பொஸ்னிய போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன்றத்தில் விஷமருந்தி தற்கொலை- (வீடியோ)

0
1202

 

பொஸ்னிய போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன்றத்தில் விஷமருந்தி தற்கொலை

குரேஷிய நாட்டு போர்க்குற்றவாளியான யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த ஸ்லோபோடன் பிரல்ஜாக் (Slobodan Praljak) என்பவர் நேற்று (29) நீதிமன்றத்திலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

1992 – 1995 ஆண்டுகளில் நடந்த பொஸ்னியா போரின்போது பொஸ்னியா முஸ்லிம்களை வெளியேற்றுவது, நெறிமுறைகளை மீறி அவர்களைப் படுகொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த முன்னாள் இராணுவத் தளபதி ஸ்லோபோடன் பிரல்ஜாக் மீது வழக்குப் பதிவு செய்து ஐ.நா. வின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

நெதர்லாந்தின் தி ஹேக் (THE HAGUE) நகரில் உள்ள ஐ.நா. வின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ((U.N.’s International Criminal Tribunal) இறுதி விசாரணை முடிவடைந்து ஸ்லோபோடனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட போது, யாரும் எதிர்பாராதவிதமாக, தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல எனவும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பதாகவும் தெரிவித்து விட்டு, சிறு போத்தலில் வைத்திருந்த விஷத்தை ஸ்லோபோடன் அருந்தினார்.

சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த நாற்காலியில் மயங்கி அமர்ந்துள்ளார்.

அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ஹேக் நகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.