கோத்தாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை

0
571

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மீது, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைகால தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 6 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

போலீஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு பிணை உத்தரவின்றி தடுத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஹம்பாந்தோட்டை பகுதியில் டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவில் போலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அதன் தலைவர் நீதிபதி ஏ.பி.பீ.தெஹிதெனிய மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இடைகால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.