர்களும் இதையே கூறுகின்றனர். ‘அவள் மென்மையான சுபாவம் கொண்டவள் இப்படிச் செய்திருக்கமாட்டாள்’ எனக் கூறினர்.

இதனிடையே கணவனால் தான் துன்பங்களை அனுபவிப்பதாக பத்மா கொழும்பில் உள்ள தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கின்றார் எனவும் கதைகள் கூறப்படுகின்றன.

‘இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு 11 மணிக்குப் படுத்தவளை பின்னர் காணவில்லை. தேடியபோது கிணற்றில் சடலமாகக் கண்டுபிடித்தோம்’ என பத்மாவின் கணவன் கூறுகின்றார்.

அவர்களின் வீட்டில் ஒரு கிணறு உண்டு. ஆனால், வீட்டுக்கு அடுத்ததாக இருக்கும் தோட்டக் காணியில் உள்ள கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் வீழ்ந்தவர்கள் வயிறு முட்ட தண்ணீர் குடித்திருப்பார்கள். ஆனால், அவளது வயிறு ஒட்டியதாகவே இருந்தது என கிணற்றில் இருந்து வெளியே தூக்கிய சடலத்தைப் பார்வையிட்ட அவளின் உறவினர்கள் கூறினர்.

மரணம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸ் குழுக்கள் சென்று விசாரணைகளை முன்னெடுத்தன. ஊர்காவற்றுறை பதில் நீதிவான் இ.சபேசன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வைiயிட்டார்.

கணவனின் வீட்டிலும் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். வீட்டிற்கு பின்புறம் மதுபானப் போத்தல் ஒன்று இருந்தமையும் பத்மாவதியின் உறவினரால் பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டது.

மரணத்தில் தமக்கு சந்தேகம் இருக்கின்றது என பத்மாவின் உறவினர்கள் தெரிவித்ததால், சடலத்தைப் புதைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கும் கட்டளையிட்டார்.

இந்நிலையில், மரண விசாரணைகள், பிரேத பரிசோதனைகளின் முடிவில் சடலம் கணவனிடம் கையளிக்கப்பட்டது. எங்கே இறுதிக் கிரியைகளை நடத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் இழுபறி இடம்பெற்றது.

எனினும், பின்னர் பத்மாவின் சொந்த ஊராக பொன்னாலைக்குக் கொண்டுசெல்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்து சமய முறைப்படி சடலத்தை எரியூட்ட வேண்டும் எனவும் நீதிவானிடம் திரும்பச் சென்று அதற்கான அனுமதியைப் பெற்று வருவது எனவும் கணவனின் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதால் புதைக்கவேண்டும் என பத்மாவின் உறவினர்கள் விடாப்பிடியாக நின்றனர்.

12549-1-865abe897dcc75154826791f3d7be48b1கறுப்புப் பொலித்தீனால் நன்கு சுற்றப்பட்ட பின்னரே சடலம் புதைக்கப்பட்டது. சடலத்தைப் பொலித்தீனால் சுற்றியபோது அவளின் உறவினர்கள் கதறி அழுதனர்.

‘வடிவா சுற்றுங்கோ… திரும்ப எடுக்கவேண்டி வரும்…. நீங்கள் தப்பமாட்டியள்’ என பத்மாவின் உறவினர் ஒருவர் கதறியதையும் அங்கு அவதானிக்க முடிந்தது.

வீட்டில் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து பெட்டி மூடப்பட்டபோது ‘என்ரை பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்’ என பத்மாவித் தாயார் கதறியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

எது எப்படியோ, இரு உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. நேர்மையான விசாரணைகள் மூலம் இந்த மரணங்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளின்போது பிரேத பரிசோதனை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதன் பின்னரே இது கொலையா தற்கொலையா என்ற உண்மை தெரியவரும்.

இதேவேளை, தீவகத்தில் மட்டும் பெண்களுக்கு அடிக்கடி ஏன் இப்படியான அவலநிலை ஏற்படுகின்றது என்பதும் ஆராயப்படவேண்டும்.

(ந.பிருந்தாபன்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.