சுமந்திரனின் சவால் – முறியடிப்பது யார்? – கருணாகரன் (கட்டுரை)

0
521

‘புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவோ இடைக்கால அறிக்கை பற்றியோ யாராவது விவாதிக்க முன்வரலாம். முதலமைச்சரோ (விக்கினேஸ்வரனோ) அல்லது வேறு யாராகினும் கட வரலாம்.

யாரோடும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். ‘தமிழ் மக்களுடைய அபிலாiஷகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் விட்டுக் கொடுக்கவில்லை. சமஷ்டியை முன்மொழிந்தவர்கள் சிங்களவர்களே.

கண்டிச் சிங்களவர்களே சமஷ்டிக் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர்கள். இப்பொழுது சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வேறு விதமாக உணரவைக்கப்பட்டுள்ளது.

‘ஆகவே நாம் சொற்களில் மட்டும் நின்று விவாதங்களை நடத்திக் கொண்டிருக்காமல், அதிகாரத்தை எப்படிப் பெறுவது? எப்படி அதைப் பயன்படுத்துவது?

என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் நாம் எமது தனித்துவத்தோடு அதிகாரத்தைப் பிரயோகித்து நிர்வாகத்தைச் செழுமைப்படுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.

புதிய உலகப் போக்கினை விளங்கிக் கொள்ள வேண்டும்…’ என்ற விளக்கத்தை அளித்து, இடைக்கால அறிக்கை தொடர்பான பகிரங்க விவாதத்துக்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளரும் வழிநடத்தற் குழு உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

சுமந்திரனின் இந்த அழைப்பும் அறிவிப்பும் நேரடியாகவே மூன்று முக்கிய தமிழ்த்தலைவர்களைக் குறி வைத்துள்ளது.

ஒன்று, வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

இரண்டாவது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

மூன்றாவது கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

கூடவே இடைக்கால அறிக்கையை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள், ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பிற கட்சியினர் போன்றோரையும் சுமந்திரன் இந்த அழைப்பிற்குள்ளும் அறிவிப்பிற்குள்ளும் அடக்குகிறார்.

தனியே இருந்து முணுமுணுத்துக் கொண்டிருக்காமல், சுய கண்டனங்களையும் குற்றப்படுத்தல்களையும் செய்து கொண்டிருக்காமல், பகிரங்க வெளியில் வந்து விவாதியுங்கள். மக்களுக்கு உண்மை விளங்கட்டும் என்பது சுமந்திரனின் நிலைப்பாடாகும்.

இதை அவர் எந்த நோக்கில் செய்கிறார் என்ற வியாக்கியானங்களுக்கும் இடமுண்டு. அதைக் குறித்துப் பின்னே பார்க்கலாம்.

ஆனால், சுமந்திரன் இலக்கு வைத்து அழைக்கும் இந்த மூன்று பேரும் இடைக்கால அறிக்கையின் குறைபாடுகள் தொடர்பாக நேரடியாகவே சுமந்திரனைக் குற்றம் சாட்டியிருந்தவர்கள்.

இவர்களுடன் இடைக்கால அறிக்கையைக் குறித்து தமிழ்ப் பரப்பில் முகம் சுழிப்போரும் சுமந்திரனின் எதிராளிகளே.

அப்படித்தான் சுமந்திரன் இவர்களை நோக்குகிறார். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிராகச் செயற்படுகின்றவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று.

எனவேதான், அவர் ஒரு பகிரங்க விவாதக் களத்தைத் திறப்பதற்காகச் சவால் விடுகிறார். இதன்மூலமாகத் தன்னை நோக்கிய கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் இல்லாமற் செய்வது அல்லது தணிப்பது.

இரண்டாவது, தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் அரசியலமைப்பு உருவாக்கம், அதற்கான இடைக்கால அறிக்கை போன்றவற்றின் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவது, பகிரங்கப்படுத்துவது.

மூன்றாவது, தன்னை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ள கண்டனங்களை விலக்கித் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வது.

நான்காவது, தன்னை நோக்கிய விமர்னங்களைப் பகிரங்கமாகப் பொது வெளியில் எதிர்கொள்ள முற்படும் துணிச்சலின் மூலமாகத் தன்னை மேலும் வளர்த்துக் கொள்வது. கனவானாக்கிக் கொள்வது.

ஐந்தாவது, வரவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி, இடைக்கால அறிக்கையில் கூறப்படும் விடயங்களை வைத்து எதிர்த்தரப்புகள் செய்யக்கூடிய எதிர்மறையான விடயங்களை முறியடிப்பது.

ஆகவே, இந்த வகையில் சுமந்திரன் தான்சார்ந்த கட்சிக்கான போர்வீரனாக, களமாடியாக, தளபதியாக தன்னை முன்னிறுத்தியுள்ளார் சுமந்திரன்.

இது நிச்சயமாகச் சுமந்திரனை மேலும் முன்னகர்த்தும் ஒரு நடவடிக்கையே. கூடவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு ஏற்பாடுமாகும்.

குறுக்கு வழியில் அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் வந்தவர் சுமந்திரன் என்ற அபிப்பிராயமும் குற்றச்சாட்டும் கூட்டமைப்பின் பங்காளிகளினால் வைக்கப்படுவதுண்டு.

தேசியப் பட்டியல் வழங்கிய வாய்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகிய சுமந்திரன், சடுதியாகவே கூட்டமைப்பின் அதிகாரமிக்க சக்தியானர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் கடந்து அவர் உயரத்துக்குச் சென்றார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலான விடுதலைப்போராட்ட அரசியற் பங்களிப்பையும் அனுபவத்தையும் கொண்ட கட்சிகளின் தலைவர்களையும் விடத் தீர்மானமெடுக்கும் அதிகாரத்துக்கு உயர்ந்த சுமந்திரனின் வளர்ச்சியை பங்காளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு திடீரென உயரத்துக்குச் சென்ற சுமந்திரன், ஏனையவர்களுடன் இணங்கியும் இணைந்தும் செல்வதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முனைகிறார் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது.

சுமந்திரனுக்கும் ஏனையவர்களுக்குமிடையிலான மோதல்களின் அடிப்படை இதுவே. இதைச் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.

ஆனால், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனின் செல்லப்பிள்ளையாக மாறிய சுமந்திரன், கொழும்பின் அரசியல் வட்டாரங்களிலும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களிலும் செல்வாக்கைப் பெற்றார்.

அத்துடன் சட்ட வல்லுநராக இருந்த காரணத்தினால் கூட்டமைப்பின் அரசியல் விவகாரங்களையும் சுமந்திரனே கையாளும் வாய்ப்புக் கிட்டியது. இதெல்லாம் சுமந்திரனுக்குக் கிடைத்த அனுகூலங்கள்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமெடுக்கும் சக்தியாக அவர் மாறியுள்ளார். பல விடயங்களையும் அவரே கையாள்கிறார்.

ஆகவே, அதற்கான பொறுப்பை ஏற்று இடைக்கால அறிக்கையைக் குறித்த பகிரங்க விவாதத்துக்கு அவர் எல்லோரையும் அழைக்கிறார்.

‘இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுடைய அபிலாiஷகளைப் பிரதிபலிக்கவில்லை.

அது தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையையும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தையும் பலவீனப்படுத்தியுள்ளது.

சிங்கள மேலாதிக்க மனோநிலைக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த நலனையே முதன்மைப்படுத்தியுள்ளது.

இலங்கையின் யதார்த்தத்துக்கும் பல்லின நாடு என்ற அடிப்படைக்கும் எதிராக உள்ளது. இப்படியானதொரு அரசியலமைப்புத் தேவையில்லை. இதை நியாயப்படுத்தக் கூடாது.

அரசாங்கத்திடம் சரணடைய வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் அது தேவையில்லை. அரசாங்கத்திடம் எதற்கும் கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது.

ஆனால், இதையெல்லாம் புறக்கணித்து விட்டு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எதற்காக அரசாங்கத்திடம் சரணடைந்திருக்க வேண்டும்?’ என்று எதிர்த்தரப்பினர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் உண்டு என்பது சுமந்திரனின் நம்பிக்கை.

இதை அவர் சில ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழரசுக் கட்சியின் கூட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒன்று கூடலின்போதும் இடைக்கால அறிக்கை, தாம் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றி விளக்கி வருகிறார்.

‘இந்த அறிக்கையைச் சரியாக வாசிக்காமலே பலரும் கருத்துகளைக் கூறுகிறார்கள்’ என்பது சுமந்திரனின் குற்றச்சாட்டு.

‘பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையைப் பற்றிச் சும்மா காலாட்டிக் கொண்டு, அபிப்பிராயம் சொல்வது கடுப்பையே ஏற்படுத்தும்’ என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிக் கவலைப்பட்டிருக்கிறார்.

எல்லாவற்றையும் எழுந்தமானமாகவே எதிர்த்துப் பழகிய அரசியற்பாரம்பரியத்தில், ஆக்கபுர்மான முயற்சிகளுக்குப் பெறுமதியில்லை. பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பழி சொல்வதுமே பழக்கமாக உள்ளது. இதற்கு முடிவைக் காண வேணும். ஆகவேதான் நேருக்கு நேர் விவாதிப்போம் என்றிருக்கிறார் சுமந்திரன்.

பகிரங்க விவாதத்துக்கு விடப்பட்டுள்ள இந்தச் சவால் சுமந்திரனைப் பலப்படுத்தவே போகிறது.

ஏனெனில், இந்தச் சவாலை ஏற்று யாரும் சுமந்திரனுடன் வாதிடப்போவதில்லை. நிச்சயமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்த விவாதத்தில் ஈடுபட மாட்டார் என நம்பலாம்.

vikiவிக்கினேஸ்வரனுடைய அணுகுமுறையும் ஒழுக்கமும் அதுவல்ல. அவர் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னொரு தளத்தில் வைப்பார். அவ்வளவுதான்.

மிஞ்சியிருப்பவர்கள் சுரேசும் கஜேந்திரகுமாருமே. இவர்கள் இருவரும் சுமந்திரனுடன் நேருக்கு நேர் மோதும் நிலை இன்றில்லை.

அப்படி நேரடி மோதலுக்குப் போனால், சுமந்திரன் எழுப்புகின்ற – மாற்று வழியைக் குறித்த – கேள்விகளுக்கு சுரேஸிடமும் பதில் இல்லை. கஜேந்திரகுமாரிடமும் விளக்கமில்லை.

ஆனால், அப்படியான ஒரு களம் திறக்கப்படுமாக இருந்தால், அது தமிழ் அரசியலுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதாகவே அமையும். அரசியல் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளவும் இந்தத் தரப்புகளின் உள்ளடக்கம், செயன்முறைகள் போன்றவற்றை அறியவும் உதவும்.

மேற்குலகில் இத்தகைய ஒரு அரசியல் – அறிவியல் – ஜனநாயக ஒழுக்கமுண்டு. அங்கே எதிரெதிர்த்தரப்புகள் பொதுத்தளத்தில் விவாதங்களை நிகழ்த்தும்.

அப்படி நடக்கும் பொதுத்தள விவாதங்களில் பல உண்மைகளும் உள் விடயங்களும் வெளிப்படும். பல திறப்புகள் நிகழும்.

இது ஒரு பிரச்சினையைப் பற்றிப் பல தளங்களில் புரிந்து கொள்ள உதவும்;. அத்ததைய ஒரு மரபு நிச்சயமாக இலங்கைக்கு அவசியமானது.

இது தனியே தமிழ்த்தரப்புகளுக்குள் மட்டும் நிகழாமல், முழு இலங்கையையும் உள்ளடக்கி நடப்பது நல்லது.

சுமந்திரனின் அறைகூவல் கூடத் தனியே தமிழ்த்தரப்பை மட்டுமே – அவரை விமர்சிப்போரையும் எதிர்ப்போரையுமே குறி வைத்துள்ளது. இது அதைக் கடந்து பிற சமூகங்களை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.

சுமந்திரனின் பகிரங்க அழைப்பை நிராகரிப்போர், அல்லது அதை எதிர்கொள்வதற்குத் தயங்குவோர் தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான வலுவை இழந்தோராகவே கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் இது முக்கியமானதொரு அடையாளப்படுத்தலாக அமையப்போகிறது.

தமிழரசுக் கட்சி முன்மொழிந்து, பிடிவாதம் கொண்டு வந்த நிலைப்பாட்டினை எட்டுவதற்காக, அந்தக் கட்சி இன்று எடுத்திருக்கும் நிலைப்பாடு இவ்வாறான ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது.

தமிழர்களுடைய அரசியல் அபிலாiஷகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவற்றில் பெரும்பாலானவையும் தமிழரசுக் கட்சியின் விருப்பங்களாகவே இருந்தன.

இடையில் வௌவேறு தரப்புகள் இதை விட்டு வேறு தெரிவுகளைப் பற்றிச் சிந்தித்தபோதெல்லாம் – நடைமுறைசார்ந்த தெரிவுகளைப் பற்றிப் பேசிய போதெல்லாம் தமிழரசுக் கட்சியின் அரசியல் அதையெல்லாம் புறக்கணித்தது.

அத்துடன், அத்தகைய – மாற்றுப் பார்வைகளை முன்னிறுத்தியவர்களையும் தவறானவர்களாக – துரோக முத்திரையிட்டு ஒதுக்கியது.

இன்று நடைமுறை அனுபவங்கள் தமிழரசுக் கட்சிக்கு வேறான படிப்பினைகளையும் நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளன.

அதனால், அது இதுநாள் வரையில் கொண்டிருந்த அணுகுமுறை, நிலைப்பாட்டுறுதி போன்றவற்றில் நெகிழ்ச்சியைச் செய்ய வேண்டியதாயிற்று.

மற்றவர்களுடைய இடத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆனால், அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில் இன்னும் அதற்குள் சிக்கல்கள் உள்ளன.

இதுவே அதன் மீதான விமர்சனங்களாகும். இதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சியின் தளபதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உண்டாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் மேலும் படியிறங்கி வந்து சனங்களோடு நிற்க வேண்டும். அதற்குரிய சாத்தியங்கள் குறைவு.

ஆகவேதான் இது இன்னும் சனங்களிடம் சரியான முறையில் பகிரப்படவில்லை. அதற்கான களம் உருவாக்கப்படவும் இல்லை.

சுமந்திரன் தன்னுடைய எதிராளிகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பது மட்டும் போதுமென்றில்லை.

அரசியலில் எதிர்த்தரப்பைக் கையாள்வது, முறியடிப்பது, வெற்றி கொள்வது எல்லாம் அவசியம்தான்;. ஆனால், அதையும் விட முக்கியமானது சனங்களின் வாழ்க்கையும் அவர்களுக்கான அரசியலும் அதற்குரிய விளக்கங்களும் தெளிவும்.

ஆகவே ஊர்களில் விவாதக்களங்களைச் சுமந்திரன் திறக்கலாம். அது புதியதொரு அரசியலுக்கான வழிதிறப்பாக அமையட்டும்.

– கருணாகரன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.