மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அராஜகம்

0
317

திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறையை மாணவிகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

திருவள்ளூர் ம.பொ.சி.நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ளது. 1000–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இங்கு ஆசிரியர், ஆசிரியைகள் பயன்படுத்த 10 கழிவறைகள் உள்ளன. அவற்றை தனியார் சுகாதார பணியாளர்கள் மூலமாக சுத்தம் செய்வதற்கு அரசு ரூ.2,500 வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24–ந் தேதி முதல் ஒவ்வொரு வகுப்பிலும் தலைவராகவும், துணைத்தலைவராகவும் உள்ள மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிகள் தினந்தோறும் பள்ளியில் உள்ள கழிவறைகளை அழுதுகொண்டே, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்து வந்தனர். இது பற்றிய படங்கள் வாட்ஸ்–அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும், மாணவிகள் மிகவும் மனவேதனை அடைந்து, பள்ளியில் நடக்கிற அராஜகம் பற்றி அவர்கள் பெற்றோரிடம் புகார் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் நேற்று காலை அந்த பள்ளிக்கு வந்தார்.

அவர் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கழிவறைகளை சுத்தம் செய்ய கூறியது யார் என்பது குறித்து மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:–

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அடிப்படையில் தலைமை ஆசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.