ஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா

0
822

வாழ்க்கைதான் எத்தனை திடீர் திருப்பங்களை உடையது? சில வாரங்கள் முன்பு ஜிம்பாப்வேயின் துணை அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பிறகு தலைமறைவான எமர்சன் முனங்காக்வா இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

1980ல் ஜிம்பாப்வே விடுதலை பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்த 93 வயது ராபர்ட் முகாபே, இம்மாதத் தொடக்கத்தில் முனங்காக்வேவை துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கினார்.

தமக்கு அடுத்தபடியாக தமது இரண்டாவது மனைவி கிரேஸ் ஆட்சியையும் ஆளும் ஸானு-பி.எஃப். கட்சியையும் கைப்பற்ற வழி செய்வதற்காகவே அவர் இப்படி செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது.

அதிரடி அரசியல் மாற்றங்கள்

இந்நிலையில் ஜிம்பாப்வே ராணுவம் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜிம்பாப்வே ஒளிபரப்புக் கழகம் என்ற அரசுத் தொலைக் காட்சி நிறுவனத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம். முகாபேவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆனால், ராணுவம் அதிரடியாகச் செயல்படாமல், சுமுகமான அதிகார மாற்றத்துக்காக ராபர்ட் முகாபேயுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அறிவித்தது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றிலும் முகாபே பங்கேற்றார்.

பதவி நீக்கப்பட்டதை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறி ரகசியமான இடத்தில் இருந்த முனங்காக்வா, தம்மைக் கொல்ல சதி நடந்ததாக குற்றம்சாட்டினார்.

பல தரப்பினரும் முகாபேவை பதவி விலகும்படி கோரினர். ஆனால், முகாபே அவற்றை நிராகரித்தார்.

_98893283_ffebd0b7-e0e4-4440-b3dc-623a7b278a3e93 வயதாகும் ராபர்ட் முகாபே தமக்குப் பிறகு ஆட்சியையும், தமது கட்சியியையும் தமது மனைவி கிரேஸுக்கு மாற்றித்தரத் திட்டமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றம் தொடக்கிய நிலையில் தாமாகவே பதவி விலகுவதாக முகாபே அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்திலும், வீதியிலும் கொண்டாட்டங்கள் நடந்தன.

நாடு திரும்பினார்

தென்னாப்பிரிக்காவில் ரகசிய இடத்தில் இருந்த முனங்காக்வா புதன்கிழமை நாடு திரும்பினார்.

பல ஆண்டுகளாக முகாபே ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவரான முனங்காக்வா, ‘ஊழல் கலாசாரத்துக்கு’ முடிவு கட்டவேண்டும் என்று ஓர் எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

முகாபேவின் நீண்டாகல ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முனங்காக்வா காரணமாக இருந்துள்ளபோதிலும், அந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசமான கொடுமைகள் பலவற்றில் முனங்காக்வா-வுக்கும் ஈடுபாடு உள்ளது என்று பலர் கருத்துக் கூறுகின்றனர்.

1980ல் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் உளவு வேலைக்குப் பொறுப்பானவராக இருந்தார் முனங்காக்வா.

அந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், அந்தக் கொலைகளில் தமக்குப் பங்கு இல்லை என்றும், ராணுவமே அதற்கெல்லாம் பொறுப்பு என்றும் கூறிவந்தார் முனங்காக்வா.

பதவி ஏற்பு

முனங்காக்வாவின் பதவியேற்பு விழா தலைநகர் ஹராரேவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நடந்தது.

60 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. பாப் பாடகர் ஜா பிரேயரின் நிகழ்ச்சி அங்கு நடந்தது.

பங்கேற்ற மக்கள் நடனமாடத் தொடங்கினர். நிகழ்ச்சியே ஒரு கொண்டாட்டம் போல இருந்தது. எதிர்க் கட்சித் தலைவர்கள் ஸ்வான்கிரை, ஜாய்ஸ் முஜுரு மற்றும் பல ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதி லூக் மலாபா அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். “ஜிம்பாப்வேவுக்கு உண்மையாக இருக்கவும்”, “ஜிம்பாப்வே மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்” உறுதிகூறி பதவி ஏற்றுக்கொண்டார் முனங்காக்வா.

முகாபே பங்கேற்றாரா?

ராபர்ட் முகாபே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ராபர்ட் முகாபே கடிதம் கொடுத்தே பதவி விலகி இருந்தாலும், இது சாதாரணமாக நடந்த அதிகார மாற்றமல்ல.

ராணுவத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் பதவி விலக நேர்ந்தது என்று கூறுகிறார் பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ ஹார்டிங்.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதி முகாபேவுக்கு வழங்கப்பட்டதாக வியாழக்கிழமை வெளியான பல செய்திகள் கூறுகின்றன.

93 வயதாகும் முகாபேவுக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.